உடம்பின்
ஒட்டுத் துணியும் நழுவுகின்ற
சுரணை ஏதுமின்றி
பசியில் புலம்பியபடி
தெருவோரம் புரண்டு கொண்டிருக்கிறாள்
உடல் முழுவதும்
புண்களைச் சுமந்த
மனநிலை தவறிய பெண்ணொருத்தி....!
சோகையால்
வீங்கிய முகத்திலும்
சின்னதாய் புன்னகைத் தேக்கி
வருவோர் போவோரிடம்
கையேந்தி நிற்கிறாள்
இனிப்புக் கடையொன்றின் வாசலில்
முதியவள் ஒருத்தி....!
வெறும் தண்ணீரைக் குடித்தே
பெருத்த வயிற்றுடன்
பெரியவள் ஒருத்தியின்
இடுப்பில் அமர்ந்து
அரை மயக்கத்திலேயே
அம்மா, அய்யா என்கிறது
ஒரு இளங்குருத்து....!
எண்ணெய் காணாத
பரட்டைத் தலையுடனும்
ஆங்காங்கு கிழிந்த
அழுக்குச் சட்டையுடனும்
பசியோடு திரிகிறார்கள்
பால் பணம் மாறாத
பச்சிளம் பிள்ளைகள்...!
இவர்களில்
யாருக்குமே தெரியவில்லை...
ஆயிரம் இலட்சம் கோடிகளிலும்
அள்ளி வீசப்படும் இலவசங்களிலும்
தம் வாழ்நாள் பசிக்குமான
பணமும் சேர்ந்து இருக்கிறதென்று....