Thursday, April 7, 2011

பசி இலவசம்....

உடம்பின்
ஒட்டுத் துணியும் நழுவுகின்ற
சுரணை ஏதுமின்றி
பசியில் புலம்பியபடி
தெருவோரம் புரண்டு கொண்டிருக்கிறாள்
உடல் முழுவதும்
புண்களைச் சுமந்த
மனநிலை தவறிய பெண்ணொருத்தி....!


சோகையால்
வீங்கிய முகத்திலும்
சின்னதாய் புன்னகைத்  தேக்கி
வருவோர் போவோரிடம்
கையேந்தி நிற்கிறாள்
இனிப்புக் கடையொன்றின் வாசலில்
முதியவள் ஒருத்தி....!

வெறும் தண்ணீரைக் குடித்தே
பெருத்த வயிற்றுடன்
பெரியவள் ஒருத்தியின்
இடுப்பில் அமர்ந்து
அரை மயக்கத்திலேயே
அம்மா, அய்யா என்கிறது
ஒரு இளங்குருத்து....!

எண்ணெய் காணாத
பரட்டைத் தலையுடனும்
ஆங்காங்கு கிழிந்த
அழுக்குச் சட்டையுடனும்
பசியோடு திரிகிறார்கள்
பால் பணம் மாறாத
பச்சிளம் பிள்ளைகள்...!

இவர்களில்
யாருக்குமே தெரியவில்லை...
ஆயிரம் இலட்சம் கோடிகளிலும்
அள்ளி வீசப்படும் இலவசங்களிலும்
தம் வாழ்நாள் பசிக்குமான
பணமும் சேர்ந்து இருக்கிறதென்று....11 comments:

 1. கேடுகேட்ட இச்சமூகத்தின் மனிதமற்ற மக்களால் திடமற்ற தம் மனம் அலைப்புற்று பேதலித்துக் கிடக்கும் பரிதாபத்துக்குரிய
  மனப் பிரழ்வாளர்களுக்கான இலவசமாய் பசி ... உணவிற்கு பதில் உடல் வெறியில் அவளின் கருப்பை நிரப்பும் கயமைகள் ... தானுண்டு தன் சுகமுண்டு என உண்டுயிர்த்திருக்கும் பிண்டங்கள்... என்ன உலகமடா...? என மனம் பதைத்து ஏதாவது செய்யத் துடிக்கும் உங்களைப் போல் ஒரு சிலரையும் கொண்டதாகவும் இருக்கிறது இவ்வுலகம்.

  கவிதை முடிப்பில் அரசியலாலர்களுக்கொரு ஒரு அடி... எவ்வளவையும் தாங்குபவர்கள் அவர்கள்...!

  இடையில், 'சோகையான முகத்தில் சிறுபுன்னகை தேக்கி ... 'என்றொரு வரியும் ஈர்க்கிறது என்னை. அந்த நமட்டு சிரிப்புக்கு பொருள் என்னவாயிருக்கும் என்ற சிந்தனை விரிந்து பெருகுகிறது. சாமானியரையும் ஞானியரையும் விஞ்சும் உலகானுபவத்தின் தெளிவினால் இழையும் புன்னகையோ அது...?

  இலவசங்களின் உச்சகட்டமாய் அரசுத் தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வரை சென்றிருக்கிறதாம். எங்கே செல்லும் இந்தப் பாதை...?? 'அதிக உயரம், விழுந்தால் அதிக அடியும்' என்பதை எப்போது உணர்வார்கள்?

  ReplyDelete
 2. அக்கா, (உன்னை கிருஷ்ணப்ரியா என்று அழைப்பதைவிட இதுதான் எனக்குப் பெருமை)
  இன்று காலையில் நான் முதலில் கண்டது உனது கவிதை; என் கண்களில் ஈரம்.
  அற்புதமான கவிதை. நான் வேறென்ன சொல்வது....

  ReplyDelete
 3. அருமை அருமை அருமை ப்ரியா. கொஞ்சம் நேர்த்திப் படுத்தினால் இன்னும் மிளிரும். எழுதனும்

  ReplyDelete
 4. கருத்துக்கு நன்றி நிலா.... எத்தனையோ பேர் பசியிலும் இன்னும் எத்தனையோ வேதனையிலும் இருப்பதை அறிந்தும் "ஐயோ" என்று சில வரி சொல்லி விட்டு, தம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களும் குற்றவாளிகள் தான் நிலா. . அந்த பசி தீர, வேதனை தீர நான் என்ன செய்தேன் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது..

  ReplyDelete
 5. நீ என்னை அக்கா என்று அழைப்பதைத் தான் கண்ணா நானும் பெருமையாய் உணர்கிறேன். தம்பி உடையான் மட்டுமல்ல, தம்பி உடையாளும் எதற்கும் அஞ்சாள்...... நம் கண்ணிலும் நெஞ்சிலும் தோன்றும் கொஞ்சம் ஈரத்தை ஏதாவது உபயோகமாய் மாற்ற வேண்டும். யோசிப்போம்...

  ReplyDelete
 6. நன்றி எட்வின், நிறைய எழுதத் தான் முயல்கிறேன், நேர்த்தியாக...! என்ன செய்வது?

  ReplyDelete
 7. சிறப்பான கவிதை.. அர்த்தமுள்ள உள்ளடக்கம் .. பொதுவாக சமுகத்தை பாடுபொருளாக கொள்வது இப்ப புத்திசாலித்தனமில்லை... கனவு, நனவு, உடலுறுப்புகள் என்று போய்கிட்டு இருக்கு பெரும் கூட்டம் இதுல தமிழ், இனம், சமூகம்னு கவலைப்படற கவிஞர்களை ஓரம் கட்டிடுவாங்க அப்படிங்கற பயமே இல்லாம துணிச்சலா மனசுல பட்டதை எழுதியிருக்கிங்க .. இந்த உண்மையான மனக்குமுறல்தான் கவிதைக்கு தேவை அதுதான் கவிதையை நிறுத்தும் .. உங்க கவிதை நிற்கும்

  ReplyDelete
 8. அட உங்க குட்டி பையனை பார்த்தா பசி போயிடும் போலிருக்கே ஜம்முன்னு உட்கார்ந்திருக்கறது பேரழகு....

  ReplyDelete
 9. அருமையான கவிதை! வார்த்தையில்லை விமர்சிக்க!!!!!!!!!!நீ சொல்லி நானும் பார்த்திருக்கிறேன் அந்த முதியவளை இனிப்பு கடை வாசலில்! உன் கவிதைகள் எல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல என்பதை அறிந்தவள் நான்.உன் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறேன்

  ReplyDelete
 10. உலகத்தின் அச்சு பசி. அனைத்தும் இதில்தான் சுழல்கிறது. அனைவருக்கும் பசி தீர்க்க இங்கு அட்சயப்பாத்திரமாய் இயற்கை இருக்கிறது. மனிதனின் சுயநலம் அதை அடைகாத்து பதுக்கி வைக்கிறது. எட்வின் சொன்னது போல வார்த்தைகளை கூராக்கினால் வாசகன் மனதை இன்னும் கூராய் குத்தும். நீங்கள் என்னிடம் நேரம் சொன்ன செய்தியைக் கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாதிப்புகளை கவிதையாக்கும் போது அதில் சத்தியம் ஒளிர்கிறது.

  ReplyDelete
 11. இலவசங்கள் எப்போதும் ஏழைக்கில்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாழ்க்கையே இலவசம்தான். அதிகபட்சம்தான் எனும் மனோபாவத்தில் அவர்களை எண்ணிப் பார்ப்பதால். இலவசங்களை ஒழிக்கிற ஒரு போராட்டம் நிச்சயம் வரும் பொறுப்பாக. காத்திருப்போம் பங்கெடுக்க. அருமையான கவிதை.

  ReplyDelete