Tuesday, May 31, 2011

 
 
 
இன்று அமிர்தம் சூர்யாவின் வலைப்பூவைப் பார்த்தேன். அதில் என் மனம் கவர்ந்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு......
 
 
 
 
 
 
 
 


(வார்த்தையாயிருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்மை,
நீங்கள் வாழ்க்கையில் பிரிண்ட்எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆல்பத்தை...)
படம்: ஒன்று
ஏய் கருப்பி!
கருடன் சுத்தறான் உஷாராயிரு!
புள்ளைங்கள அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போடி
பொரித்த குஞ்சுகளோடு குப்பையைக்
கிளரும் கருத்த கோழியோடு
பேசிக் கொண்டிருக்கிறாள் ஆயி.
படம்: இரண்டு
பாஞ்சாலி வேஷம் கட்டும்
கூத்துக்காரரின் காய்ச்சலுக்கு
கஷாயமும் கஞ்சியும்
கொடுத்தனுப்பியதைக் கண்டித்தபோது,
கலை செத்த ஊர்ல
காலந்தள்ள முடியாதய்யா
வெறும் வயிறோடு நடிச்சா
பாஞ்சாலி வயிறு எரியுமில்ல” -
புத்தியில் சாந்தம் பூசினாள் ஆச்சி.
படம்: மூன்று
கோவில் தேர் பிரச்னையால்
கூடிய பஞ்சாயத்தில்
சொந்தமாய் தேர் செதுக்கும்
யோசனை, விதையாய் வீழ்ந்தபோது...
ஏண்டா! உன் வயல்ல மழை பெய்ய
சொந்தமா மேகத்தை உனக்குன்னு செய்வீயா
பெய்யும் மழையை பொதுவாக்கப் பாருடா
- முளைத்த நெருப்பின் துளிரை
பிடுங்கிப் போட்டாள் ஆயா.
படம்: நான்கு
துயர நீரில் மூழ்கியிருக்கும் தன் கண்களோடு
காத்தவராயன் மனைவிக்கு
சுகப்பிரசவம் முடித்து,
உரமாய் ஆசியை மனத்தில் தூவிவிட்டு...
மரித்த பேரனுக்காய் மார்பில் அடித்து அழ,
நடையை ஓட்டமாய் மாற்றுகிறாள் பாட்டி.
படம்:ஐந்து
உருமாறுற தேவதைங்க
இப்ப ஏன் இல்ல?”
மடிமெத்தையில் தலை சாய்த்து
கதை கேட்கும் பேத்திக்கு
இல்லேன்னு யார் சொன்னா
நீ... உங்கம்மா... நானு கூடத்தான்
தேவதை. மனுஷ ரூபத்தில் இருக்கோமில்லே?”
- அரக்க சாயலை அடியோடு
தூர்வாறுவாள் அப்பத்தா.
கடவுளின் ரேகையை
முகங்களில் சுருக்கங்களாய்
பதியமிட்டிருக்கும்
பழுத்த பெண்மையை -
ஆச்சி, ஆயி, ஆயா, பாட்டி,
அப்பத்தா... எப்படி அழைத்தாலும் சரி.
பூமியைச் சுழற்றி விடும்
சூட்சுமத்தை அவர்களிடம்
ஒரு கணமேனும்,
உணர்ந்ததுண்டா - ஆம்எனில்
ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கும்
நீ பாக்யவான்.
குறிப்பு: இப்போது உனது
குல தெய்வங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அமிர்தம் சூர்யா
(c) suryakalki@gmail.com

தெளிவாயிட்டேன்

தஞ்சை நகரத்திலிருந்து சுமாராக ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில்
 இருக்கும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனக்கு மருந்தாளுநராக
 பணி. மருந்தாளுனர் என்றால் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவது
 முதன்மையான பணி..... துணை நிலை பணி என்ன என்று கேட்டு விடக்
 கூடாது, அது ஒரு பெரிய பட்டியல்.


சரி அதை விடுங்கள்.... நான் சொல்ல வந்த சேதியே வேறு.....


மருத்துவமனையில் அன்று நல்ல கூட்டம். வாரத்தில் ஒரு நாள் மட்டும்
 இரத்தக் கொதிப்பு, நீரிழிவு  நோய்க்கு என்று சிறப்பு மருத்துவமும்,
மருந்துகளும் வழங்கப் படும். அதை வாங்குவதற்காக
 வருகின்ற மக்கள்  கூட்டம். அன்று மட்டும் சுமாராக நானூறு பேராவது
 வருவார்கள். நான்  (மட்டும் தான்)பர பரப்பாக மருந்துகளை வழங்கிக்
 கொண்டிருந்தேன்.  படிப்பறிவில்லாத வயதானவர்களே அதிகம் அந்த
 கூட்டத்தில். இது இரத்தக் கொதிப்புக்கான மாத்திரை, இது சர்க்கரைக்கு,
 இது சத்து மாத்திரை என்று சொல்லியபடியே கொடுத்துக்
கொண்டிருந்தேன். இடையில் மருத்துவர் அழைப்பதாக செய்தி வந்தது.
 கூட்டத்தை நிற்க வைத்துவிட்டு அங்கே போனேன்.

"அம்மா, நீங்க இந்த பேஷண்ட்ஸ் கிட்டே,  சக்கரை வியாதி, இரத்தக்
 கொதிப்புன்னெல்லாம் சொல்லாதீங்க, இங்கே பாருங்க அவங்களுக்கு
 புதுசா ஒரு வியாதி வந்துட்டதா நினச்சு என்கிட்டே வந்து கேள்வி
 கேக்கறாங்க, பிரஷர், சுகர்  அப்படின்னே சொல்லுங்க. அப்போ தான்
 அவங்களுக்கு புரியும்"  மிகவும் தீவிரமான முகத்தோடு சொன்னார்
 மருத்துவர். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சரி
 என்று சொல்லிவிட்டு வந்து என் பணியை தொடர்ந்தேன். "இது பிரஷர்
 மாத்திரை, இது சத்து மாத்திரை, இது வலிக்கு" என்று சொல்லி கொடுத்த
 என்னிடம் அந்த தாத்தா கேட்டார், "எப்போ சாப்பிடனும்மா? " " இந்த
 மாத்திரை காலையில சாப்பிடுங்க, . இது ராத்திரிக்கு சாப்பிடுங்க "
கண்களை இடுக்கியபடி அவர் மறுபடி  கேட்டார்,  "இது பகல்ல, இது நைட்டுக்கு , அப்படி தானே?"

எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை..... அடுத்து
 வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாக கூற ஆரம்பித்தேன்,
 இந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல"


நான் தெளிவாயிட்டேன்..... அப்போ நீங்க....?

Monday, May 23, 2011

வேறு வேறு சிகரங்கள் .....

அருகருகே இருந்து கொண்டு
நாம்
 பறக்கவிட்ட முத்தங்கள்
 அறை முழுதும்  வியாபித்து
எனை
வெட்கத்தில் நனைக்கிறன   ....

விரல் கூட படாமல் 
விழிகளால் நீ தீண்டிய  
அங்கங்கள் 
நிலவு வரும் நேரத்து 
அல்லி மலராய் 
மெல்ல விரிகின்றன....

என்
அனிச்சபூ இதழ்களில்
நீ
அழுத்தமாய் தருகின்ற
ஒரேயொரு முத்தமே 
 என்னை 
சிகரமேற்றிவிடும்  என்றால் 
நம்ப மறுக்கிறாய்.....

சிகரம் தொட்டபிறகு
மூச்செடுக்கக் கூட 
இடமோ நேரமோ 
இல்லாத சூழலில் 


எப்படி புரியவைப்பேன் உனக்கு.....


என் சிகரமும்
உன் சிகரமும் 
வேறு வேறு வகையென்று........ 


நன்றி: சௌந்தர சுகன்
ஒதுங்குதல்...

பாக்கெட்டுக்களில் அடைத்த
பாலையும் தயிரையும்
வாங்கி ருசிக்கும் மக்கள்
மறந்தே போனார்கள்
அரிசி கழுவிய
உளுந்து களைந்த
கழனி நீருக்காக
வாசலில் வந்து நிற்கும் மாடுகளை.......

பொட்டல் திடலில்
காகிதங்களையும்
பிளாஸ்டிக் உறைகளையும்
மிச்சம் வைக்காமல்
தின்று முடிக்கும்  மாடுகள்
நீருக்காக ஒதுங்குகின்றன
குடியிருப்புகளின்
கழிவு நீர் பாதைக்கருகில்.........


நன்றி: கல்கி வார இதழ்.