Tuesday, December 16, 2014

படித்ததில் பிடித்தது



தவறு-மன்னிப்பு

சந்தோஷத்தை,
சஞ்சலத்தை,
சிலிர்ப்பை
என்று ஏதோ ஒன்றை தருவதாக...

முதல் தவறு மட்டும்
அச்சத்தையும்,
முதல் மன்னிப்பு கோரல்
வெட்கத்தையும் தருவதாக...

மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,
பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,

பிறகு எல்லாம்
பழகி விடுகிறது.

செய்வதற்கு எந்த தவறும்
கேட்பதற்கு எந்த மன்னிப்பும்
குற்ற உணர்வு தருவதில்லை...

அப்புறம் பார்த்துக்கலாம்
என்கிற மனநிலை இருக்கிற வரை
தவறுகள் தொடரும்...

கடவுளே எத்தனை
பெரிய தவறுக்கும்
பாவமன்னிப்பு தரும்போது...
மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?

மன்னிப்பு கேட்கிற
எத்தனை பேருக்கு -
பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்...

ஆனாலும்
தவறு செய்யாமல்
இருக்கப்போவதில்லை...
மன்னிப்பு கோராமலும்
இருக்கப்போவதில்லை...

எல்லாமே பாவனையாக,
மன்னிப்பு கேட்டு, கேட்டு...
மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -
மன்னிப்புக்கு மரியாதை
இல்லாமல் போனது...

மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல
தவறுகள் செய்கிறோமோ...

ஒரு நொடிப் பொழுதில்
விழும் அடி,
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை...

யாரோ ஒருவரின் தவறால் -
நான் பாதிக்கப்படும் போது,
தவறின் வீச்சு புரிகிறது...

மன்னிக்க முடியாத
இயலாமையும் பிடிபடுகிறது...

----------------------------------

(இது கண்ணதாசன் கவிதை என்ற குறிப்புடன், எழுத்து.காம் என்ற  தளத்தில் படித்தேன். கவிதையின் அழகு குறைவென்றாலும், கருத்து என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணதாசன் கவிதை தானா என்று ஒரு சந்தேகம் இருந்த போதிலும், கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.....)

Monday, December 15, 2014

நட்பு

நட்பென்னும் தொடர்பதிவுக்கு என்னை நிலாமகள் அழைத்து ஆயிற்று இரண்டு மாதங்கள்...... இப்படி ஒரு சோம்பேறி என்று தெரிந்திருந்தால் பாவம் நிலா என்னை அழைத்திருக்கவே மாட்டார்.... என்ன செய்வது எல்லாம் விதி..
சரி,  முயலாக இல்லாவிட்டாலும், ஆமையாகவாவது கொஞ்ச தூரம் ஓடிப் பார்த்து விடவேண்டும் என்று முடிவெடுத்து இந்த தொடர் பதிவில் நுழைகிறேன்....
இதில் கேள்வி பதில் எல்லாம் இல்லை.
படித்தபின் தோன்றும் கேள்விகளுக்கு அவரவர்களே பதில் எழுதிக் கொள்ளலாம்.....(எப்பூடி...)

எத்தனை வயதில் நான் நட்புக்குச் சொந்தக்காரியானேன் என்று நினைவில் இல்லை. ஆனால் முகமும், பெயரும் மறந்து போன பல நட்புகள் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டு தானிருக்கிறது.

Saturday, April 19, 2014

அன்பெனப்படுவது

என்னுடன் பணிபுரியும் பலரும் வேறு வசதியான இடங்களுக்கு மாறுதலில்

 செல்லும் போது மனம் கொஞ்சம் வருத்தப்படும்.( வேலை குறைவான இடம்

 தான் வசதியான இடம்) நாம் இன்னும் எத்தனை நாள் தான் இப்படி பரபரவென

 சுழல வேண்டியிருக்குமோ என்று சில சமயங்களில் மனம் நொந்து

போவதும், வேலை இல்லாமல் பலரும் துயரப்படுகையில் வேலை அதிகம்

 என்று அலட்டிக் கொள்வது டூ மச் என்று நானே என்னை சமாதானப்படுத்திக்

 கொள்வதும் அடிக்கடி நிகழ்வது தான்.

Friday, March 7, 2014

மகளிர் தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பெண்ணே....
உனக்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்
மகிழம் பூவாய் உன்
மனம் மணக்கட்டும்..

ஆயிரம் தொல்லைகள்
உன்னைச் சுற்றி வந்தாலும்
மத்தாப்பூவாய்
நீ மலர்ந்து சிரி.....
பிரச்சனைகள் உனைக் கண்டு
பிடரியில்  கால் பட பயந்து ஓடட்டும்....

யாருக்கு இல்லை கவலைகள்
சிரி
உன்னைச் சுற்றி
சந்தோஷ சாம்ராஜ்யம் உருவாக்கு.....

வாழ்வது ஒரு முறை தானே 
பெண்ணே
அகிலம் உன்னால் வாழட்டும்....

அன்பெனும் மந்திரம்
ஓதப் பழகு
அன்பெனும் அன்னம்
வாரி வழங்கு
அன்பெனும் உடைகள்
உடுக்கக் கொடு
அன்பால் உலகை
அணைத்துக் காட்டு....
அன்பே
நீ தானே பெண்ணே......

பொறாமை விடு
அகம்பாவம் அழி
அறிவைப் பெருக்கு
ஆற்றலை உயர்த்து....
அன்பை அழிப்போரை
அடித்தும் திருத்து....

கண்ணீர் விட்டு காலம்
களையாதே
சோம்பியிருந்து சோர்ந்து போகாதே
சட்டத்தின் துணையோடு
எங்கும்
சமாதானம் நிகழ்த்து

உன் பூங்கரங்களில் தான்
புவியே இருக்கிறது பெண்ணே,,,,,

பெண்கள் தின வாழ்த்துக்கள்
பெண்ணே உனக்கு ....!


நன்றி: பெண்ணாய்ப் பெற்று
        
              பெருமையுடன் வளர்த்த
       
              பெற்றோர் சங்கரன் / பார்வதிக்கு
            

Thursday, February 13, 2014

ஈன்ற பொழுதில்


விஜய் ரோஷன்





பாட்டும் பரதமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிறு வயது முதல் என் தீராத ஆசை....
பள்ளிப் பருவத்திலே நிறைய நடனங்கள் ஆடியிருக்கிறேன், என் நடனம் இன்றி பள்ளியில் ஒரு விழாவும் நடக்காது என்ற அளவுக்கு.! ஆனாலும், பரதம் மட்டும் ஆடியதே இல்லை. பரதம் ஆடுவது கொஞ்சம் பொருட்செலவுக்குரிய  செயல் என்பதால், அதற்கு வழியில்லாத என்னை  ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்ததே இல்லை. அது இன்னமும் ஒரு தீராத ஏக்கம் தான் மனதில்...

எப்படியும் அந்த பரதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி மனதில் இருந்ததன் விளைவு,

Sunday, February 9, 2014

கவிதா





  “வா கவிதா, பையனை அழச்சிட்டு வரலயா?”.. என்ற படி கதவைத்திறந்தாள்
 மேகலா.  
“இல்லண்ணி, அவர் வீட்ல இருக்கார், அதான் விட்டுட்டு வந்தேன்” என்ற
கவிதாவின் குரல் சுருதி இல்லாமல் இருந்தது. கையில் இருந்த  சின்ன 
கூடையை கதவருகில்  வைத்தாள்.

“என்னங்க, கவிதா வந்து இருக்கா பாருங்க” என்றபடி ரூமைப்பார்த்து குரல்
கொடுத்த மேகலா, “ஏன் கவிதா, வாட்டமாய் இருக்க? சரவணன் வேலைக்குப்
போறாரா? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

Friday, February 7, 2014

கள்ளியிலும் பூக்கள்



சப்பாத்திக் கள்ளி மலர் 

















எண்ண ஊற்றுகளில்
பீறிட்டு வழியும் காதலால்
நிரம்பித் ததும்புகிறது
உள்ளக் கோப்பை
ஆற்றுப் படுகைகளில்
ரசிப்பாரின்றி குலுங்கும்
முற்றாத தேக்கின் பூக்களென……!

புறக்கணிப்பின் வலியில்
சப்பாத்திக் கள்ளியின்
முட்களென உருமாறுகிறது  விழிகள்…..

பயந்து தடுமாறி
ததும்பி வழிந்தோடும் கோப்பையை
வெற்றிடமாக்கும் முயற்சியில்
காதலை வார்த்தைகளாய்க்
குழைத்து, குழைத்து
பிரபஞ்ச வெளியெங்கும் வீசுகிறேன்…….

வீசிய இடமெல்லாம்
காதலின் வித்துக்கள் முளைத்து
மணக்கத் தொடங்குகிறது  பிரபஞ்சம்…

பூத்திருக்கிறது
கள்ளியிலும் பூக்கள்.......




நன்றி: கல்கி வார இதழ்

Tuesday, January 14, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்......

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்....
 என் சோம்பேறித்தனத்தில் இருந்து
நான் வெளியே வரக் கூட ஒரு தை பிறக்க வேண்டியிருக்கிறது......

என்னதான் வேலைப்பளு, இணைய இணைப்பு சரியில்லை, உடல் நலமில்லை  என்றெல்லாம் காரணங்களைச் சொன்னாலும் கூட, எழுதாமல் இருப்பதற்கு சோம்பேறித் தனமும் ஒரு முக்கியமான காரணம் தான்..

  சில நாட்களுக்கு முன்னால் என் அன்புத் தோழி நிலாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் 20 வருடத்திற்கு முன்பு எழுதிக்கிழித்தவற்றைப்(!)  பகிர்ந்து கொண்டேன்......   உடனே பளிச்சென்று ஒரு மின்னல் ,,,,, என் மூளையில் இல்லை, நிலாவின் மூளையில்.... ( உனக்கு ஏது மூளை என்றெல்லாம் அறிவுப் பூர்வமான கேள்வி கேட்கக்கூடாது)

“ஏன் ப்ரியா, நீங்கள் அப்போது எழுதிய கவிதைகளை, ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களா, இல்லை என்றால் இனியாவது செய்யுங்கள். அப்படியே அவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவேற்றலாமே” என்று ஒரு அருமையான யோசனை   தந்தார்.....

அட, கேக்க நல்லாத் தான் இருக்கு,,,,, என்று நான் யோசித்துக் கொண்டே பல நாளைக் கடத்தி, ஒரு வழியாக, இன்று போகிப்பண்டிகையைக் கொண்டாட, என் சோம்பேறித்தனத்தை பெருக்கித் தள்ளி, அறிவைப் பளிச்சென்றாக்கி (வீட்டைத் துடைத்து பளிச்சென்றாக்குவதை விட இது எளிதாகத் தானிருக்கு)
இதோ ஒரு பழைய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்......

“பழையனக் கழிதலும், புதியன புகுதலும்” என்பதை சிறிது நேரம் மறந்து விட்டு, இதை படியுங்கள்.......

2014இல் சந்தோஷமாய் என்னை வலை வீச வைத்தமைக்காக
என் பிரிய சகி (அட!) நிலாமகளுக்கு அன்பு நன்றிகள்........


பொங்கல் வாழ்த்துக்கள்
-------------------------------------

பொங்கல் நாளின் வாழ்த்துக்கள்
எங்கும் நிறைந்து செழிக்கட்டும்
 மங்கள கீதம் திசை தோறும்
மனங்கள் மயங்க ஒலிக்கட்டும்....

உழவர் வாழ்வில் இனியேனும்
 உயர்வின்  தீபம் ஒளிரட்டும்
கழனிகள் கண்ட அவருள்ளம்
களிப்பும் கண்டு .வாழட்டும்..

பெண்டிரின் உலகம் புன்னகையை
பெருமைக் கொண்டு புனையட்டும்
பண்டிதர் இங்கே பலப் பலவாய்
பல்சுவை நூல்கள் பகரட்டும்

மேன்மை புவியில் நிரந்தரமாய்
நிமிர்ந்து நின்று சிரிக்கட்டும்
சீர்மை கொண்டு எல்லோரும்
சிறப்பாய் மகிழ்வுடன் வாழட்டும்..........

 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்



நன்றி : 1989ம் வருட பொங்கல் சிறப்பிதழில் இந்த கவிதையை வெளியிட்ட "மங்கை" மாத இதழுக்கு........
I miss u "mangai".......