Sunday, June 19, 2011

அம்மா

அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்

ஓய்வில்லாது உழைத்து

அலுத்துக் களைத்துப் போகும்

எண்ணற்ற தருணங்களில்

எல்லோரிடமும்

சிடுசிடுக்கும் அம்மா

சீறுவதேயில்லை 

பத்துப்பாத்திரம் தேய்க்கும்

பத்மாவிடம் மட்டும்....


களித்துச் சிரித்திருக்கும்

எங்களுக்கான நேரங்களில்

காரணம் கேட்டால்

வீட்டிலும் வெளியிலும்

அவளும் தான் தேய்கிறாள்

என்னைப் போலவே.....

பதில் சொல்லும்

அம்மாவின் கண்களில்

எப்போதும் தெரிகிறது நெருப்பு......



நன்றி: கவண் இதழ்..

Saturday, June 18, 2011

,
மரங்கள் வெட்டப் பட்ட
அரளிகள் பூக்க முயற்சிக்கும்
மிக நீண்ட
சாலையொன்றில்
சூரியன் தகித்து இறங்கிக் கொண்டிருக்க
வெயிலால் சோர்ந்து நடந்து வந்தாள்
பொக்கை வாய் கிழவியொருத்தி...

தலைக் கவசம், இருக்கைக்கு துண்டு என்று
பறந்து வந்து கொண்டிருந்த
அந்த
இரு சக்கர வாகனம்
மெல்ல வேகம் குறைத்து
அவளை பின்னால் இருத்தியபடி
பயணத்தைத்  தொடர்ந்தது....

வெயிலுக்கு பயந்து
எங்கோ ஒளிந்திருந்த
கடவுளும்
சேர்ந்து பயணித்தான்
அந்த தலைக் கவசத்துக்குள்
தன்னை மறைத்தபடியே.....


நன்றி: கல்கி வார இதழ்... 

Thursday, June 16, 2011

அவளும், அவளும்.....

சரசரக்கும் பட்டுப்புடவை
பளபளக்கும் அணிகலன்கள்
விதவிதமாய் பூக்கள் என்று
அவளை
பகட்டாக அலங்கரித்து
அவள் அங்கே இருப்பதாக நம்பி
ஏதோ ஒரு விழா
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்......

அவளோ
விழா முடிந்த பிறகு
நடக்கப்போகிற
அன்னதானத்திற்காய்
பசியோடு காத்திருக்கும்
பிள்ளைகளின் நடுவில்
ஓடி விளையாடுகிறாள்
பாவாடைச் சிறுமியாக......


நன்றி; கவண் இதழ்..