வெற்றிக்குப் பெண்ணென்று பேர்
வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்தது. போராட்டங்களை எதிர்கொள்ளுவதும், நமது பங்களிப்பைச் சிறப்பாய்த் தந்து
போராடி வெற்றியை எட்டுவதும் தான் வாழ்வின் தினசரியாக இருக்கிறது. ஒவ்வொரு
வினாடியுமே ஏதோ ஒரு விஷயத்துக்கான போராட்டம் தான். மரணம் சம்பவித்து விடாமல்
இருக்க மறக்காமல் மூச்சு விட்டுக் கொண்டேயிருப்பது கூட போராட்டம் தானே..!
ஆண்களும் பெண்களும்
நிறைந்த இந்த உலகில், சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும், சமாதானங்களும் எப்போதும்
ஆண்களுக்கே வாரி வழங்கப்படுகிறது. பெண்கள் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறவர்களாக,
கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்ற சந்தர்பங்கள் மறுக்கப்படுகிறவர்களாக,
இழப்புகளுக்கு தங்களுக்குத் தாங்களே சமாதானம் கூறிக் கொள்கிறவர்களாக இருக்கும்
நிலை தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
ஆனால் இப்படிப் பட்ட
உலகிலும் பெண்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன், வாழ்த்தான் செய்கிறார்கள். நான்
என்னைப் பற்றிச் சொல்லத்தான் இந்த கட்டுரையைத் தொட்ங்கினேன். யோசித்துப்
பார்க்கையில் என்னைப் பற்றி பெருமையாய்ச் சொல்லி பக்கங்களை நிரப்பிச் செல்ல
ஒன்றுமேயில்லை என்று தோன்றுகிறது. நாம் வாழ்க்கையில் சந்திக்கின்ற சிலர் நம்மை
ஒன்றுமில்லாமல் அடித்து விடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணைப் பற்றி, அவளது
நெஞ்சுறுதி பற்றி சொல்வதில்
நான் பெருமையாய் உணர்கிறேன்...
நான் ஒரு மருத்துவமனை
ஊழியர். மருந்துகளால் மட்டுமே நோய்கள் தீர்ந்துவிடாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை
கொண்டவளும் கூட... நோயுடன் வந்து மருந்துகளுக்காக வரிசையில் நிற்கும் எண்ணற்ற
மக்களின் கண்களில் பல சமயங்களில் நட்பைக்கண்டு கதைக்கத் தொடங்கியிருக்கிறேன்.
அப்படியான ஒரு நாளில் தான் என் முன்னே காச நோய்க்கான மருந்துகளைப் பெற அனுமதிச்
சீட்டுடன் ஒரு மெலிந்த உருவம் வந்து நின்றது. வந்து நின்ற அவருக்கு, நாம் குமார்
என்று பெயர் வைத்துக் கொள்வோம், நிற்கவே தெம்பில்லை. மூச்சுத்திணற ஒரு கையால்
இடுப்பைத் தாங்கியபடி சீட்டை என்னிடம் நீட்டினார் குமார். எனக்கு அவர் தோற்ற்மே
பதட்டமாய் இருந்த்து. அருகிலிருந்த நீளமான பெஞ்சில் அமரச் சொன்னேன். சீட்டை
வாங்கிப் பார்த்த்தும் எனக்குத் தெரிந்தது, அவர் வெறும் காச நோயாளியில்லை, ஹெச்.
ஐ. வி கிருமியின் தாக்கத்தால் காச நோயை இலவச இணைப்பாக வாங்கிக் கொண்டிருக்கிறார்
என்று. நான் எதுவும் பேசாமல் அவரைப் பார்த்தேன். வயது 28 என்று அந்த சீட்டில்
போடப் பட்டிருந்த்து. எத்தனை சிறிய வயது.... இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கிறது உலகத்தில் இந்த இளைஞன் அனுபவிக்க.... இவனுக்கு
இப்படி, இந்த மாதிரியான ஒரு நிலையா? கேள்விகளை மனதில் புதைத்துக் கொண்டு, என்
பணிக்கு மாறினேன்...
காச நோய்க்கான
மருந்துகள் வழங்க பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை எடுத்துக் கொண்டேன். அவரைப் பற்றிய
சுயவிவரக் குறிப்புகள் எனக்குத் தேவை. ஏதோ ஒரு வேண்டுதலோடு, அவர் பெயர், ஊர்
பற்றிக் கேட்டபடியே, திருமணமாகி விட்ட்தா என்ற கேள்வியைக் கேட்டேன். இல்லை என்று
அவர் சொல்லிவிட வேண்டும் என்பது தான் என் உள் மன ஆசையாக இருந்த்து. ஆனால் நம்
ஆசைகள் எப்போதும் பலித்து விடுவதில்லையே.. ஆயிடுச்சு என்று சொல்லி என்னை இன்னும்
அதிகமாக பதட்டம் கொள்ள வைத்தார் குமார். இயந்திரமாய் அடுத்தக் கேள்வியைக்
கேட்டேன். பிள்ளைகள்..? இரண்டு என்றார் அவர். இதைச் சொல்வதற்குள் அவர் முகமே
பரிதாபமாய் மாறிற்று. நான் எழுதுவதை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு அவரையேப்
பார்த்தேன். என் பார்வையின் தீவிரம் தாங்காதவராய் அவர் தலையைக் குனிந்துக்
கொண்டார். பிள்ளைகளுக்கு எத்தனை வயசிருக்கும்? பெரிய பொண்ணுக்கு 2 வயசு.
சின்னதுக்கு இப்பத்தான் ஆறு மாசமாகுது.... தனக்கு என்ன வியாதி என்றும், அதன்
தீவிரமும் அறிந்தவர் போலிருந்தார் குமார். என் கேள்விகளுக்கு பதில் சொல்கையில்
அவரது முகம் தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் த்த்தளித்ததை என்னால் உணர முடிந்தது.
என்னால் அவரிடம் எதையும் பேச முடியவில்லை. பதில் எதுவும் பேசாமல் விவரங்களை
நிரப்பிக் கொண்டு, அவருக்கான மாத்திரைப் பெட்டியை எடுத்தேன். அதன் இரண்டு
பக்கங்களிலும் அவரது பெயரை எழுதி வைத்தேன். அன்றைய மாத்திரையை எடுத்து பிரித்து
தண்ணீருடன் கைகளில் கொடுத்தேன். இப்பவே திங்கனுமா என்று பாவமாய்க் கேட்டார்.
ஆமாம், இப்பவே தான், என் கண் முன்னே தான் திங்கனும். மாத்திரைகளை வாங்கி
ஒவ்வொன்றாய் விழுங்கினார். நான் அவருக்கான அட்டையை அவரிடம் கொடுத்தேன். அடுத்து வர
வேண்டிய நாள் குறித்துச் சொன்னேன். அவர் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி, அவர்
வாழ்க்கை முறையை அவர் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், என்னென்ன செய்யலாம்,
என்னென்ன செய்யக் கூடாது என்றெல்லாம் எடுத்துச் சொன்னேன். ம்ம் ம்ம் என்று
கேட்டுக் கொண்டு மெல்ல நகர்ந்து செல்லும்
அவரைப் பார்த்த படியே நின்றேன்..
பின் வந்த நாட்களில்
எல்லாம் அவர் மிகச் சரியாக மருந்துகள் வாங்க வந்து கொண்டிருந்தார். என்றாலும்
எனக்கு அவர் மனைவியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பொதுவாக
சரியாக மருந்துகளை வாங்க வராத நோயாளிகள் விஷயத்தில் தான் வீட்டிலிருந்து யாரையாவது
வரச் சொல்லி நோயாளியின் நிலைமைக் குறித்து எடுத்துச் சொல்லி புரியவைப்பது வழக்கம்.
ஆனால் குமாரின் வயதும், அந்த அமைதியும் அவர் மனைவியிடம் அவர் நோய் பற்றி எடுத்துச்
சொல்லி அந்த குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள வழிவகை செய்துகொள்ளச் செய்யவேண்டும்
என்று எனக்கு தோன்றியது. ஒரு நாள் அவரிடம் கேட்டேன், ‘உங்கள் மனைவிக்கு உங்கள்
நிலைமைக் குறித்துத் தெரியுமா?’ , ’இல்லை, தெரியாது’, என்றார் அவர். ‘சொல்ல வேண்டாமா?’ என்ற என் கேள்விக்கு அவருக்கு
பதில் தெரியவில்லை. நாளை மனைவியை அழைத்து வாருங்கள் என்ற என் பேச்சுக்கு மறு
பேச்சு எதுவும் இல்லை அவரிடம்.
ஆனால் மறுமுறை தன் மனைவியுடன் தான் வந்தார். சின்னதாய் ஒரு குத்துவிளக்கு
கை,கால் முளைத்து வந்தது போல அத்தனை அழகாய், கறுப்புத் தங்கமாய் வந்து நின்ற அந்த
பெண்ணைப் பார்த்ததும் என் அடி வயிறு கலங்கிற்று.... ‘என் மனைவி, சவீதா’ என்று என்னிடம் சொன்ன குமார்
அமைதியாக அங்கே நின்றார். அமரச் சொன்னேன் இருவரையும். மருந்துகள் வாங்க நின்றிருந்த
நீளமான வரிசை மெல்லக் குறைந்தது. நானும் அவர்களும் மட்டுமான நேரம் வந்த்து. ‘
உன்னை எதற்கு வரச் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா?’ என்று அவளிடம் கேட்டேன். இல்லை என்றாள். எனக்கு
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நான் ஆலோசகர் இல்லை, என்றாலும் பல
வருடங்களாக நோயாளிகளுடனும், அவர்கள் உறவினர்களுடனும் இருக்கிற பழக்கம் தந்த
தைரியத்தில் மெல்ல ஆரம்பித்தேன். அவள் கணவருக்கு இப்போது இருக்கும் காச நோயின்
தீவிரம் குறித்து, அதற்காக அவள் எடுத்துக் கொள்ள வேண்டிய சிரத்தைகள் குறித்து,
மெல்ல மெல்லச் சொன்னேன். ஹெச் ஐ வி குறித்து எதுவும் தெரியுமா என்ற என் கேள்விக்கு
தெரியாது என்று அவள் சொன்ன பதிலில் நான் சன்னமாய் உடைந்து தான் போனேன். அவள்
படித்தவளில்லை என்பதும், கணவனைத் தவிர வேறு உலகம் அறியாதவள் என்பதும் புரிந்தது.அவளுக்கு
21 வயது தான் ஆகியிருந்தது. படிக்காத அவளுக்கு, 17 வயதிலேயே திருமணம்
முடிந்திருந்தது.. அவளிடம் விளக்கினேன். இது
என்ன, இதன் விளைவுகள் என்ன, முடிவு என்ன என்பனவற்றை நான் மெதுவாகச் சொல்லிக்கொண்டே
அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.... அன்று அவளது அந்த எதிர்வினை தான் இன்று அவளை
நான் நினைவில் வைத்திருந்து உங்களிடம் சொல்ல வைத்திருக்கிறது. நான் பேசப்பேச அவள்
முகம் இறுகிக் கொண்டே வந்த்து. மிகப்பெரிய போருக்குத் தயாராகும் ஒரு போர்வீரனின்
கூர்மையும், கவனமும் அவள் கண்களில் ஒளிர்ந்தது. நான் சொல்லி முடித்துவிட்டேன், இனி
அவள் எதுவும் சந்தேகங்கள் கேட்பாள், அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற ஆயத்தம்
எனக்குள்..... அவள் மெல்ல வாய் திறந்தாள்.. ‘ இனி நான் இவர எப்படி பாத்துக்கனும்
மேடம்? என்ன சாப்பாடு கொடுக்கனும்? என்னல்லாம் செய்யனும்? என்ன செய்ய கூடாதுன்னு
சொல்லுங்க மேடம்’, ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை, அய்யோ என்ற கூச்சல் இல்லை,
தனக்கு இப்படியாகி விட்ட்தே என்ற தவிப்பு இல்லை,.......என்னை தன் மெலிந்த,
ஜீவனற்ற ஒற்றைப் புன்னகையால் குப்புறத்
தள்ளியபடிக் கேட்டாள் சவீதா...
அவள் தைரியத்தில் நான் ஒரு வினாடி ஆடித்தான் போனேன். பின் அவளது கேள்விகளுக்கு பதில் சொன்னேன். அவள் குடும்ப சூழல், பிள்ளைகளின் நிலை எல்லாம்
கேட்டுக் கொண்டேன். இத்தனை நாள் அவள் கணவன் வருமானத்தில்
அவள் குடும்பம் பட்டினியின்றி இருந்ததையும், இப்போது சில மாதங்களாக அவன்
வேலைக்குச் செல்லாமல் இருப்பதால் வறுமையில் உழலுவதையும் சொன்னாள் அவள். வயல்
வேலைகளுக்கு தான் இப்போது போவதையும், இனியும் போகப் போவதாயும் சொன்னாள். ‘ இவர
நல்ல படியாப் பாத்துக்கனும் இல்ல’, என்று சேர்த்துக்
கொண்டாள்.... இப்போது என் பொறுப்புக் கூடிப் போனது. இவளுக்கும், இவள்
குழந்தைகளுக்கும் இந்த நோய்த் தொற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே...
அதையும் அவளிடம் எடுத்துச் சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டாள். ‘ எனக்கு எதுவும்
இருந்தாலும் பரவால்ல. என் பிள்ளைகளுக்கு இருக்க்க் கூடாது மேடம். உடனே
பார்த்துடுங்க....’, என்று பதறினாள்.....
பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள். கடவுள் ஒரு கதவை மூடினால், ஒரு சன்னலையாவது
திறந்து வைப்பார் என்று. எல்லா இட்த்திலும் இது உண்மையோ இல்லையோ, சவீதா விஷயத்தில்
உண்மையாயிற்று. அவள் இரத்த பரிசோதனை முடிவு எங்களை சந்தோஷப் படுத்திற்று. அவளுக்கு
நோய்த் தொற்று இல்லை என்றது முடிவு. என்றாலும், இந்த மருத்துவ உலகம்
எல்லாவற்றுக்கும் இரண்டாம் கருத்து வைத்திருப்பது போல, இதிலும் இருந்தது. ஒருவேளை
‘சன்னல் காலமாய்’(window
period) இருக்கலாம்’ என்றனர் மருத்துவர்கள். அம்மா நெகடிவாய் இருப்பதால்,
பிள்ளைகளுக்குப் பார்க்கத் தேவையில்லை என்றும் சொன்னார்கள். அன்று தொடங்கியது
சவீதாவின் ஓட்டம்.
அவள் ஓயாமல்
உழைத்தாள். தன் கணவனுக்காக, தன் குழந்தைகளுக்காக என்று நிற்காமல் ஓடினாள். இந்த
வியாதி எப்படி இவனுக்கு என்று அவளிடம் பேச வந்தவர்களை, புறம் தள்ளினாள். எப்படி
வந்திருந்தாலும், அவன் தன் கணவன், அவனை நல்ல படியாக பார்த்துக் கொள்ள வேண்டும்
என்று மட்டுமே நினைத்தாள் அவள். நான் கூட ஒரு முறை அவளிடம் நாசூக்காய்க் கேட்டேன்.
உன் கணவனுக்கு வேறு ஏதும் தப்பான பழக்கம் இருந்திருக்கா என்று.... அவள் சொன்னாள், ’எனக்கு தெரிஞ்சு அவர் நல்லவர் தான் மேடம். அப்படியே ஏதும்
தப்பு பண்ணி அவருக்கு இது வந்திருந்தாலும், அவர இப்ப நான் என்ன கேக்க முடியும்.
உடம்புக்கு முடியாம, கஷ்டப்படற மனுஷன் கிட்டே நியாயம் கேட்டு நான் என்ன செய்யப்
போறேன்? இருக்கிற வரைக்கும், அவர நல்லா பாத்துக்க எனக்கு உதவி பண்ணுங்க மேடம் அது
போதும்’,... எத்தனை தெளிவு, எத்தனை
பரோபகாரமான மனசு, எத்தனை நெஞ்சுறுதி..!
பாரதி சொல்கிறான், “மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்”, அவள் பாரதி கண்ட புதுமைப்
பெண்ணாய்த் தெரிந்தாள் எனக்கு. அவன் தானே சொல்கிறான், “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்” என்று..! எது
ஞானம் என்பதில் நாம் தான் குழம்பிப் போகிறோம். தவறு செய்திருந்தாலும், அவன் தவறு
பற்றியேப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பலன் இருக்கும் என்று சட்டென்று
முடிவெடுத்து, அடுத்து செய்ய வேண்டியது பற்றி யோசிக்க அவளால் முடிந்தது. அந்த
கணவன் நிலையில் இவள் இருந்திருந்தால், அவள் கணவனால் இப்படி பெருந்தன்மையோடு,
அவளைப் பார்த்திருக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.
அதற்குப் பின் வந்த நாட்களில் அவள் தன் கணவனை பொறுமையோடுப் பார்த்துக்
கொண்டாள். உடலுறவுக்கு வற்புறுத்தும் கணவனை எப்படி சமாளிப்பது என்று என்னிடம் உதவி
கேட்டு வந்தாள். ஆணுறைகளை வாங்கிப் போனாள். ஆனாலும், கடைசி வரை அவனை ஒரு
குழந்தையைப் போல பார்த்துக் கொண்டாள். திடீர் திடீரென்று வருவாள். கால்
வலிக்கிறதென்கிறாரே, வயிற்றெளவுப் போகிறதே, என்று பதறி ஓடி வருவாள். மருந்து
மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஓடுவாள்..
என்ன செய்து என்ன பலன்... முக்கியமான வேலை என்று நான் ஒரு பத்து நாள் விடுப்பு
எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பிய ஒரு நாளில் காச நோயாளிகள்
பட்டியலில் குமார் பெயர் நீக்கப் பட்டிருந்த்து. காரணம் என்னவென்று பரபரப்பாய்
விசாரித்த போது, அவர் உயிருள்ளவர்கள் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டு இரண்டொரு
நாள் ஆகி விட்டிருந்தது தெரிந்தது..... எதிர்பார்த்த மரணம் தான் என்றாலும், என்னை
கொஞ்சம் உலுக்கித் தான் விட்டது குமாரின் மரணம். சவீதா, சவீதா இனி என்ன செய்யப்
போகிறாய்......என்ற கேள்வி என்னை குடைந்தது....
சில நாட்களுக்குப் பின் அவள் வந்தாள்.
தூசு படிந்து போன ஓவியம் போலிருந்தது அவள் முகம். கையிலும், இடுப்பிலுமாய் தன்
குழந்தைகளைச் சுமந்து வந்திருந்தாள்... அப்போதும் அவள் கண்களில் கண்ணீரில்லை.
எப்படியும் குழந்தைகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற உறுதி மட்டுமே இருந்தது அவள்
முகத்தில்...
கவலைப்படாதே சவீதா என்று நான் சொல்ல முற்படுவதற்குள்ளாக அவள் கேட்டாள்....
‘என்னமோ சன்னல் காலம்னு சொன்னீங்களே, அது இப்போ முடிஞ்சுடுச்சா மேடம்? இன்னொரு
முறை இரத்தம் பார்த்திடலாமா?’, என்று... என்ன மாதிரி
பெண்ணிவள் என்று எனக்கு வியப்பு மேலிட்ட்து. இத்தனை சுலபமாக இதை தாண்டி விட
முடிகிறதா இவளால்? அவள் மன உறுதியை நான் குலைக்க விரும்பவில்லை. மீண்டும் இரத்தம்
பரிசோதிக்கப் பட்ட்து. கடவுள் என்று ஒரு சக்தி இருக்குமானால் அதற்கு நன்றி.....
அவள் இரத்தம் நோய்த் தொற்று இல்லாமலிருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அவள்
முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகை. அப்ப என் பிள்ளைகளுக்கு எதும் இருக்காதுல்ல’, இருக்காது சவீதா......அவள்
நிம்மதியானாள்...... தன் வாழ்வின் இலட்சியமாக தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை
வரையறுத்துக் கொண்டாள்... படிக்காத
தன்னைப் போல தன் பிள்ளைகள் ஆகி விடக் கூடாது. என்பது அவளது தாரக மந்திரமானது.
ஓயாமல் உழைத்தாள்....
நிரந்தரமான வேலை எதுவும் கிடைக்காதா என்று தேடிக்கொண்டே கூலி வேலை
செய்தாள்.... அவள் தேடல் வீண் போகவில்லை. ஒரு தனியார் கல்லூரியில் துப்புரவாளராய்
அவளுக்கு பணி கிடைத்தது. பி.எப் எல்லாம் போக அவளுக்கும் மாதம் 3000 ரூபாய்
கிடைக்கிறது. இதோ அவளது மூத்த மகள் வயதுக்கு வந்துவிட்டாள். வயதுக்கு வந்த
பிள்ளையை வீட்டில் தனியாக விட்டு விட்டு தான் வேலைக்குப் போய் வருவது
குழந்தைக்குப் பாதுகாப்பில்லை என்று யோசித்து, விடுதியுடன் இணைந்த ஒரு பள்ளியில்
சேர்த்து விட்டாள். ’சின்னவ அஞ்சாவது
படிக்கிறா மேடம். அடுத்த வருஷம் அவளையும் அந்த பள்ளிக்கூடத்து ஆஸ்டல்லேயே சேத்து
விடப் போறேன். ’ ‘அப்படியா? அழுவாம
இருந்துக்கிறாளா?’, ‘ சிலப்போ வீட்டுக்கு வந்துடறேன்னு அழுவுது
தான். நான் தான் படிப்பு எவ்வளவு முக்கியம்னு சொல்லி சமாதனப் படுத்துவேன். இப்ப
ரொம்ப அழுவறதில்ல. அதுங்க ரெண்டும் நல்லாப் படிக்கனும். நல்ல வேலைக்குப் போகனும்.
அது மட்டும் தான் மேடம் எனக்கு வேணும்’,.... இரண்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்த போது கண்களில்
சந்தோஷம் மின்ன அப்படி சொன்ன சவீதாவைக்
கட்டிக் கொண்டேன்....
”போற்றி போற்றி ஓர் ஆயிரம்
போற்றி! நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகாண்
சேற்றிலே புதிதாக முளைத்த்தோர்
செய்யத் தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத் நாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை, மாதரசே! எங்கள்
சாதி செய்த் தவப்பயன் வாழி நீ!”
வாழ்க்கை தன் கோரக்
கைகளால் கழுத்தை நெரிக்க முற்பட்ட போதும் கூட, அந்த கைகளை இறுக்கிப் பிடித்தபடி
தன் பாதையில் தைரியமாய் நடக்க முற்பட்டு இன்று வெற்றிப் ப்டிகட்டுகளில் ஏறிக்
கொண்டிருக்கும் சவீதாவுக்கு முன்னால், நான் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க
என்ன இருக்கிறது? நம் வாழ்வில் எத்தனையோ சவீதாக்கள்,பல வழிகளில் அவர்கள்
வாழ்வெனும் போராட்ட்த்தை துணிவோடும், விடாமுயற்சியோடும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்... சின்னத் தோல்விகளுக்குக் கூட துவண்டு விடுகின்றவர்கள்
இவர்களைப் போன்றவர்களைப் பார்க்க வேண்டும்.
இன்று ஒரு கட்டுரையை எழுதுகிற அளவுக்கு நான்
எழுத்தாளர் என்ற நிலையில் பார்க்கப் படுகிறேனென்றால் அதற்கு பின்னால், என் அம்மா,
அவளுக்குப் பின்னால் என் பாட்டி என்று ஒரு பட்டியலே நீள்வதை எப்படி தடுக்க
முடியும்? என் பாட்டி, அவள் எப்போதும் என் மதிப்பிற்குரியவள்...சிலப்பதிகார மாதவி
போல பல கலைகள் கற்றவளில்லை என்றாலும், எல்லா கலைகளுக்கும் ஆத்திச்சூடியான
தன்னம்பிக்கை என்னும் கலையை படித்தவள்...தைரியம் என்னும் போர் வாளை ஏந்தியிருந்தவள்
என் பாட்டி மாதவி..... அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, பசி பசி என்று கதறும்
சின்ஞ்சிறு பிள்ளைகளுடன் அவள் நின்ற கோலத்தை அவள் பல முறை சொல்லக்
கேட்டிருக்கிறேன். கேட்ட நேரம் மட்டுமல்ல, அதை அசை போட்ட நேரமெல்லாம்
அழுதிருக்கிறேன். ஆனால் மாதவி கலங்கவில்லை. எப்படியும் வாழ்ந்துவிட முடியும் என்று
நம்பினாள். எப்படியும் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்று
நம்பினாள். தன் கணவனுடன் சேர்ந்து உழைத்தாள்.. ஒரு நாளைக்கு 20 மணி நேரம்
உழைத்தாள்.... அவளால் முடிந்த்து. அவள் பிள்ளைகள் வளர்ந்தார்கள். பசி என்று வந்து
நிற்பவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் வள்ர்ந்தார்கள். இதோ உங்கள் முன் ஒரு
உதாரணமாய் நான் நிற்கிறேன். படித்த பெண்ணாய், பணி புரியும் பெண்ணாய், மனதில்
தோன்றியதை தைரியமாய் சொல்லும் கவிஞராய், கட்டுரையாளராய், எப்படி வேண்டுமானாலும்
நீஙகள் என்னைச் சொல்ல்லாம். ஆனால் நான் என்னை மாதவியாய் உண்ருகிறேன், சவீதாவாய்
உணருகிறேன்... ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும், ஒரு மாதவி, ஒரு சவீதா இருப்பதாய் நான்
நம்புகிறேன்.
வாய்ப்புகளையும்,
சந்தர்ப்பங்களையும் உலகம் பெண்களுக்கு வழங்காமல் போனால் தான் என்ன? வாழ்வதற்கான
வாய்ப்புகளைத் தேடிப் போக பெண்ணால் முடிகிறது. தேடி, தனக்கான வாய்ப்பை, தனக்கான
வாழ்வை சிறப்பாய் வாழ அவளால் முடிகிறது. அவளும் வாழ்ந்து, தன்னைச்
சுற்றியிருப்பவர்களையும் அரவணைத்துச் செல்ல அவளால் மட்டும் தான் முடியும். தன்
முன்னே இருக்கும் இடர்களை துச்சமாய்த் தூக்கியெறிந்து, தான் போக வேண்டிய பாதையில்
முன்னேறிக் கொண்டிருக்க அவளால் மட்டுமே முடியும்...... பாரதி சொல்கிறான்,
”வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மான்ஞ்சேர்க்கும்
மனைவியின் வார்த்தைகள்
கலியழிப்பது
பெண்களறமடா
கைகள் கோத்துக்
களித்து நின்றாடுவோம்...
பெண்மை வாழ்கவென்று
கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று
கூத்திடுவோமடா......”
அவன் சொன்னதை விட
வேறென்ன இருக்கிறது நான் சொல்ல......?
நன்றி: எழுதும் படி கேட்டுக்கொண்ட இனிய தோழி கவிஞர் இளம்பிறைக்கும், எப்படி எழுதுவது என்று கேள்விகளால் துளைத்த போதும் சலிக்காமல் பதில் சொல்லி என்னை எழுத வைத்த பிரியமுள்ள கவிஞர் நிலாமகளுக்கும்......
padikka vittalum savithakalum, maadhavigalum endrum erukirargal eanbadhu unmaielum unmai. aanal avargalin unnadha uzhaippai noogadikum silla sillarai piriyaigal (aadambarathirkaga, panathirkaga)avvargalukana pani vaipaium vazhkaiyayum paripadhu veadhanaikuriyadhu ellaya. aanal avargalaiyum dhandi thangalai pooll udhavum karangalum, erakka nenjangalum erupaadhu parumaiyae. unmai sollumedathae thunivai thndha Bardhikum avar kanda kanavai niraiveatrum, savthakalukum thangalai poondravargalukum EAN ENIYA VAZHTHUKAL.
ReplyDeleteஎல்லா கலைகளுக்கும் ஆத்திச்சூடியான தன்னம்பிக்கை என்னும் கலையை படித்தவள்...தைரியம் என்னும் போர் வாளை ஏந்தியிருந்தவள் //
ReplyDeleteஉடம்புக்கு முடியாம, கஷ்டப்படற மனுஷன் கிட்டே நியாயம் கேட்டு நான் என்ன செய்யப் போறேன்?//
மாதவிப் பாட்டியும் சவீதாவும் உச்சத்தில் நிற்கும் இடங்கள்.
//நான் என்னை மாதவியாய் உண்ருகிறேன், சவீதாவாய் உணருகிறேன்... ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும், ஒரு மாதவி, ஒரு சவீதா இருப்பதாய் நான் நம்புகிறேன்.//
உங்க எழுத்தின் வீர்யம் பிரம்மாண்டமாகி விட்டது ப்ரியா!
உங்க எழுத்தின் ரசிகை,டாக்டர் தோழியிடம் புத்தகத்தை காட்டினீர்களா?
அன்பின் சகோதரிக்கு...
ReplyDeleteவண்க்கம். நீண்ட நாட்களுக்குப் பின் உங்களின் பதிவு, அதுவும் ஒரு கட்டுரைநுர்ல் வெளியீடு. அதன் உள்ளடக்கத்திலிருந்து ஒரு கட்டுரை.
கட்டுரையை நெருக்கி வாசித்தேன் விட்டுவிடக்கூடாது என்கிற கவனத்துடனும்.
படித்து முடித்ததும் ஒரு நிமிடம் மௌனமாய் யோசித்தேன். இதுபோன்ற கதைகள் நிறைய சொல்லப்பட்டுவிட்டன, என்றாலும் தொடர்ந்து சொல்லவேண்டிய அவலத்தின் சமுகத்தில்தானே நாம் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறோம்.
இருப்பினும் உங்கள் எழுத்துக்களில் எப்போதும் ஒரு நம்பிக்கை இழையோடும். அதையே சவிதாவும் கொண்டிருப்பதான ஒற்றுமை அற்புதமான விஷயம். இந்தக் கட்டுரையில் உங்களின் விவரிப்பு... எளிமையான சொற்கள்...சொலலுகிற முறை..செய்தியின் உணர்வுத்தன்மை இப்படி எல்லா நிலைகளிலும் அபாரமாக உயர்ந்து நிற்கிறது கட்டுரை. வாசிப்போரை ஒரு கணமேனும் அசைத்துவிடும் ஆற்றலுடன் கட்டுரை அதன் போக்கில் அழுத்தமாய் வேரோடி நிற்கிறது.
என்ன உறுதியான நம்பிக்கையான சொற்கள்...
வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் உலகம் பெண்களுக்கு வழங்காமல் போனால்தான் என்ன?
நெஞ்சைப் பிளந்து அறைகின்றன இந்தச் சொற்கள்,, இதுபோதாதா?
இதுதான் எழுத்து, இதையே எழுதுங்கள்.
உங்களின் சுதந்திர வெளியின் எல்லையற்ற பறத்தல்களோடு,
இப்படி ஒவ்வொரு பெண்ணிட்மும் இவர்கள் என்ன வழங்குவது,, எனக்கானதை நான் பெற்றுவிடமுடியாதா? இயங்க முடியாதா? என்கிற நினைவு வந்துவிட்டால்,, பெண்ணிடம் எல்லாம் அஞ்சும் உலகம் மலர்ந்துவிடும்.
மனது துள்ளுகிறது. உங்களின் கட்டுரைத் தொனி இயல்பாகவும் மென்மையாகவும் ஆழமாகவும் மனசுள் ஊடுருவுகிறது, ஒரு தேளின் கொட்டலுக்குப் பின் இறுகும் வலியாய் மனசுள் சம்பவம் படிகிறது நீங்காது,
எழுதுங்கள் தொடர்ந்து.
இதுகூட பாரதி சொன்னதுபோல ரௌத்தரம் பழகு என்பதன் நகல்தான்.
தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வாசிப்பேன்.,
வாழ்க்கை தன் கோரக் கைகளால் கழுத்தை நெரிக்க முற்பட்ட போதும் கூட, அந்த கைகளை இறுக்கிப் பிடித்தபடி தன் பாதையில் தைரியமாய் நடக்க முற்பட்டு இன்று வெற்றிப் ப்டிகட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் -- என்ற வரிகள் என் மனதை தொட்டது. “அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்;என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது
ReplyDeleteசவிதாவின் கைகளை பற்றிக்கொள்ள வேண்டும் , பதிவை எழுதிய உங்கள் கைகளை ஒற்றிக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது !
ReplyDeleteசிலர் வாழ்வின் இலக்கணத்தை வாழ்ந்து காட்டுகிறார்கள். சவீதா போல். நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். குத்துவிளக்கு உவமை மனதில் உறைந்து கொண்டிருக்கிறது.
ReplyDelete///நான் பேசப்பேச அவள் முகம் இறுகிக் கொண்டே வந்த்து. மிகப்பெரிய போருக்குத் தயாராகும் ஒரு போர்வீரனின் கூர்மையும், கவனமும் அவள் கண்களில் ஒளிர்ந்தது.///
ReplyDelete///அதுங்க ரெண்டும் நல்லாப் படிக்கனும். நல்ல வேலைக்குப் போகனும். அது மட்டும் தான் மேடம் எனக்கு வேணும்’,.... இரண்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்த போது கண்களில் சந்தோஷம் மின்ன அப்படி சொன்ன சவீதாவைக் கட்டிக் கொண்டேன்.... ///
சவிதாக்கள் வாழவேண்டும், நீங்கள் பலரை வாழவைக்க வேண்டும். இந்தக் கட்டுரையை உங்களை எழுத வைத்த நிலாமகளுக்கு நன்றி. உணர்வின் கொந்தளிப்பில் தவிக்கிறேன் கிருஷ்ணப்பிரியா.
@ மதுமிதா...
ReplyDeleteமது மேம்... ப்ரியா ஒரு தன்னடக்கத்திலும் என் போன்றோரை முன்னெடுக்கும் விதமாயும் சொல்லும் வார்த்தைகள் ... 'இவர்களால் எழுதினேன்' என்பதெல்லாம்.
தெரிந்தவர் நலனுக்காக நண்பர்களிடமெல்லாம் பிரார்த்திக்கச் சொல்லிக் கேட்டுக் கொள்ளும் ப்ரியாவின் உயர்ந்த உள்ளமும் வீரியமிக்க எழுத்து வன்மையும் குடத்திலிட்ட விளக்காய்.
வலிக்கிற உணர்வை கூட வலிமையாய் எழுதுறீங்க ...அருமையா இருக்கு, வாழ்த்துக்கள்!
ReplyDelete