Saturday, April 19, 2014

அன்பெனப்படுவது

என்னுடன் பணிபுரியும் பலரும் வேறு வசதியான இடங்களுக்கு மாறுதலில்

 செல்லும் போது மனம் கொஞ்சம் வருத்தப்படும்.( வேலை குறைவான இடம்

 தான் வசதியான இடம்) நாம் இன்னும் எத்தனை நாள் தான் இப்படி பரபரவென

 சுழல வேண்டியிருக்குமோ என்று சில சமயங்களில் மனம் நொந்து

போவதும், வேலை இல்லாமல் பலரும் துயரப்படுகையில் வேலை அதிகம்

 என்று அலட்டிக் கொள்வது டூ மச் என்று நானே என்னை சமாதானப்படுத்திக்

 கொள்வதும் அடிக்கடி நிகழ்வது தான்.தினமும் நூற்றுக்கணக்கான மனிதர்களை சந்திக்கும் பணி என்பது சில

 சமயங்களில் சுவாரசியம் நிறைந்ததாகவும், சில சமயங்களில் என்ன

 வாழ்க்கை என்ற அலுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஆனால் பல

 சமயங்களில் நமக்கு கிடைத்திருப்பது அற்புதமான வாழ்வு, இதை சரியாக

 வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாய் விதைக்கிறது.

சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாவலாய், ஒவ்வொரு

 கவிதையாய் புரட்டிப் படிக்கப் படிக்க, கிளை விரித்துப் பரவும் ஆலாய் மனதில்

 நிறைகின்றார்கள்....


மருத்துவர் பத்மாவதி என்றொரு அன்பான மருத்துவர் எங்களுடன் பணியில்

 இருந்தார். மேற்படிப்புக்கென்று சென்னை சென்று விட்ட அவரை இன்னமும்

 தேடுகின்ற மக்கள் தினமும் வருகிறார்கள். அவரது அன்பான அணுகுமுறை,

மனிதர்களை பேச விட்டு பிறகு நோயைப் புரிந்து கொள்ளும் விதம்,

 அதற்கேற்ற சிகிச்சை போன்ற காரணங்களால் இன்னமும் மக்கள் மனதில்

 நிற்கிறார் அவர்.

வெள்ளிக் கிழமைகள் கொஞ்சம் அதிகம் ஆயாசப்படுத்தும்.  நீரிழிவு மற்றும்

 இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அதிகம் வரும்

 நாள் அது. பெரும்பாலும் வயதானவர்கள் என்பதால், கை நிறைய

 மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, சாப்பிடும் முறையை சொன்னாலும்

 புரிந்து கொள்ள முடியாமல் (சிலருக்கு காது கேளாமை வேறு கூடுதல்

 சுமையாய்) திணறுவார்கள். அப்படி வருகிற அத்தனை

 அம்மா,அப்பாக்களுக்கும், அத்தனை தாத்தா, பாட்டிகளுக்கும் நான் செல்லப்

 பிள்ளை தான். யாருக்கு வாய்க்கும் இத்தனை உறவுகள்?


இன்று வந்த அந்த அம்மா ஓரிரு மாதமாக மாத்திரைகள் வாங்க வரவில்லை

 என்பது அவரது குறிப்பேட்டிலிருந்து தெரிந்தது. “ ஏன், ரொம்ப நாளா வரலைப்

 போலிருக்கு?” கேள்வியை எழுப்பியபடி நான் மாத்திரைகள் எடுக்க

 ஆரம்பித்தேன். அவர் என் கேள்வியை கவனிக்கவே இல்லை. என்னை

 அன்பொழுகப் பார்த்தவராய், “ நல்லா இருக்கீங்களாம்மா , மேடம் நல்லா

 இருக்காங்களா?”, என்று கேட்டார். வினாடி நேர சுதாரிப்பில் அவர் பத்மாவதி

 மேடம் பற்றிக் கேட்கிறார் என்று புரிந்து கொண்டேன்.”மேடம் தான் சென்னை

 போயிட்டாங்களே தெரியாதா”, என்றேன். ”ம்ம்ம்..., நான் கூட ரெண்டு மாசமா

 அந்தப் பக்கம் தான் இருந்தேன்ம்மா. அட்ரஸ் தெரிஞ்சா போய்

 பாக்கலாமேன்னு கூட நெனச்சேம்மா. ஜெபக் கூட்டத்துக்குப்

 போயிருந்தேன்”, என்றபடி சிரித்தார். மீண்டும் கேட்டார், “ நல்லா

 இருக்கீங்களாம்மா”. அடிக்கடி இப்படி கேட்கிறவர்களுக்கென்று என்னிடம்

 ஒரு பதில் இருக்கும், “ நீங்கள்லாம் இருக்கும் போது எனக்கென்ன குறை,

 நல்லா இருக்கேன்”, அதையே அவரிடமும் பதிலாய் சொன்னேன்.

மாத்திரைகளை வாங்கிக் கொண்டார். “ போயிட்டு வாங்க, இப்படி விட்டு

 விட்டு மாத்திரை சாப்பிடாம ஒழுங்கா சாப்பிடனும்”, என்றேன்.

இல்லம்மா, ஜெபக்கூட்டத்துக்குப் போனேனா, நோட்டு இங்கேயே வச்சிட்டுப்

 போயிட்டேன், அதான் அங்கேயும் வாங்க முடியலை”, என்றவரிடம் “ ம்ம்ம்,

 ஜெபத்தில எங்களையும் சேத்துக்கோங்க, எனக்காகவும் பிரார்த்தனைப்

 பண்ணிக்கோங்க”, என்றேன். சட்டென கைக் கூப்பி” நீங்க நல்லா இருந்தா

 தாம்மா என்னை மாதிரி யாருமில்லாம இருக்கிறவங்களுக்கு அனுசரனையா

 மருந்தாவது கிடைக்கும், உங்க நன்மைக்காக நான் எப்பவும் ஜெபிப்பேம்மா”,

 என்று நெகிழ்ந்தார். கண்கள் பனித்தது எனக்கு, என்ன செய்து விட்டேன் நான்.

 ஓரிரு நிமிடங்கள் இவர்களிடம் பேசுவதைத் தவிர..... மாறுதல் கிடைக்காமல்

 இந்த துறையிலேயே பணிபுரிய வாய்ப்பு தந்திருக்கும் கடவுளை நன்றியோடு

 நினைத்துக் கொண்டேன்.....

3 comments:

 1. ஜெபத்தில எங்களையும் சேத்துக்கோங்க, எனக்காகவும் பிரார்த்தனைப்

  பண்ணிக்கோங்க//

  நாம் நமக்காக ஜபம் செய்யும்போது
  இறைவன் நம் அருகில் இருக்கிறார்.

  நாம் பிறருக்காக ஜபம் செய்யும்போது
  இறைவன் நம்முள் இருக்கிறார்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். இறைவன் இருப்பதை உணர்கிறோம்......இப்படி மனிதர்கள் வடிவில், அடிக்கடி......
   எப்படி இருக்கிறீர்கள்? பல நாளாயிற்று உங்களுடன் பேசி..... உடனே வந்து கருத்துரை இட்டமைக்கு நன்றிகள் ....

   Delete
 2. ஹய்யோ...!! பொறா...ம்மையா இருக்கு பிரியா...:)

  மனிதர்களை-மனம் கனிந்த மனிதர்களை சம்பாதிக்கும் உங்க வேலையில் அன்பென்பது மூலதனம்!!!

  ஜமாய் பெண்ணே.

  ReplyDelete