Friday, November 26, 2010

(எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என்று படுத்திருந்த நேரம் எழுதியது....இரண்டு வருடம் முன்பு..... சும்மா ஒரு "திரும்பிப் பார்க்கிறேன்" தான்....)
**********************************************************************************************
அன்பான எலும்புகளே.....

எத்தனைதான்
உங்களுக்குள்
சண்டையென்றாலும்
பேசித்
தீர்த்திருக்கலாம்...!

என்ன
பிரச்சனை என்று

Thursday, November 25, 2010

என் பிறந்த நாளில்

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி....
வீட்டுக்கு வந்து வாழ்த்திய சுகன், வதனா, ஜோதிக்கு நன்றி...சுகன்  எனக்களித்த கேக் இங்கே.......அன்பின் இனிமை....

Tuesday, June 1, 2010

கல்லாய் நீ

கழுத்தில் தாலியும் ,
இடுப்பில் அரைமூடியும்
மட்டுமே அணிந்தபடி
நளினமாய் தான் நிறுத்தப்பட்டிருக்கிறாய் நீ....

போற்றி போற்றி என்று
மெய் மறந்து பாடியபடி
கரம் கூப்பி அமர்ந்திருக்கின்றனர்
எதிரே எத்தனையோ பெண்கள்.....

எண்ணெய் தடவிவிட்டு
மஞ்சள் முழுக்காட்டி
எத்தனையோ திரவங்களால்
நீ மூச்சு திணற,
குளிரால் விறைக்க
உன்னை குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.....

எனக்கென்னவோ
உடலே கூசுகிறது.....
என்ன தான் நீ கல்லாய் நின்றாலும்
அர்ச்சகர்கள் ஆண்கள்ஆயிற்றே ......

கிருஷ்ணப்ரியா

(நன்றி: சௌந்தர சுகன்)

Monday, April 19, 2010

நீயும் உன்னில் அவளும்

நீயும், உன்னில் அவளும்.


தீண்டலும்,
தீண்டாமையும் இல்லாத
தூயவள் என்று
உன்னைச் சொல்லிக் கொள்கிறாய்..

நாற்பது வயதிலேயே
பேரன் பேத்திகளுடன்
கொஞ்சி குலாவுவதை
பெருமையாய் பேசுகிறாய்.....

துணைவி ஒருத்தியின்
கதகதப்பில் இருந்தபடி
உன்னை
அடித்து துவைத்து
அலட்சியப்படுத்தும் கணவனை
மாமியார் என்ற பெயரின்
கௌரவம் காக்க
சகித்துப் போகிறாய்.....

இப்படி
சிரித்து சிரித்து
உன் சகிப்பை
நீ சொல்லும் நேரங்களில்
எனக்குத் தெரிகிறாள்...
உன்னுள் இருக்கும் பெண்ணொருத்தி.

பதினாறு வயதிலேயே
சமூகம் போட்ட
தாலி என்ற கைவிலங்கை
அவிழ்க்க முடியாத
கையறு நிலையில் கண்ணீர் உகுத்தபடி....


கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்.....

Sunday, April 18, 2010

என் தேரைகள்

எப்படித் தான் விரட்டினாலும்
மீண்டும் மீண்டும் வந்து விடுகின்றன
குட்டிக் குட்டியாய்
தேரைக் குஞ்சுகள்...

விரட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு பொழுதிலும்,
தட்டிவிடுதலும், உடைந்து சிதறலும்
தவறாமல் நிகழ்கிறது....

எப்போது வருமோ
என்று பயந்தபடியே தான் திறக்கிறேன்
காற்றோட்டமான சமையலறைக்காக
ஆசையாய் வைத்த
சன்னல் கதவுகளை.....

அருகேயே நிற்கும்
வாழை மரங்கள் தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழல் என்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
வெட்டிவிட மனம் வரவில்லை
தேரைகளின் இருப்பிடத்தை....

வாழ்க்கையின் எத்தனையோ சிக்கல்கள்
இப்படித்தான்...

எடுக்க வழியிருந்தும் மனமில்லாமல்
அப்படியே சிக்கலாய்.....

கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்.



(நன்றி: சௌந்தர சுகன்)

Tuesday, April 13, 2010

புதிது

எதுவும் எழுதாமல்
இலக்கியம் சேராமல்
வீணாகிப் போனதே
பல வருடங்கள் என்று
ஏங்கி நின்றபோது
ஓடி வந்து கட்டிக்கொண்டது
என்
பத்து வயது கவிதை.....

ஆசை

உப்பு குறைந்ததற்காக

குழம்பை தலையோடு கொட்டிய

தாத்தாவைப் பற்றி

கதை சொல்லும் பாட்டி

எப்போதும் முடிக்கிறாள்

அவருக்கு என் மேல

ரொம்ப ஆசை என்று சொல்லி.

ஒவ்வொரு முறையும்

புரியாமல் யோசிக்கிறேன்

ஆசைக்கான அர்த்தத்தை..

----கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்

நன்றி : உயிரோசை இணைய இதழ்.