Wednesday, February 28, 2018

கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை

காலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன….
ஆனால்
காலத்தின் கண்களை  பனிக்க வைக்கும
விழாவாக நடக்கிறது இந்த விழா…
என் நீண்ட பணிக்காலத்தில்
எத்தனையோ
கண்காணிப்பாளர்கள்…
நீங்கள் மட்டும் தான்
அன்பின் பெருமரமாய்
ஆதூர விழுதுகளுடன்
மனதில் வேர்பிடித்தவர்…..
சினம் என்ற சேர்ந்தாரைக்கொல்லியை
அருகில் சேர்க்காத உங்கள்
சிறந்த பாடம்
எல்லோரும் படிக்க வேண்டியது….
அனைவரின் தேவைகளையும்
உணர்ந்தபடி
அலுவலக வசதிகள் இல்லாத சூழலிலும்
அன்றாடம் உழைத்தது உங்கள்
கடமைக்கு கட்டியம் கூறும் எங்கள் மனதில் என்றும்…..
ஓய்வறியாத உங்கள் வாழ்வில்
எல்லா வளங்களும், நிறைவான மகிழ்வும்
எப்போதும் நிறைந்திருக்கட்டும்…
எப்போதும் புன்னகை நிறைந்த
உங்கள் பொன்முகம்
பொலிவோடிருக்கட்டும்….
எங்கள் வாழ்வின் எல்லா காலங்களிலும்
உடனிருந்து வாழ்த்த உங்கள்
கரங்கள் எங்களிடம் தொடர்பிலிருக்கட்டும்ம….
மகிழ்வாய், நிறைவாய்
நீடு வாழ வாழ்த்துகிறேன்
என் அன்புக்குரிய கண்காணிப்பாளரே...
மருத்துவர் மணிமாறன் சார் பிரிவுபச்சார விழாவில் வாசித்த கவிதை

அடைமழைக் காலத்தில்
இடை வந்த சூரியன் போல
இந்த
அரசு மருத்துவமனைக்கு
அபயம் அளிக்க வந்தவர் நீங்கள்…
உங்கள் அன்பெனும் மந்திரத்தால்
அழகாய் பூத்தது இந்த
மருத்துவமனை
ஒரு சோலையைப் போல…
அதிகாரத்தின் எல்லைகளை
புன்சிரிப்பென்னும்
வண்ணப்பொடியால்
வரையத் தெரிந்த உங்கள் முன்
எப்போதும் மறைந்து போகும்
அகங்கார வெள்ளைப்புள்ளிகள்….
மனிதர்களிடம் மனிதத்தை மட்டுமே
தேட யத்தனிக்கும்
மகத்துவமான மனம் உங்களுக்கு
அதனால் தான்
மாதங்களில் தான் பழகினோம் என்றாலும்
மனது வலிக்கிறது உங்கள் பிரிவில்…
வலியோடு வருகிற
ஒவ்வொருவரையும்
கருணையோடு அணுகத் தெரிந்த
உங்களுக்கு
கடுமை ஒருபோதும்
கைவரப் பெற்றதில்லை…
குறைகளைக் கூறியபடி
தொடர்ந்து வந்த குழுக்களைக்கூட
இயல்பான உண்மைகளை
இன்முகத்துடன் கூறி
இணக்கத்துக்குரியவர்களாய்
மாற்றியது
உங்கள அன்பதிகாரத்திற்கு
அழியா சாட்சி……
மருத்துவரய் மட்டுமல்ல
எங்களுக்கு இனிய
நண்பராகவும் மனதில்
நிலைத்தவர் நீங்கள்…..
செல்லும் வழியெல்லாம்
அன்பை விதைத்துச் செல்லும் உங்கள் இன்முகம்….
எங்கள் பிரியத்துக்குரிய மருத்துவரே…..
வாழ்வின் பெருவீதியில்
நீங்கள் விரும்பியதெல்லாம்
கிடைக்கட்டும்….
வளமும் மகிழ்வும் நிறைவுமாய்
வசப்படட்டும் வாழ்வு…..
மனமார்ந்து நெகிழ்வாய் வாழ்த்துகிறேன்…
வாழ்த்துக்கள் சார்…

ஹேமலதா,
மருந்தாளுநர்,
அரசு மருத்துவமனை,
பூதலூர்….
பூதலூர் அரசு மருத்துவமனையின் இரண்டு நிகழ்வுகள் மனதை நெகிழ்வும், பெருமிதமும் கொள்ளச் செய்வது....
ஒன்று எங்கள் அன்புக்குரிய மரு.மணிமாறன் அவர்களின்  பிரிவுபச்சார விழா
மற்றது
எங்கள் அலுவலக கண்காணிப்பாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களது பணி ஓய்வு பாராட்டு விழா...
உணர்ச்சிகளின்  குவியலாய் இருந்த இவ்விரு நிகழ்வுகளும், இந்த வருடத்தின் முக்கியமான மறக்க இயலாத நிகழ்வுகள்... அலுவலகம் சார்ந்து   எத்தனையோ நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய அனுபவம் இருந்த போதிலும், இந்த   இரண்டு விழாக்களும் புதிய அனுபவங்களைத் தந்தவை.. மனதுக்கு மிக நெருக்கமான இருவரது அலுவலக ரீதியிலான பிரிவு கூட எத்தனை வருத்தத்தைத் தந்துவிடுகிறது....
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்றென்றும் மறக்கவியலாத பதிவுகளாய் மனதில் நிலைப்பவை....








Thursday, May 11, 2017

செவிலியர் தின வாழ்த்துக்கள்....

நாளை.. 12/5/2017 செவிலியர் தினம். அதையொட்டி எழுதிய கவிதை... ஒரு நாள் முன்னதாகவே நான் பணிபுரியும் அரசு மருத்துவமனை, பூதலூரில் செவிலியர் தினம் கொண்டாடினோம். அதில் படிப்பதற்கு எழுதியது.  எனக்கு நிறைவைத் தந்த கவிதை... பல நாட்களுக்குப் பின் வலைப்பக்கம் வர வைத்திருக்கும் கவிதையும் கூட....
------------------------------------------------------


ஒரேயொரு ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவில் தொடரும்
இந்த செவிலியர் தினம்
உருவாக்கிக் கொண்டே இருக்கிறது
கோடானுகோடி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்களை....
இந்த வெள்ளையுடுப்புக் காரிகைகளால் வளர்வது மனிதர்களின் ஆரோக்கியம் மட்டுமல்ல
உலகமெங்கும் பரிவும், கனிவும் கூடத்தான்....
அவர்களது நிற்காமல் ஓடும் கால்களின் சக்கரங்களால் தான்
மரித்துவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்....
வெள்ளை .....
தேவதைகளின் உடையானது
நீங்கள் அணியத் துவங்கிய பின் தானோ!!!!
நோய்மையில்  தவிக்கும்
ஒவ்வொரு உயிரும் உங்கள் கரங்களில் ஒரு பூவென மலர்கிறது...
வாதையிலிருந்து விடுதலை பெறும் அவர்களது வாழ்வில்
நிரந்தரமான மகிழ்வாய்
உங்கள் முகம் பதிந்து போகிறது....
உங்களது சேவைகள் இல்லாது போனால்
மருத்துவம் என்ற சொல்லுக்கே மகத்துவம் இல்லாது போகும்...
வாழ்வின் வழி நெடுக
தொடர்ந்து கொண்டேயிருக்கும்
கருணையின் நதி ...
காலனின் கோரச்சூட்டிலிருந்து
தடுத்துக் காக்கும் நிழல்தரு...
அன்பின் பெயரால் அழைக்கப்படும்
ஒற்றை வார்த்தை...
அளவற்ற தாய்மையின் ஒரே அளவீடு..
அங்கிங்கெனாதபடி
எங்கும் வியாபித்திருக்கும்
கடவுளின் மாற்றுரு...
துயரெனும் வெம்மை தணிக்கும்
பெருமழை.....
...........
எப்போதும் எங்கள் மனங்களில்
குடியிருக்கும்
அன்பான செவிலியர்களுக்கு
இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்
......


2001 ல்முதல் முதலாக நான் பார்த்த செவிலியர்கள் சாந்தி , சரஸ்வதி, மோகனா முதல் இங்கிருந்து மாறுதலில் சென்றுவிட்ட மஞ்சு, உமா,  சூர்யா,சாந்தி, ஜெனிட்டா,ஜெனிஃபர்,  சங்கீதா, சுகன்யா உள்ளிட்ட அனைத்து அன்பு பிள்ளைகளுக்கும் இதை டெடிடேட் செய்கிறேன்

Monday, August 1, 2016

இன்று புதிதாய்......

பல வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த அலுவலகத்திற்குள் சட்டென்று ஒரு நாள் நுழைவது கொஞ்சம் எதிர்பார்ப்பும், கொஞ்சம் ஆவலும் நிரம்பிய நிகழ்வு ....

நம்மை யாரென்று தெரியாமல் குறுகுறுவென்று பார்ப்பவர்களும்,
ஓ.. இங்கே இதற்கு முன் வேலையில் இருந்தீர்கள் தானே என்ற ரீதியில் அரைகுறையாய் சிரிப்பவர்களும்,
இது ஏன் இங்கே மறுபடியும் வந்திருக்கு என்கிற மாதிரி முகம் சுளிப்பவர்களும்,
ஆகா... எப்படி இருக்கீங்க, எவ்வளவு நாளாச்சு பார்த்து என்று அன்பால் வரவேற்பவர்களும்,
எத்தனையோ பேச இருந்தும் எல்லோர் முன்பும் பேச யோசித்து கண்களால் இயலாமையை வழிய விடுபவர்களும் ,
கூட பணியாற்றிய போது செய்த துரோகம் மனதில் உறுத்த. கண் பார்க்க தவிர்த்து நிலம் பார்த்து பேசுபவர்களும் ......
இப்படி பலரும் நிறைந்த ஒரு இடத்தில் மனம் முழுக்க உற்சாகத்துடன் ,
முகம் மலர ஒரு உலா வருவது கூட புதிதாய் பிறந்த உணர்வைக் கொடுப்பதை இன்று அனுபவித்து உணர்ந்தேன்..
 நம் எதிர்பார்ப்பு , ஆவல் எல்லாம் சரிகின்ற போதும் கூட...

நன்றி: 
பழைய அலுவலகத்திற்கு அருகில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தி,
 இந்த  அருமையான அனுபவத்தைத் தந்த நான் பணி புரியும் துறைக்கு....

Monday, June 20, 2016

கையறுநிலை

காலில் செருப்பில்லாத
குழந்தையைக் காட்டி
சமாதானம் எதுவும் செய்துவிட முடிவதில்லை,
தன் ஷூக்கள் புதிதில்லை
என்று புலம்ப மகனை...
செருப்பு வாங்கித் தராதது
அவன் பெற்றோரின் குற்றமேயன்றி
என் குற்றமல்ல என்று வாதிடும் அவனிடம் சொல்ல இயலவில்லை, பெற்றோரே இல்லாத பிள்ளைகள் பற்றிய நிஜங்களை....

Sunday, June 19, 2016

முக்கூடலில் ஒரு இலக்கிய குளியல்...

வெகு நாளாயிற்று வலைப் பக்கம் வந்தே.... முகநூல் போவது போல் வலைதளம் வராமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்தது. இதோ, மீண்டும் வந்தாச்சு...

Sunday, May 10, 2015

என் சுயம்

உனக்குப் பிடித்தமான
வண்ணக் கலவைகள் கொண்டு
என்னை வரைய முற்படுகிறாய்....
எனக்கான வண்ணங்களில்
உன் தூரிகை நனைந்து விடாதிருக்க
மிகுந்த பிரயத்தனம் செய்கிறாய் ...
புராதனச் சுவரில்
அறையப்பட்டு இருக்கும்
சட்டகத்துக்குள்
என் ஓவியத்தை திணித்துவிடும் யத்தனிப்பில்
விரயமாகிக் கொண்டிருக்கிறது
உன்னிடமிருக்கும் நமக்கான நேரம்.  ..
அந்த கால இடைவெளியில்
வில்லினின்று பறக்கும் அம்பாக
சிறகு விரித்து சிட்டெனப் பறக்கிறது என் சுயம்....



நன்றி:  வறண்ட ஒரு மதிய பொழுதை கவிதையாக்கும் பொழுதாக மாற்ற முடிந்த அமிர்தம் சூர்யாவுக்கும்,
அக்கறையுடன் தவறுகளைத் திருத்தும் பாரதிக்குமாருக்கும்....
பிரசுரித்த கல்கிக்கும்

Monday, March 9, 2015

படித்ததில் பிடித்தது



உருமாற்றம்

சிறகுகளின் மீதான ஆசை
தினமும் அவளை வதைக்கிறது....
குதிகால் வெடிப்புகளிலும்
நகக்கண்களிலும்
அழுக்கில்லாத தொலைவிற்கும்
(அல்லது நகங்களும் குதிகால் வெடிப்புகளும்
இல்லாத ஒரு தேசத்திற்கு)
வியர்வையும், மாதவிடாய் ரத்தமும்
ஒழுகாத  உயரத்திற்கும்
(அல்லது சுரப்பியும் யோனியுமற்ற
அந்தர வெளிக்கு)
தன்னைக் கொண்டு செல்லும்
ஒரு ஜதைச் சிறகுகளைக்
காய்கறிகளுக்கிடையிலும்
பாத்திரங்களினடியிலும்
அவள் தேடித் தவிக்கிறாள்.
மாறாகத் துயரங்களின் பளு தன்னை
இன்னும் தரைதட்டாத பள்ளத்தை
நோக்கியே இழுக்கிறது என்று
உன்னிடம் புலம்புகிறாள்...
தேவதை என அவளை நீ
விளித்தவொரு மாலையிலிருந்து
அவள் பாடு இவ்விதமாய்க் கழிவதை
நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்....
அவ்வப்போது குழந்தையின் பீத்துணியைத்
தன் தோள்களின்மீது
ஒட்டவைத்துக் கொண்டு
குழந்தைகளும் தேவதைகளின் உலகத்தைச்
சேர்ந்தவர்கள்தானே என்று
கேட்டுவிட்டு உன் பதிலுக்காக
அவள் ஆவலுடன் காத்திருக்கிறபோதெல்லாம்
மிகத் தாமதமாக உன் கண்களில்
கண்ணீர் பெருகுகிறது
அவளை நீ
அந்தப் பெயரால் அழைத்திருக்கக் கூடாது....

-------------------------------------------------------------------------------------------------

கவிஞர் பா. வெங்கடேசனின் “ நீளா “ கவிதைத் தொகுப்பிலிருந்து