Monday, August 1, 2016

இன்று புதிதாய்......

பல வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த அலுவலகத்திற்குள் சட்டென்று ஒரு நாள் நுழைவது கொஞ்சம் எதிர்பார்ப்பும், கொஞ்சம் ஆவலும் நிரம்பிய நிகழ்வு ....

நம்மை யாரென்று தெரியாமல் குறுகுறுவென்று பார்ப்பவர்களும்,
ஓ.. இங்கே இதற்கு முன் வேலையில் இருந்தீர்கள் தானே என்ற ரீதியில் அரைகுறையாய் சிரிப்பவர்களும்,
இது ஏன் இங்கே மறுபடியும் வந்திருக்கு என்கிற மாதிரி முகம் சுளிப்பவர்களும்,
ஆகா... எப்படி இருக்கீங்க, எவ்வளவு நாளாச்சு பார்த்து என்று அன்பால் வரவேற்பவர்களும்,
எத்தனையோ பேச இருந்தும் எல்லோர் முன்பும் பேச யோசித்து கண்களால் இயலாமையை வழிய விடுபவர்களும் ,
கூட பணியாற்றிய போது செய்த துரோகம் மனதில் உறுத்த. கண் பார்க்க தவிர்த்து நிலம் பார்த்து பேசுபவர்களும் ......
இப்படி பலரும் நிறைந்த ஒரு இடத்தில் மனம் முழுக்க உற்சாகத்துடன் ,
முகம் மலர ஒரு உலா வருவது கூட புதிதாய் பிறந்த உணர்வைக் கொடுப்பதை இன்று அனுபவித்து உணர்ந்தேன்..
 நம் எதிர்பார்ப்பு , ஆவல் எல்லாம் சரிகின்ற போதும் கூட...

நன்றி: 
பழைய அலுவலகத்திற்கு அருகில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தி,
 இந்த  அருமையான அனுபவத்தைத் தந்த நான் பணி புரியும் துறைக்கு....

Monday, June 20, 2016

கையறுநிலை

காலில் செருப்பில்லாத
குழந்தையைக் காட்டி
சமாதானம் எதுவும் செய்துவிட முடிவதில்லை,
தன் ஷூக்கள் புதிதில்லை
என்று புலம்ப மகனை...
செருப்பு வாங்கித் தராதது
அவன் பெற்றோரின் குற்றமேயன்றி
என் குற்றமல்ல என்று வாதிடும் அவனிடம் சொல்ல இயலவில்லை, பெற்றோரே இல்லாத பிள்ளைகள் பற்றிய நிஜங்களை....

Sunday, June 19, 2016

முக்கூடலில் ஒரு இலக்கிய குளியல்...

வெகு நாளாயிற்று வலைப் பக்கம் வந்தே.... முகநூல் போவது போல் வலைதளம் வராமல் இருப்பது ஒரு குறையாகவே இருந்தது. இதோ, மீண்டும் வந்தாச்சு...