Thursday, March 10, 2011

ஒரு திரைப்படம்....




சினிமா பார்ப்பதில் பெரிய ஆர்வம் ஏதுமில்லை எனக்கு.கொஞ்சம் பழைய படங்களைப் பார்க்க வேண்டுமென்று சில சமயம் தோன்றுவதுண்டு. நினைவு வரும்போது அந்தப் படங்களின் பெயரை எழுதி வைத்தால் சி.டி. வாங்கிப் பார்க்கலாம் தான். எதையுமே உடனே எழுதி தான் நமக்கு பழக்கமில்லையா, அது அப்படியே மறந்து போய்விடும்..
அடிக்கடி சினிமா பார்க்கும் என் பிள்ளைகள் என்னை இந்த படம் பாருங்கம்மா அந்த படம் பாருங்கம்மா என்று தூண்டில் போடுவதுண்டு... அப்போது தானே அவர்கள் பார்க்கும் போது ' எப்போ பார்த்தாலும் சினிமா பார்த்துகிட்டே இருங்க, கண் கெட்டுப் போகப் போகுது' என்று நான் கத்தாமல் இருப்பேன்? அதற்கான ஒரு வழி தான் அது... 'போங்கடா வேற வேலையில்ல' என்பது தான் எப்போதும் என் பதிலாக இருக்கும்.

 இரண்டு வாரத்துக்கு முனனால் தொலைகாட்சி ஒன்றில் தமிழ் பேசி வந்த ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் வழக்கம் போல என்னை அழைத்தனர். படத்தின் பெயர் "சூப்பர் மேன் ரிடர்ன்ஸ் ". என்னமோ ஒரு
 மூடில்  நானும் பார்க்க ஆரம்பித்தேன். 

ஒரு காட்சியில் விமானத்தில்
வந்த எல்லோரையும் காப்பாற்றும் சூப்பர் மேன் குறிப்பிட்ட பெண்ணைப்
 பார்த்து 'உனக்கொன்னும் ஆகலையே' என்று கேட்டதும் 'அடடா இது வெறும்
சூப்பர் மேன் படமா இல்லையே' என்று ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். 
அழகான ஒரு காதல் இழை கதை முழுவதும் ஓடுவதை ரசிக்க முடிந்தது.
 இரண்டு வருடமாக தன்னிடம் சொல்லாமல்காணாமல்  போன சூப்பர் மேன் மீது கோபப்படும் கதாநாயகி அவன் மீதுள்ள காதலால் தவிப்பதும், 
அவனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் crypton பற்றி தெரிந்து கொண்டு அவனைக்
 காப்பாற்ற தாமதிக்காமல் செயல்படுவதும் இறுதியில் சிகரெட் பற்ற வைக்கும்
 காட்சியில் அவனைத் தேடுவதும் நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை....
அதில் என்னை கவர்ந்த விஷயம், என்னை எழுதத் தூண்டிய விஷயம்
கதாநாயகன் அவள் மீது  காதல் கொண்டிருந்தும், அவளுடன் முழுமையாக வாழமுடியாமல்  ஏங்குவதும், அவள் கணவனுடன்  வாழ்வதைக் கண்டு ஒருவித ஏக்கத்தோடு தவிப்பதும் தான். எல்லோரும் கண்டு அதிசயிக்கும் சக்தி பெற்ற சூப்பர் மேன் ஏங்கும், தவிக்கும் அந்த காட்சிகள் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறது....
ஏனோ எனக்கு புராண காலத்து ஸ்ரீராமர் நினைவுக்கு வந்தார். ஒரு பெண்ணாய் நின்று சீதையின் துயரத்தைக் கண்டு கோபப்பட்ட, கண்ணீர் விட்ட என்னை அந்த சினிமா ராமரைப் பற்றி சிந்திக்க வைத்தது. ராஜ தர்மம் காப்பதற்காக தன மனைவியைப் பிரிந்த ராமன் இப்படித் தான் கலங்கியிருக்கக் கூடுமோ? எத்தைனையோ வசதிகள் இருந்தும் காதல் மனைவி அருகில் இல்லாத சோகம் அவனை எப்படி தாக்கியிருக்கும்?! சீதையைப் பிரிந்த பின் ராமன் திருமணம் செய்துகொண்டதாக கதைகள் இல்லை. (ஒரு வேளை அப்படி ஏதும் கதை இருக்கா) அவளைக் கண்டதும் ஆரத் தழுவியிருக்க வேண்டியவன் அவளுக்கு சோதனைகளை உத்தரவிட்ட போது வேதனையோடு தானே இருந்திருக்கக் கூடும் என்றெல்லாம் பலதும் தோன்றிற்று எனக்குள்..

சாதாரண மனிதனாக தன்னுடன் இருக்கும் மனிதன் தான் சூப்பர் மேன் என்று கதாநாயகிக்குப் புரியவில்லை.. அவள் அந்த மனிதனை அல்ல, அவனுள் புதைந்திருந்த அந்த அதீத சக்தியை, தானும் மற்றவர்களும் ஆபத்தில் இருக்கும் போது ஓடி வந்து காப்பாற்றி விடுகிற அந்த அற்புதத்தைக் காதலிக்கிறாள்.... பொதுவாகவே பெண்கள் ஆண்களுக்குள் ஒரு ஹீரோயிசத்தை தேடுகிறார்கள். நான் இருக்கிறேன் உனக்கு என்று தைரியம் சொல்கிற, பிரச்சனை வரும் போது ஆதரவாய்  இருக்கிற ஒரு ஹீரோவைத் தேடத் தான் செய்கிறார்கள். அப்படி ஒரு சூப்பர் மேனை அந்த நாயகி விரும்பியதில் அதிசயம் இல்லை. அது ஆங்கிலப் படமாக இருந்ததால், அவள் கணவன் குழந்தை இருந்தும் கூட, சூப்பர் மேனை கட்டி  அணைத்தப்படி வானில் பறக்கிறாள். தமிழ் சினிமா என்றால் அவனை அண்ணா என்றோ, தோழா என்றோ அழைத்திருக்கக் 
கூடும் அந்த கதாநாயகி... ஆங்கிலப் படம் என்பதால் நல்ல வேளை அப்படி நிகழவில்லை.அப்படி பறக்கும் போது, தன்னை பிரிந்து போனதைப் பற்றி பேசுகிறாள் அவனிடம். தன கணவன் கூட தன்னை இப்படி வானில் பறக்க வைப்பதுண்டு என்கிறாள். அது நிச்சயம் இப்படி இருக்காது என்று கூறுகிறான் சூப்பர் மேன். அவள் கீழே பார்க்கிறாள். என்ன ஒரு காட்சி... நமக்கும் கூட அப்படி பறக்கும் ஆர்வம் மேலிடுகிறது.... பறவையைப் போல, நாம் மேலிருந்து கீழே உள்ள காட்சிகளைப் பார்க்கும் அந்த அனுபவம் வாய்த்தால் எப்படி இருக்கும்.... அவனை மேலும் இறக்கிக் கொள்கிறாள் நாயகி... ஒரு சுற்று முடிந்து திரும்பவும் வீட்டில் இறக்கி விடப் போகும் போது காதலாகிக் கசிந்து அவனை முத்தமிட எத்தனிக்கிறாள்.... அவனும் ஆவலுடன் அதை ஏற்க முன்வருகையில் சட்டென அவள் விலகி, தன கணவன் பற்றி யோசிக்கிறாள். சூப்பர் மேனுடன் சேர்ந்து நாமும் கூட கொஞ்சம் தவித்துப் போகிறோம் அந்த காட்சியில்....

மிகவும் மோசமாக அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் சூப்பர் மேனைப் பார்க்கப் போகும் கதாநாயகியும், அவள் குழந்தையும் அந்த நிலையில் சூப்பர் மேனைப் பார்த்து தவிக்கும் காட்சியும், ஓடிப் போய் சூப்பர் மேனை முத்தமிட்டு வரும் அந்த குழந்தையின் பாசமும் நெகிழ வைக்கிறது. இறுதிக் காட்சியில் சிகரெட் பற்ற வைக்கப் போகும் போது சூப்பர் மேன் வருவான் என எதிர்பார்த்து அவள் ஏமாற்றத்தோடு   நிற்கிறாள். அப்போது மேலே உள்ள மகனின் அறையிலிருந்து 'பை' என்ற குரல் கேட்கிறது.அவள்  ஆச்சரியமாய் பார்க்க மகனது அறையிலிருந்து பறந்து வருகிறான் சூப்பர் மேன். பறந்து செல்ல எத்தனிக்கும் அவனிடம் அவள் கேட்கிறாள் 'மறுபடியும் எப்போது பார்க்கலாம்?' அவன் சிரித்தபடியே
 'எப்போது வேண்டுமானாலும்' என்றபடி வானில் பறக்கிறான்.... என்னமோ
 நாமும்  சூப்பர் மேன் பறக்கும் திசையில் பறக்கிற மாதிரி உணர்கிறோம்.....

இந்த சினிமா ஒரு தொடர் கதை மாதிரி தெரிகிறது. என் மகனிடம் கேட்ட போது இதற்கு முன் இரண்டு மூன்று பகுதிகள் வந்து இருப்பதாக கூறினான். முதல் பகுதியிலிருந்து பார்த்தால் ஒரு வேளை இன்னும் நன்றாக புரியக் கூடும். நாயகியின் குழந்தை சூப்பர் மேனுடையதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இருக்கலாம். பிறமொழிப் படங்களைத் தேடித் பார்த்து மிகச் சிறப்பாக விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் நெய்வேலி பாரதிக்குமார் தான் இந்தப் படத்தை இன்னும் அழகாக, தெளிவாக விமர்சித்து எழுத முடியும் என நான் நினைக்கிறேன்.

என்னைப் போன்ற உங்கள் எழுத்துக்களின் ரசிகைக்காக ஒரு முறை சூப்பர் மேன் ரிடர்ன்ஸ் படம் பாருங்களேன் பாரதி,,,,,

8 comments:

  1. அருமையான பகிர்தல் ப்ரியா... வித்தியாசமான உங்கள் சிந்தனைப் போக்கு எப்போதும் என்னைக் கவரும்... இப்போதும்...! சூப்பர் மென் படம் பார்க்கும்போது ஸ்ரீ ராமர் நினைவு மீண்டு எழுந்ததும் அதற்கான மாற்று சிந்தனையும் வெகு அழகு. சகல மனிதர்களையும் தன்னைப் போல் நினைக்கும் உன்னதம்.

    ReplyDelete
  2. நான் எதுவும் படிக்கலை.நன்றி.

    ReplyDelete
  3. நீ இடிப்பாரை இல்லா ஏமரா மன்னரோ? (அரசியோ?).... புகழ்வாரையன்றி இடிப்பாரை காணோமே?

    நாணயம் போல், அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு : positive and negative . சூப்பர்மேன் மாதிரி ஒரு சாதாரண படத்தைப் பார்த்து அதை ராமாயணத்தில் வரும் ராமரின் மனநிலைக்கு ஒப்பிடுவது, சிறப்பாகவே தோன்றுகிறது. எனக்கு நிறைய எழுத தோன்றுகிறது, ஆனால், நீயும் நானும் மட்டுமே வாதிடுவதானால், அதற்கு ஊடகங்கள் வேறு பல இருக்கின்றன. இந்த இடத்தில் நான் வாதிட்டால், பலரது கருதும் சங்கமிக்கும் என்ற எனது என்ணத்திற்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு இங்கு யாரேனும் இருக்கிறார்களா?
    அனைவரது கருதும் உன்னை பாராட்டுவது ஒன்றையே நோக்கமாக கொண்டு இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது. உனது எழுத்தில் எனக்கு முரண்பாடு கிடையாது என்றாலும், யாரிடமும் இருந்து மாறுபட்ட கருத்து வருவதே இல்லையே, ஏன்? இதில் எனக்கு சிறிய வருத்தம் உண்டு.

    ReplyDelete
  4. நான் இருக்கிறேன் கண்ணா உன் கருத்துக்கு ஆதரவு தருகிறேன்.இது போன்ற விமர்சனங்களில் நீ சொல்லுவது போல இரண்டு பக்கங்கள் உள்ளன.ராமனும் சுப்பர் மேனும் ஒன்றல்ல.விவாதங்கள் தேவையில்லை நமது மாறுபட்ட கருத்தை பதிவு செய்தாலே போதுமானது.

    ReplyDelete
  5. மிக்க நன்றி ப்ரியா .. என் மீதான நம்பிக்கைக்கு... உங்கள் அழகான , உணர்வுப்பூர்வமான கட்டுரையையும் மிஞ்சி நான் ஏதும் எழுதிவிடப்போகிறேனா என்ன? நீங்கள் குறிப்பிட்ட அந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை ... என்றாலும் உங்கள் விமர்சனம் என்னை பார்க்கத்தூண்டுகிறது பொதுவாக superman வரிசை படங்கள் குழந்தைகளை களிப்பூட்டும் படங்கள் என்ற எண்ணம் எனக்குண்டு குழந்தைகள் படம் என்றால் இரான் நாட்டு படங்கள்தான் சிறந்த படங்கள். என்னிடம் உள்ள படங்களில் உங்களுக்கு அனுப்புகிறேன்... அயல் மொழி படங்களை பெண்களும் குழந்தைகளும் அதிகம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு .. அனேகமாக வலைப்பூவில் அயல் மொழி பட விமர்சனம் எழுதிய முதல் பெண்மணி நீங்களாக இருக்க கூடும் .. அந்த வகையில் உங்களை வரவேற்கிறேன் welcome ... அதென்ன இடிப்பதற்காக இரண்டு பேர் கூடவே .... but உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு அப்படியே போட்டு இருக்கிங்க... இந்த மாரா வோட குறும்பு வேற ...முடியல ...

    ReplyDelete
  6. எனக்கும் கண்ணன் சொல்வது போல் அப்படி ஒன்றும் தோன்றவில்லை. இப்படியெல்லாம் உங்களுக்கும் யோசனைகள் வந்து விட்டதா? பெரிய எழுத்தாளர் ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துகள். நீங்கள் நிச்சியம் z studiuo எனும் சேனலை நேரம் கிடைத்தால் பாருங்களேன். .

    ReplyDelete
  7. சீதையைப் பிரிந்த பின் ராமன் திருமணம் செய்துகொண்டதாக கதைகள் இல்லை. (ஒரு வேளை அப்படி ஏதும் கதை இருக்கா)
    போச்சுரா.. இப்படி எல்லாம் ராமனை சந்தேகப்படக் கூடாது. உண்மையில் ராமன் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சீதையும் ராமனைத் தவறாகவே நினைக்கவில்லை.. மானுடப் பிறவியில் சில நேரங்களில் நிகழ்கிற போராட்டங்களில் சிலர் எப்படி முன்னுதாரணம் ஆகிறார்கள் என்பது அந்தக் கதை. ஆனால் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இப்போது நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன..

    ReplyDelete
  8. கதாநாயகன் அவள் மீது காதல் கொண்டிருந்தும், அவளுடன் முழுமையாக வாழமுடியாமல் ஏங்குவதும், அவள் கணவனுடன் வாழ்வதைக் கண்டு ஒருவித ஏக்கத்தோடு தவிப்பதும் தான். எல்லோரும் கண்டு அதிசயிக்கும் சக்தி பெற்ற சூப்பர் மேன் ஏங்கும், தவிக்கும் அந்த காட்சிகள் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறது.... indha parvai arumai.. edilume anbai unarum tanmai nandru

    ReplyDelete