Monday, December 12, 2011

இன்னும் இருக்கிறாள் அம்மா.....

(ஐ தமிழ் இணைய இதழில் வெளியான என் சிறுகதை இது.... இணைப்பு தந்தால் மட்டும் எப்படி? பதிவிடுங்கள் என்று என்னை செல்லமாய் வற்புறுத்தி என்னை பதிவிட வைத்த இனிய தோழி நிலா மகளுக்கு நன்றி......

 இணைப்பும் சிறுகதையும் கீழே....)

http://issuu.com/itamil/docs/ithamil_november_2011/28


வெகு நாளைக்குப் பிறகு அன்று அந்த பிரிவுபச்சார விழாவில்  ரேவதியைப் பார்த்தாள் இந்திரா... வாழ்வின் வேகமான ஓட்டத்தில் நண்பர்களை, உறவுகளை அடிக்கடிப் பார்ப்பது என்பது இயலாமல் போய்க் கொண்டிருக்கிறது...

பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்வில் எத்தனை விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்று சில போது நினைத்துக் கொள்வாள் அவள். இவளை தூரத்தில் பார்த்தவுடனேயே வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்து  வந்தாள் ரேவதி....
"ஏய்,,, இந்திரா... எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து..? இப்போ எங்கே இருக்க? எப்படி இருக்க? பசங்கல்லாம் எப்படி இருக்காங்க..? " வரிசையான கேள்விகளால் படபடத்தாள்....
சிரித்துக் கொண்ட இந்திரா, அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள். "நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை ரேவதி..." என்றபடி அவளை இழுத்துக் கொண்டே ஒரு ஓரமான இருக்கையைப் பார்த்து அமர்ந்தாள்.
நல்லா இருக்கியா ரேவதி... பொண்ணுங்க ரெண்டு பேரும் இப்போ என்ன  படிக்கிறாங்க?

ம்ம்ம் நல்லா இருக்கேன். பெரியவ பொறியியல் முதல் வருஷம் படிக்கிறா. அடுத்தவ இந்த வருஷம் பதினொன்னு,,, நீ எப்படி இருக்க சொல்லு...

நான் நல்லா இருக்கேன். இப்போ திருவாருர்ல இருக்கேன். நீ எங்கே இருக்க?

நான் தஞ்சாவூர  விட்டு எங்கேயும் போகல... பசங்க படிப்பு வேற இருக்கே... அவரும் இப்போ கண்காணிப்பாளரா பதவி உயர்வு கிடைச்சு இங்கே தஞ்சாவூருக்கே வந்துதுட்டார்...என்ன ரெண்டு பேரும் வேலைக்குப் போய் வரதால பிள்ளைங்க கூட செலவு பண்ணவே நேரமில்லாம போச்சு...." அலுத்துக் கொண்டாள் ரேவதி...

"ஏன் ரேவதி.... உங்க அம்மா இப்போ எங்கே இருக்காங்க? அவங்கள உங்க கூட வச்சுக்கிட்டா உனக்கும் உதவியா இருக்கும். பிள்ளைகளுக்கும் பாட்டி இருந்தா நல்லா இருக்குமே"
அவளது மாமியார் பலவருடங்களுக்கு முன்பே இறந்து போனதால்  பிள்ளைகள் சின்னதாக இருக்கும் போது அவள் அம்மா தான் பார்த்துக் கொண்டதாக ரேவதி சொன்ன நினைவில் கேட்டாள் இந்திரா..

அம்மா விஷயமா ஒரு உதவி கேக்க தான் இந்திரா உன்னை பாக்கணும் என்று நெனச்சிக்கிட்டே இருந்தேன். இன்னைக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நீ வந்திட்டே.....

என்னாச்சு ரேவதி, அம்மா எப்படி இருக்காங்க? உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?
கொஞ்சம் பதட்டமாய் கேட்டாள் இந்திரா...

அதையேன்  கேக்கிற இந்திரா.... அம்மா ரொம்ப காலமா தம்பி வீட்டில தான் இருந்தாங்க. இப்போ சுகர் அதிகமாகி கண் பார்வை போயிடுச்சு. அதோட பி.பி. வேற வந்துகிச்சு. தம்பி பொண்டாட்டிக்கு இப்போ தான் டீச்சர் வேலை கிடைச்சிருக்கு. கண்ணு தெரியாதஅம்மாவ எப்படி வச்சு பாத்துக்கறதுன்னு ஒரே புலம்பல். சரின்னு என் இன்னொரு தம்பி வீட்டில கொண்டு வந்து இப்போ விட்டிருக்கோம். அவளுக்கும் அம்மா அங்கே இருக்கறது அவ்வளவா பிடிக்கல. அம்மாவுக்கு தான் பென்ஷன் வருதே... ஏதாவது முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்த்து விட்டா என்னன்னு தோணுது.... உனக்குத் தான் இது மாதிரி விஷயம் எல்லாம் நல்லா பழக்கமாச்சே.... நல்லதா ஒரு ஹோம் இருந்தா சொல்லு இந்திரா. அம்மாவ பத்திரமா பாத்துக்கிற  இடமா இருந்தா போதும். பணம் கொஞ்சம் கூடன்னா கூட கட்டிக்கலாம். அதுக்கு தான் உன்னைப் பார்க்கனும்னு நெனச்சுக் கிட்டு இருந்தேன்" படபடவென்று சொல்லி முடித்து இந்திராவின் முகத்தையே பார்த்தாள் ரேவதி...

அதிர்ந்தவளாய் அப்படியே அமர்ந்திருந்தாள் இந்திரா..... என்ன இந்திரா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற..... யோசிக்கிறியா? யோசிச்சு நல்லா இடமா பாத்து  சொல்லு. என் செல் நம்பர் தரேன். நல்ல இடமா இருந்தா போன் பண்ணு"

"ஏன் ரேவதி..... அவங்க உனக்கும் அம்மா தானே?" அமைதியாய் இந்திரா கேட்ட இந்த கேள்வியை ரேவதி எதிர்பார்க்கவில்லை....

என்ன இந்திரா இப்படி சொல்லறே..... அவங்க என் அம்மாவா இருக்கறதால தானே ஏதாவது செய்யணும்னு கேக்கறேன்"

ஏன் ரேவதி, நீ அவங்க பொண்ணு நல்லா தானே இருக்க? நீ ஏன் அவங்கள கொண்டு வந்து உன் கூட வச்சுக்கக்கூடாது?

என்ன இந்திரா புரியாம பேசற? அவங்க எப்படி பொண்ணு வீட்டில வந்து கடைசி காலத்தில இருப்பாங்க? ஆயரம் தான் இருந்தாலும் பையன் வீட்டில தானே இருக்கணும்னு நெனைப்பாங்க? அது மட்டுமில்ல, நான் வேலைக்கு வேற போறேன். என் வேலை தான் உனக்கே தெரியும்... ராத்திரி பகல் இல்லாம அலையிற வேலை... எப்படி நான் கொண்டு வந்து வச்சுக்க முடியும்? எங்க வீட்டுக்காரர் என்ன சொல்லுவாரோ வேற தெரியல......" தன் பக்கம் இருக்கும் நியாயம் புரியாமல் பேசுகிறாயே என்பது போல் இந்திராவைப் பார்த்தாள் ரேவதி....

ஆமா ரேவதி நீ சொல்றதும் சரி தான். பையன் வீட்டில தான் இருக்கனும்ன்னு ஆசைப் படுவாங்க. ஆனா பொண்ணு பிள்ளைங்கள வளத்துக் கொடுக்கறது மட்டும் அவங்க கடமை இல்ல.? நீ வேலைக்குப் போறதுக்கு உன் பிள்ளங்களால எந்த கஷ்டமும் வராம அவங்க பார்த்துகிட்டப்போ மட்டும் உனக்கு இந்த சமுதாய சட்டங்கள் எதுவும் நினைவுக்கு வரல. உன் புருஷன் அப்போ மட்டும் என் பிள்ளைகளை உன் அம்மா வளர்க்கக் கூடாதுன்னு சொல்லல. இப்போ மட்டும் சொல்லுவார் தான் இல்ல?"
மனசுக்குள் பொங்கிய ஆத்திரம் வார்த்தைகளாய் வடியக் கேட்டாள் இந்திரா...

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பேசாமல் இருந்தாள் ரேவதி. இந்திரா சொன்ன உண்மைகள் அவளை சுட்டதா தெரியவில்லை. இந்திரா இன்னமும் கோபம் மாறாதவளாகக் கேட்டாள்," ஏன் ரேவதி, உனக்கோ இல்லை உன் புருஷனுக்கோ இப்படி ஏதாவது உடம்புக்கு வந்திருந்தா உங்க அம்மா இப்படி சிந்திச்சிருப்பாங்களா? உடனே ஓடி வந்து உன் கூடவே இருந்து உங்களைப் பாத்திருக்க மாட்டாங்களா? உன்னால எப்படி ரேவதி இப்படி யோசிக்க முடியுது? ஏன் வயசு காலத்தில பெத்தவங்கள பாத்துக்குறப் பொறுப்பு பொம்பளப் பிள்ளைகளுக்கு இல்லையா? உன் தம்பி வீட்டில தான் அவங்க இருக்கனுமா? நீ கொண்டு வந்து வச்சுக்கலாமே? அத விட்டுட்டு ஏன் தம்பி பொண்டாட்டிய குறை சொல்ற? உன் அம்மா மேல உனக்கு இல்லாத அக்கறை அவங்களுக்கு மட்டும் எப்படி வந்துடும்?"
பேசிக் கொண்டே போனவளை இடைமறித்தாள் ரேவதி.... அதெல்லாம் சரி தான் இந்திரா. ஆனா கண்ணு சுத்தமா தெரியல..வீட்டில   நாங்க எல்லாரும் வெளியிலப் போயிடுவோம்... அவங்கள எப்படி பார்த்துக்க முடியும்? சும்மா வீம்புக்கு பேசாதே"
" இல்ல ரேவதி.. நான் வீம்புக்கு பேசல..... இப்போ அந்த வீட்டில அவங்க எப்படி இருக்காங்க? எல்லாத்துக்கும் கைய பிடிச்சு கூட்டிட்டுப் போறாங்களா?"
"அப்படியெல்லாம் இல்ல. ஒரு நிதானத்தில நடந்த்துக்குறாங்க. அதனால தான் ஒரு முதியோர் இல்லத்தில..."

அவள் முடிக்கும் முன் குறுக்கிட்டாள் இந்திரா... " அத மட்டும் சொல்லாதே ரேவதி... உங்க அம்மாவ நீ முதியோர் இல்லத்தில சேர்க்கலாம்னு சொல்றத என்னாலேயே  தாங்க முடியல. அவங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்? நல்லா இருந்த வரைக்கும் உங்க எல்லோருக்கும் உதவியா இருந்தாங்க. அவங்களுக்கு முடியாம போனதும் அவங்கள கை கழுவத் தானே பாக்குறீங்க?"

"என்ன இந்திரா இப்படி பேசற? என்னால முடியாமத் தானே இப்படி யோசிக்கிறேன். " நாத் தழு தழுத்தது அவளுக்கு..

"இல்ல ரேவதி, நீ யோசிக்கறதே எனக்கு தப்பாத் தான் படுத்து. உங்க அம்மாவுக்கு உன்னைத் தவிர வேற பிள்ளைகளே இல்லன்னா அவங்கள உன் கூட வச்சுக்க மாட்டியா?"

"அப்படி இருந்தா வேற வழியில்ல . ஆனா இப்போ ரெண்டு தம்பி.."

"நிறுத்து ரேவதி... உன் பொறுப்ப தட்டிக் கழிக்க ஆம்பிளைப் பிள்ள அது இதுன்னு பேசாதே... உனக்கு அவங்களப் பார்த்துக்குற பொறுப்பு இருக்கு. அவங்க ஒரு நிதானத்தில நடக்கறாங்கன்னு சொல்றே. காலையில போகும் போதே சமைச்சு டேபிள் மேல எடுத்து வச்சுட்டுப் போ. அவங்க நடக்கிற வழியில ஏதும் தட்டி விழாதப் படி வீட்ட கொஞ்சம் மாத்தி வை. சாயங்காலம் பிள்ளைங்க வந்துடும். உனக்கு பத்து நாளைக்கு ஒரு முறை தானே இரவு டுட்டி வருது? மனசு இருந்தா எல்லாம் முடியும் ரேவதி.. உன் புருஷன் கிட்டே சொன்னா கட்டாயம் புரிஞ்சுக்குவார். வேணுன்ன  நான் பேசறேன். இப்படி ஏதாவது யோசிக்காம, முதியோர் இல்லம் அது இதுன்னு பேசறே... கஷ்டமா இருக்கு ரேவதி... முதியோர் இல்லத்தில இருக்குற வயசானவங்க எத்தனை வேதனைய சுமதுகிட்டு இருப்பாங்கன்னு உனக்குத் தெரியுமா? வேணாம் ரேவதி,,, அம்மாவ கொஞ்சநாள் நான் சொன்ன மாதிரி உன் கூட வச்சுப் பாரு. அப்பறமும் உன்னால முடியலன்னா என்கிட்டே சொல்லு. பிறகு யோசிக்கலாம், ப்ளீஸ்பா..." குழைந்த குரலில் பேசினாள் இந்திரா.....

"சரி இந்திரா.... நீ சொல்றது புரியுது... நான் அது மாதிரி முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். எதுவா இருந்தாலும் உன்கிட்டே பேசினா தெளிவா சொல்லுவேன்னு தெரியும்..", சிறிது  நேர யோசனைக்குப் பின் சொன்னாள்  ரேவதி....

அப்பாடா என்றிருந்தது இந்திராவுக்கு... வயதானவர்கள் புறக்கணிக்கப் படுவதையும், அவர்களது வேதனை அப்பிய முகங்களையும் மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைப்பவள் அவள். நிச்சயம் ரேவதி மாறிவிடுவாள் என்று நம்பினாள். "சரி வா... அவருக்கு கிப்ட் கொடுத்துட்டு சாப்பிட்டு கிளம்பலாம்" ரேவதியை அணைத்தவாறு சொன்னாள்..

--------------

ஒன்றிரண்டு வாரம் கழித்து ஒரு நாள் ரேவதியிடமிருந்து இந்திராவுக்கு அழைப்பு வந்தது... என்ன சொல்ல போகிறாளோ என்று பதட்டமாகவே எடுத்தாள். "சொல்லு ரேவதி..."
"இந்திரா.... அம்மா இப்போ என் கூட இருக்காங்கப்பா.... " சந்தோசம் பொங்கி வழிந்தது அவள் குரலில்.... "எப்படி பார்த்துக்கிற ரேவதி?"
" அதெல்லாம்  கஷ்டமாவே இல்ல இந்திரா.. நீ சொன்ன மாதிரி வழியில ஒன்னும் இடைஞ்சல் இல்லாம் வச்சிட்டேன் வீட்ட. சமைச்சு  அடுக்குப் பாத்திரத்திலப் போட்டு டேபிள் மேல வச்சிட்டு போயிடுவேன். அம்மா மதியம் தானாவே போட்டு சாப்பிட்டுக்குவாங்க... பிள்ளைங்க சாயங்காலம் வந்துடும். நானும் போயிடுவேன். ராத்திரி நாங்க எல்லாரும் ஒன்னா சாப்பிடுவோம். ஒரே அரட்டை தான். நெஜமாவே சந்தோஷமா இருக்கு இந்திரா... உனக்கு தான் நன்றி சொல்லணும் நான்" நெகிழ்வாய் பேசினாள் ரேவதி....

கலங்கிய கண்களை அலுவலகத்தில் பிறர் பார்க்காமல் துடைத்துக் கொண்டாள் இந்திரா.."உன் வீட்டுக்காரர் என்ன சொன்னார்? அவர் ஒத்துக்க மாட்டார்ன்னு பயந்தியே"
"அவர் ஒண்ணுமே சொல்லல இந்திரா... எங்க அம்மாவ தான் ரொம்ப நாள் வச்சு பார்த்துக்க முடியல... உங்க அம்மாவாவது  நம்ம கூட வந்து இருக்கட்டும்னு சொன்னார், நான் தான் தப்பா யோசிச்சிட்டேன். தம்பி ரெண்டு பேருக்கும் கூட ரொம்ப நிம்மதி இப்போ"
ரொம்ப பெருமையாய் இருந்தது இந்திராவுக்கு. ஒரு நாள் போய் ரேவதியின் அம்மாவை பார்த்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..."சரி  ரேவதி.. கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு நாள் நான் தஞ்சாவூருக்கு வரேன். அம்மாவ ரொம்ப கேட்டதா சொல்லு என்ன... வச்சிடட்டுமா.."

---------------

ரேவதியின் அம்மாவைப் போய் பார்க்க நேரமே வாயக்கவில்லை... தினசரி வேலையும், வீட்டின் பொறுப்புகளும் அவளை அதற்கு அனுமதிக்காமல் போய் கொண்டிருந்த  போது தான் ஒரு நாள் ரேவதி அழுதபடி போன் செய்தாள்.,"இந்திரா, அம்மா தவறிட்டாங்க..."
அவளது கேவல் சத்தம் இந்திராவை உலுக்கியது... "என்னாச்சு ரேவதி...  நல்லா தானே இருந்தாங்க.... எப்போ எப்படி..?"
"இன்னைக்கு காலையில.... ஹார்ட் அட்டாக்... சாயங்காலம்  நாலு மணிக்கு எடுத்துடுவோம் . முடிஞ்சா வா இந்திரா" சொல்லிவிட்டு  போனை கட் பண்ணினாள்.
"ஐயோ, அந்த அம்மாவின் சந்தோஷமான முகத்தைப் போய் பார்க்க முடியாமல் போனதே...." என்று தான் இந்திராவுக்கு வருத்தமாக இருந்தது....வாட்சைப் பார்த்தாள்...மணி பதினொன்று.. எம்.டி. கேட்டிருந்த முக்கியமான குறிப்புகளை வேகமாக எடுத்துக் கொண்டு அவரது அறையில் நுழைந்து அனுமதி பெற்று அவள் திருவாரூரில் கிளம்ப மூன்று மணிக்கு மேல் ஆகி விட்டது...
ரேவதியின் வீட்டை தேடி இந்திரா வந்து சேர்ந்த  போது வீடு கழுவி விடப் பட்டிருந்தது...
அவளைப் பார்த்ததும் கட்டிக் கொண்டு சின்னக் குழந்தையாய்   ஓவென்று அழுதாள் ரேவதி... அடுத்தடுத்து அமர்ந்திருந்த அவளது பிள்ளைகள் இருவர் முகமும் அழுது வீங்கிப் போயிருந்தது......
அவள் அழட்டும் என்று அவளை தட்டியபடி சிறிது நேரம் இருந்தாள் இந்திரா.... சற்று நேரத்தில் ஆசுவாசப் படுத்திக் கொண்டவளாக பேச ஆரம்பித்தாள்."அம்மாவுக்கு சுகர் இருந்துச்சுல்ல...வலி இருந்தது தெரியல  போல... நெஞ்சு கரிக்கிற மாதிரி இருக்குன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் கூட ஜெலுசில் சிரப் கொடுத்து குடிக்க  சொன்னேன். அப்பறமா ரொம்ப தொந்தரவு பண்ணுதுன்னு சொன்னதும் தான் உடனே டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போனோம்.. அதுக்குள்ள ...." வாய்ப் பொத்திய படி மீண்டும் அழுதாள்....
உனக்கு லீவா.. எப்படி எல்லாரும் வீட்டில இருந்தீங்களா?"
" இந்திரா.... அம்மா வந்ததில இருந்து நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம் இந்திரா.....பிள்ளைங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுகிட்டே இருப்பாங்க. அம்மா வந்த பின்னாடி ரெண்டு  பேரும் சண்டையே போடறது இல்ல... பள்ளிக்கூடம் விட்டு வந்தா அம்மாகிட்ட ஸ்கூல் கதை சொல்லறதும் அம்மா அவங்களுக்கு கதை சொல்றதுமா ரொம்ப ஜாலியா இருந்துச்சு பிள்ளைங்க....ராத்திரி அம்மாவுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு பேரும் படுத்துகிட்டு தூங்கற வரை ஒரே பேச்சா தான் இருக்கும். நான் வேலைக்குப் போயிட்டு வந்ததும் கூட பத்திரமா போயிட்டு வந்தியாம்மா? குளிச்சிட்டு சாப்பிடு அப்படின்னு அம்மா சொல்லுவாங்க. வீட்டில ஒரு பெரியவங்க இருக்கறது எத்தனை பெரிய பலம்னு நான் புரிஞ்சுகிட்டேன் இந்திரா. இவர் வீட்டுக்கு வரும் போதே மாப்பிள்ளை வதுட்டார். போய் காப்பி வேணுமான்னு கேளும்மான்னு  சொல்லுவாங்க.. அவர் சிரிப்பார். தினமும் அம்மாவுக்கு ஏதாவது வாங்கிட்டு வருவார்..... எங்க அம்மா ஒருத்தர் இருந்தது எங்க நாலு பேர் மனசையும் எப்பவும் சந்தோஷமா வச்சிருந்துச்சு இந்திரா..."
இந்திரா பேசப் பேச அவள் பெண்கள் ரெண்டு பேரும் விக்கி விக்கி அழ ஆரம்பித்தார்கள்......
அந்த பிள்ளைகளின் அழுகை அவர்களுக்கு பாட்டியின் மீதிருந்த அன்பை வெளிச்சம் போட்டு காட்டியது.... எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் இருந்தாள் இந்திரா.....

சற்று நேரத்தில் முகம் துடைத்துக் கொண்ட ரேவதி சொன்னாள்.. "ஆனா இதுக்கெல்லாம் நான் உனக்கு தான் இந்திரா நன்றி சொல்லணும்.."
"ச்சே ச்சே என்ன ரேவதி..."
"இல்ல இந்திரா.... நீ தான் எனக்கு இத்தனை பெரிய சந்தோசம் இருக்கறத கோடு போட்டு காட்டின..? நீ அன்னைக்கு அத்தனை தூரம் சொல்லாட்டி நான் எத்தனை  பெரிய பாவம் பண்ணிருப்பேன்... பெத்த அம்மாவ முதியோர் இல்லத்தில சேர்த்த பாவத்திலேர்ந்து மட்டும் காப்பாத்தல நீ... அவங்கள கூடவே வச்சுக்கற புண்ணியத்தையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்க ", நெகிழ்ந்து போய் உருகினாள் ரேவதி....
"இப்போ அம்மா செத்து போனது வருத்தமா இருந்தாலும், ஒரு சந்தோசம் இருக்கு இந்திரா.... இந்த வீடு முழுக்க அம்மா இருக்கிற மாதிரி இருக்கு... அவங்களுக்கு என் கூட வந்து இருக்கணும்னு ஆசை இருந்திருக்கு.... அதை நிறவேத்திட்ட திருப்தி இருக்கு. அன்னைக்கு கூட அம்மா பிறந்த நாளுக்காக தான்    நாங்க எல்லோரும் லீவ்  போட்டிருந்தோம். அதனால அம்மா கடைசி நேரத்தில கூடவே இருந்த திருப்தி இருக்கு. இதுக்கெல்லாம்  உனக்கு நன்றி சொல்லாட்டி எப்படி இந்திரா..?"
கேட்டபடி ரேவதி மீண்டு அழத் துவங்க, அந்த மரணம் தந்த சோகத்தையும் மீறி ஒரு சின்ன முறுவல் வரத்தான் செய்தது இந்திராவுக்கு.....அந்த முறுவலில் இருந்தது ஒரு ஆழமான சந்தோசம்.....

6 comments:

  1. //இந்த வீடு முழுக்க அம்மா இருக்கிற மாதிரி இருக்கு... அவங்களுக்கு என் கூட வந்து இருக்கணும்னு ஆசை இருந்திருக்கு.... அதை நிறவேத்திட்ட திருப்தி இருக்கு. அன்னைக்கு கூட அம்மா பிறந்த நாளுக்காக தான் நாங்க எல்லோரும் லீவ் போட்டிருந்தோம். அதனால அம்மா கடைசி நேரத்தில கூடவே இருந்த திருப்தி இருக்கு//
    மனதைத் தொட்ட கதை. ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி யாராச்சும் ஒருத்தர் இந்திரா போல வந்து கண் திறந்து வைத்தால் முதியோர் இல்லங்களில் உறவுக்கு ஏங்கும் பெற்றோர் இல்லாமல் போகலாம்..
    அம்மாவை நேசிக்கிற ஒவ்வொருவரும் சுலபமாய் ஒன்றிப்போகிற கதை.

    ReplyDelete
  2. எங்க அம்மா ஒருத்தர் இருந்தது எங்க நாலு பேர் மனசையும் எப்பவும் சந்தோஷமா வச்சிருந்துச்சு//

    ரேவ‌தியின் விவ‌ர‌ணைக‌ளும், இந்திராவின் வாத‌ங்க‌ளும் ஆழ‌மான‌வை. இறுதியில் முடித்திருந்த‌து போல் கால‌ம் க‌ட‌ந்த‌ ஞான‌மாயிராம‌ல் ச‌ற்று முன்பாவ‌து விழித்துக் கொண்ட‌தும் விழிப்ப‌டைய‌ச் செய்த‌தும் ந‌ன்று!

    என் வார்த்தைக‌ளை ம‌தித்து ப‌திந்திருப்ப‌து ம‌கிழ்வு. ந‌ம‌க்குள்ளான‌ ந‌ட்பின் வீற்றிருக்கை அமோக‌மாக‌வே உள்ள‌த‌ற்கான‌ அடையாள‌ம்! ரேவ‌தி இந்திரா போல‌.

    ReplyDelete
  3. நல்ல சிறுகதை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல நகர்வு அருமையான வெளிபாடு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. என்னைப்போன்ற கிழடுகள் நினைப்பதெல்லாம்
    ஒன்று திரட்டி அதற்கெல்லாம் வடிகாலாக இந்தக் கதையை
    எழுதியிருக்கிறீர்கள்.

    அம்மா அப்பாவை வைத்து காப்பாத்த வேண்டும் அவர்கள் முதிய வயதிலே என்பதெல்லாமே ஒரு எழுதப்படாத சட்டம்.
    இருப்பினும் இந்தக்கால சூழலில் மகன் மகள் எல்லோருமே வெளி நாடுகளில் தங்கிவிடும்பொழுதும் தாய் தந்தையருக்கு
    வெளி நாடு ஒத்துக்கொள்ளவில்லை என்ற சூழ்னிலையிலும் அவர்களை ஏதேனும் ஒரு பொறுப்பான மனச்சாட்சியுடன்
    செயல்படக்கூடிய முதியோர் இல்லத்தில் சேர்ப்பது தவறாகத் தோன்ற வில்லை. அவர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கத்தான்
    செய்யும். இருந்தாலும், அந்தக்காலம் போல் உள்ளூரிலே அல்லது சற்று தொலைவிலே வேலை கிடைக்கும் அதுவும்
    அவர்களுக்கு ஏற்றதானதாக இருக்கும் என்பதில்லை.

    ஆகையால், குழந்தைகள் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படாத வகையிலே என்னைப்போன்ற கிழங்கள் அனுசரித்துப்போவதில் தான்
    மனம் நிம்மதியோட இருக்கலாம். நிம்மதியோட சாகலாம்.

    கதையின் போக்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.
    வாழ்க வளமுடன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.in
    www.movieraghas.blogspot.in

    ReplyDelete
  6. கதை கருவும் நடையும் நன்றாக இருக்கிறது.

    முதியோர் இல்லத்துல சேர்க்கறதுக்கு சேர்றதுக்கும் ரொம்ப பக்குவம் வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் நிலமை வேறே மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். கதையில வராப்புல 'பார்க்க நேரமோ வாய்ப்போ கிடைக்கவில்லை' என்கிறது வீட்டுக்குள்ள இருந்தாலும் நடப்பது தான். பார்க்கறது என்றால் என்னங்கறதைப் பொறுத்து, இல்லையா?

    கதை நடை ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete