உலகின் ஆதியாக இருக்கிறாள் அம்மா. எந்த இனமானாலும் அம்மாவிலிருந்தே தொடங்குகிறது. கடல் நீரை உள்வாங்கி கருணை மழையாய் பொழியும் மேகம் போன்றவளா, எல்லா உயிரினமும் வாழ தன் மடி விரித்து மகிழ்ந்திருக்கும் பூமியைப் போன்றவளா? அம்மாவை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அம்மாவால் வளரும் எல்லா பிள்ளைகளும் வளர்ந்த பின் அம்மாவை நினைக்கிறார்கள். சிலர் மட்டுமே தமது செயல்களால் அம்மாவை உலகின் முன் நிலை நிறுத்துகிறார்கள்..மிகச் சிலரே ‘இப்படியொரு அம்மா நமக்கு வாய்க்கவில்லையே’ என்று ஒவ்வொருவரும் ஏங்கும் விதமாக மிகச் சிறப்பாக அம்மாவின் நினைவைப் பாடிப் பரவுகிறார்கள்.. சுகன் அம்மாவால் வளர்ந்தவர்., அம்மாவால் வாழ்கிறவர், அம்மாவால் நிலைத்திருக்கப் போகிறவர்.... ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளை சடங்கு, சம்பிரதாயங்கள் என்னும் பாசாங்குகளில் மூழ்கிவிடாமல் இயல்பான இனிமையான இலக்கிய நிகழ்வாக்க் கொண்டாடும் சுகன் ஒரு முன்னுதாரணம்...
இந்த வருடம் 9.3.2012 அன்று மாலை எல்லா சுகன் நிகழ்வுகளையும் போலவே மிகச் சரியாக 6.30 மணிக்கு அம்மாவின் நினைவுச் சாரல் வீசத் தொடங்கிற்று....
இருள் சூழத் தொடங்கியிருந்த அந்தி நேரம். அம்மாவின் புகைப்படம் பூ மாலையுடன் , அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளுடன் கவினுற வைக்கப் பட்டிருந்த்து. நிகழ்வு குறித்த ஓரிரு வரிகள் அறிமுகத்துடன், இலக்குமி குமாரன் ஞானதிரவியம் அவர்களைத் தலைவர் பொறுப்பேற்கும்படி கேட்டுக் கொண்டார் சுகன். நிகழ்வின் தொடக்கமாக சுகலீலா ஞானேச்வரி தன் இனிய குரலால் கவிஞர் பாமரன் இயற்றிய
இருள் சூழத் தொடங்கியிருந்த அந்தி நேரம். அம்மாவின் புகைப்படம் பூ மாலையுடன் , அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகளுடன் கவினுற வைக்கப் பட்டிருந்த்து. நிகழ்வு குறித்த ஓரிரு வரிகள் அறிமுகத்துடன், இலக்குமி குமாரன் ஞானதிரவியம் அவர்களைத் தலைவர் பொறுப்பேற்கும்படி கேட்டுக் கொண்டார் சுகன். நிகழ்வின் தொடக்கமாக சுகலீலா ஞானேச்வரி தன் இனிய குரலால் கவிஞர் பாமரன் இயற்றிய
‘மறைந்தாலும் என் நெஞ்சில் அவள் வாழ்கிறாள் – நான்
மறந்தாலும் அவள் தானே எனை ஆள்கிறாள்..
தொட்டிலைப் பாட்டால் ஆட்டிய மெட்டுக்காரி
என்ற பாடலைப் பாடினார். மிகவும் அற்புதமான வரிகள், இனிமையான மனதுக்கினிமையான ராகம் அந்தப் பாடலுக்கு. சுகாவின் இனிய குரல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மெய்மறக்கச் செய்தது.. தமிழ்த்தாய் இலக்கியப் பேரவையின் படைப்பரங்கம் தஞ்சை பெரியகோயில் புல்வெளியில் நடந்துக் கொண்டிருந்த நாட்களில் மன்னார்குடி ராசகணேசனை இந்த பாடலை அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்பார் சுகன். கைகளால் சொடக்குப் போட்டபடி மிகவும் ரசித்துப் பாடுவார் ராசகணேசன். அவரது குரலும், பாடலில் ஒன்றிப் போகும் அவரது முகமும் அந்தப் பாடலுக்கு கூடுதல் இனிமையைத் தரும். இந்தப் பாடல் எனக்கு அவரை நினைவுப் படுத்திற்று. வருடங்களாயிற்று ராசகணேசனைப் பார்த்து. அவர் திருமணத்துக்குப் போக முடியாததால் நானும் வதனாவும் அவர் வீட்டிற்குப் போக திட்டம் தீட்டி, அது இன்னும் நிறைவேறாமல் கிடக்கிறது, அரசுகள் தீட்டும் சில திட்டங்கள் போல...
சுகாவின் பாடலுக்குப் பிறகு, தனது பால்மணம் வீசும் நேசக் குரலால், கவித்துவமான வரிகளில் வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கினான் இதழாளன்.
நினைவுச்சாரல் நிகழ்வின் ஊடாக, ஒரு திடீர் நிகழ்வாக, கவிஞர் அம்பல் மாதவியின் ’சொல் காச்சி மரம்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு நிகழ்த்தப்பட்டது. கவிஞர் மணிச்சுடர் நூலை வெளியிட, தஞ்சை சாம்பான் நூலைப் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிட்டுப் பேசிய மணிச்சுடர் ‘அம்பல் மாதவி வயதில் முதுமையை நெருங்கியிருந்தாலும், கவிதைகள் இளமைத் துள்ளலுடன், அனைவருக்குமான கவிதைகளாய் இருக்கின்றன என்று குறிப்பிட்டு
நடுங்குகிறது சூரியன்’
என்ற கவிதையையும், மேலும் சில கவிதைகளையும் படித்துக் காட்டினார். அவருக்குப் பின் அம்பல் மாதவி குறித்துப் பேச வந்த் தஞ்சை சாம்பான் முதலில் அம்மா நினைவுச் சாரலில் அம்மா குறித்துப் பேச விரும்புவதாகக் கூறி, “ யார் இல்லையென்றால் நான் இந்த உலகிற்கு வந்திருக்க முடியாதோ, யார் இல்லையென்றால் நான் யாரிடமும் பழகியிருக்க முடியாதோ” அந்த அம்மாவை வணங்குகிறேன் என்று தொடங்கி அம்மாவின் மேன்மைகளைக் கூறினார். சுகனுடைய அம்மாவைப் பார்க்க இயலாதது குறித்தும், பழகாமல் போனது குறித்தும் மிகவும் வருந்தினார். அம்பல் மாதவி குறித்து, ‘தேனீர் கடை நடத்திக் கொண்டிருக்கும், பார்க்கவும், பழகவும் எளிய மனிதரான அவர் மிகவும் துல்லியமான கவிதைகள் எழுதுபவர் ‘ என்று பாராட்டிப் பேசினார். ஏற்புரை வழங்க வந்த அம்பல் மாதவி தமிழமுது மன்றம், சுகன் போன்றவர்கள் தன்னை வளர்த்ததாகக் கூறி நன்றி கூறினார்.
இதன் பின் நினைவுச்சாரலின் தலைவர் இலக்குமி குமாரன் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். ‘தடம் பதித்த தாய்மார்கள்’ என்ற தலைப்பில் தன் உரையை நிகழ்த்திய முனைவர். மீனாகுமாரி, ’உள்ளே நுழைந்தவுடன் என்னை வரவேற்று இங்கே அமர வைத்து விட்டு சுகன் உள்ளே போனார். அப்படி இங்கே உட்கார்ந்திருந்த நேரத்தில் இந்த அம்மாவுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். உன்னை எனக்கு மிகவும் பிடித்ததால் தான் இங்கே நீ இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அவர் கூறினார்’ என்று சுசீலாம்மாவைச் சுட்டி அவர் பேசியதில் நான் சிலிர்த்துப் போனேன். சுசீலாம்மாவுடன் பழகியவர்களுக்கு அந்த உணர்வு நிச்சயம் தோன்றியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்... இதிகாசங்களிலும், புராணங்களிலும் தாயின் மேன்மை குறித்து பேசினார். பட்டினத்தாரின் அம்மா ஞான கலையாச்சி, ராமரின் அம்மா கோசலை, ஆதி சங்கரரின் அம்மா, சத்ய சாய்பாபாவின் அம்மா போன்றவர்களைப் பற்றி கவினுற எடுத்துரைத்தார். அவர்களுடைய அம்மாக்கள் அந்த மகான்களுக்கு சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுதலாக இருந்தனர். சுகன் தன் வாழ்க்கைப் பாதையை சரியாக அமைத்துக் கொள்ள அவரது அம்மா பேருதவியாக இருந்ததிருப்பதை நெகிழ்ந்து குறிப்பிட்டார். தன் அம்மா மரணம் தன் கைகளில் மெல்ல நிகழ்ந்ததை, ஒன்றும் செய்ய இயலாமல் தான் இருந்ததை, அந்த மரணம் தனக்கு வாழ்வின் பல விஷயங்களை எடுத்துரைத்ததை என்று மிக அருமையாகப் பேசினார்....அடுத்ததாகப் பேச வந்தார் முனைவர். தாமரைச்செல்வன். தமிழ் அறிஞர்களின் பார்வையில் அம்மா என்ற தலைப்பில் பேச வந்த அவர் அம்மாவின் அருமைகளை உணர்த்தும் திரையிசைப் பாடல்களைப் பேச்சினூடாகப் பாடி மகிழ்வித்தார்..... தமிழருவி மணியன், கண்ணதாசன் போன்றவர்களின் தாய்ப்பாசத்தையும், தாயின் அரவணைப்பையும் எடுத்துக் கூறினார். காதலிக்காக அம்மாவின் இதயத்தை எடுத்துச் செல்லும் பிள்ளை கால் இடறி விழ, ‘பார்த்துப் போ மகனே’ என்று தாயின் இதயம் சொன்ன கதையை உணர்ச்சி ததும்ப கூறி ‘ஆசப் பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவ வாங்க முடியுமா?’ என்ற பாடலையும் பாடினார். காசினால் வாங்க முடியாத அன்பு அளவில்லாமல் கொட்டிக் கிடப்பது தாயின் இதயத்தில் தானே!
வெற்றிப் பேரொளியின் பேச்சு இல்லாமல் அம்மா நினைவுச் சாரல் முழுமையடையுமா என்ன? அதை அம்மாவே விரும்ப மாட்டாரே.... இதை புரிந்து கொண்டதால் தான் அடுத்ததாக அவரைப் பேச அழைத்தார் இலக்குமிகுமாரன். ‘ தேய்பிறையின் துவக்கத்தில் முழு நிலவைப் பற்றிப் பேசுகிறோம் ‘ என்று கவித்துவமாய் தன் பேச்சைத் துவங்கினார் வெற்றி.. நிகழ்வின் இடையே வந்தவர்களுக்கு இனிப்பும், காரமும், தேனீரும் வழங்கப்பட்டது. அதைப்பற்றிக் குறிப்பிட்ட வெற்றி, ’அம்மா நம்மிடையே இல்லை என்பதை இங்கே வழங்கப்பட்ட இனிப்புகள் நினைவூட்டிற்று. அம்மா இருந்திருந்தால் இப்படி கடையில் வாங்கிய இனிப்புக்களை ஒரு நாளும் தர மாட்டார் ‘ என்று கூறும் போதே அவரது குரல் பிசிறிற்று. ’ வெளியில் எங்கே கிளம்பினாலும், எனக்கும் சுகனுக்கும் அவர் தன் கையால் திரு நீறு பூசி விடுவார். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் அவரது அன்புக்காக அதை நாங்கள் பூசிக் கொள்வோம். இப்போதும் அந்த ஸ்பரிசம் எனக்குள் இருக்கிறது. எங்களை வழி அனுப்பிவிட்டு நாங்கள் தெரு முனை திரும்புவதற்குள் மாடியில் ஏறி நின்றபடி எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் இறக்கும் வரை அந்த அடுத்த மனை காலியாகவே இருந்த்து. இன்று அந்த மனையில் மிக உயரமான கட்டிடம் எழும்பிவிட்ட்து. இதை ஒரு (miracle)அற்புதமாகத் தான் எண்ணத் தோன்றுகிறது’, என்று பேசினார் வெற்றி. மிகுந்த உணர்ச்சிவயப் பட்ட நிலையில் அவர் அன்று பேசியதை நினைக்கையில் அன்று நிச்சயம் அந்த கூட்டத்தின் நடுவே அம்மா இருந்து கொண்டிருந்தார் என்று நான் நம்புகிறேன். தன் மகன் எங்கு செல்லும் போதும் அவன் போகும் வழியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தாயின் அன்பின் முன்னே அந்த காலி மனையின் மனை சாத்திரங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. அவரது இறப்புக்குப் பின் தான் அங்கே கட்டிடம் எழும்புகிறது.... நம்ப முடியாத செய்தி போலத் தெரிந்தாலும், இது போன்ற அற்புதங்கள் நிறுவ முடியாத நிஜங்கள். நம் வாழ்வையும் ஆழமாய் உற்று நோக்கையில் இந்த உண்மையை உணர முடியும்....
சுகனுடைய நீண்டகால நண்பரும், இலக்கியவாதியுமான என் நண்பர் செழியனின் உரை சிறப்பாக அமைந்திருந்தது. இரு கரங்களால் வணக்கம் சொல்லி எவரையும் வரவேற்கும் சுகன் குடும்பத்தவரின் பண்பாடு பற்றி சிலாகித்த செழியன் மாமியாருக்கு விழா எடுக்கும் மருமகளான செளந்தரவதனா மிகவும் பாராட்டப் பட வேண்டியவர் என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்.... வாழும் போதே மாமியாரும் மருமகளும் சரியான புரிதல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில், தன் அன்புக்குரிய கணவனைப் பெற்று ஆளாக்கி, தனக்காகவே தந்திருக்கும் அந்த அத்தைக்கு சிறப்பாக விழா எடுக்கும் மருமகளை பாராட்டுவது தானே சிறப்பு...! சுசீலாம்மாவின் எழுத்துக்களை பதிவுகளாக்கும் சுகனை பாராட்டிய அவர் சுசீலாம்மா எழுதிய வறுத்த மீனும் வண்ணாத்திபுருசன் கடை சீவலும் கட்டுரைக் குறித்து சிலாகித்தார். சுகன் பல கோணங்களில் தன் பார்வையை செலுத்தி தஞ்சையைப் பற்றிய சிறப்பான பதிவு ஒன்றைத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரசனை மிகுந்த வரிகளால் படிப்பவர் மனதை மயக்கும் சுகன் நிறைய எழுத வேண்டும் என்பது தானே நமது ஆவலும் கூட....இதன் தொடர்ச்சியாகப் பேசினார் கவிஞர் கவிஜீவன். சுகனும் அவரும் பள்ளித் தோழர்கள் என்றுக் குறிப்பிட்ட அவர், சுகனின் விருப்பம் அறிந்து, அவரை இயங்க வைத்த அம்மாவை நினைத்து நெகிழ்ந்தார். மிகுந்த கோபக்காரனாய் இருந்த தனக்கு கோபத்தைக் குறைத்துக் கொள்ளும்படி அம்மா சொன்ன அறிவுரைகளை நினைவு கூர்ந்தார்.....
நிறைவாக ‘ஞாபகவெளியில் பறந்து’ பேச வந்தார் வெற்றிச்செல்வன். தீராநதியில் வந்த வாசுதேவன் எழுதிய ’வீடு’ என்ற கவிதையுடன் பேச ஆரம்பித்தார்.
‘இந்தத் தெருவில்
குரைப்பதற்கு
நாய்கள் கூட இல்லை’
என்றுத் தொடங்கும் அந்த கவிதை இன்றைய உலகில் மனிதர்கள் எந்த அளவுக்கு தன் சுயம் சார்ந்து மட்டும் யோசிக்கிறார்கள் என்பதை சோகம் இழையோடும் குரலில் பதிவு செய்திருந்தது. அந்த கவிதையை வாசித்த வெற்றிச்செல்வன் ‘இது மாதிரியான வீடுகள் நிறைந்த இந்த உலகில் சுகன் வீடு போன்ற வீட்டுக்கான விசையாக இருந்தவர் அம்மா. சவால்களைத் தாண்டி பிள்ளைகளை வளர்த்தல், அவர்களை ஒரு படி உந்தித் தள்ளி அடுத்தக்கட்ட நகர்தலுக்கு வழி நடத்துதல் என்று உந்துசக்தியாக இருந்தார் அவர். இந்த புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அம்மாவைப் பார்க்கையில் அவரது ஆளுமை புரிகிறது. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் முதல் முதலாக பாரதி தான் தன் மனைவியை அமர வைத்து தான் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டவன். கணவன் அருகில் இழுத்துப் போர்த்தியபடி பெண்கள் நின்று படம் எடுக்கும் வழக்கம் இருந்த அந்த காலத்தில் அவரது இந்த தோற்றம் அவரது திடமான ஆளுமையை எடுத்துரைக்கிறது. இன்று சுகன் ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டாம் தேதிக்குள் சுகன் இதழை நம் கைகளில் சேர்ப்பிக்கிறார் என்றால் அது அவரது அம்மா அவருக்கு அளித்த தெம்பு. சுகன் என்ற நல்ல மனிதரின் வெற்றி நட்சத்திரம் ஒளிர்கிறது என்றால் அதற்கு அம்மா தான் காரணம். சுகனது வெற்றிகள் அவரது அம்மாவின் காலடிக்கு சமர்ப்பிக்கப் பட வேண்டியது. நோய் வாய்ப்பட்ட நிலையிலும் கூட வீட்டிற்கு வருபவர்களிடம் நோயின் சாயல் சிறிதும் தெரியாது புன்னகைத்தவர் அம்மா. மனிதர்கள் உரையாடலைத் துவக்குவதற்கான சாவி புன்னகை. சாவிகளைத் தொலைத்து விட்ட நம் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அம்மாவை நினைக்கிறேன். அன்பான அறிவார்ந்த தாய் என்பவள் சமூக அசைவு இயக்கத்தை துவக்குவதற்கான உந்து சக்தியாக இருக்கிறாள். அம்மா அப்படிப் பட்டவராக இருந்தார். புதிய பண்பாட்டுத் திருவிழாக்களை உருவாக்காமல் பழைய பண்பாட்டுத் திருவிழாக்களை மாற்ற முடியாது என்றார் லெனின். பண்பாட்டுச் சங்கிலிகள் அறுபடாதவாறு இது போன்ற விழாக்களை நம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த நிகழ்வை விடாமல் சிறப்பாக நடத்தும் சுகனும், அவருடைய குடும்பமும் பாராட்டுதலுக்குரியவர்கள். தொல்காப்பியத்தில் காதல் உணர்வுகளைக் கூறும் போது ‘ நோக்குபவை எல்லாம் அவையே போறல்’ என்பது போல, அம்மாவின் இந்த விழாவில் திருமதி சுகன், சுகலீலா என்று எல்லோரையும் பார்க்கும் போது அம்மாவையே பார்ப்பது போல உள்ளது’, என்று பேசினார். பொதுவாகவே வெற்றிச்செல்வன் மிக அருமையாக உரை நிகழ்த்துவார். எந்த தடங்கலுமின்றி அழகான கருத்துக்களுடன், சுவைப்பட பேசுவார், சலசலத்து ஓடும் அருவி நீரைப் போல..... இன்றைய நிகழ்வில் அவரது பேச்சு அத்தனை சுவாரசியமாய் இருந்தது.இறுதியாக தலைமை உரை நிகழ்த்தினார் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம். நிகழ்வின் தொடக்கத்தில் சிறிது நேரமும் இறுதியில் சிறிதுமாக பேசிய அவரது பேச்சு சுவைமிகுந்ததாக இருந்தது. ‘ சுகன் குடும்பத்தில் உள்ளவர்களது ஆளுமையில் அம்மாவின் பாதிப்பு முக்கியமானது. ஆளுமை மிக்கவர் அம்மா. மாற்றுச்சிந்தனை, பண்பாட்டு, கலாச்சார அரசியல் ஏற்பாடு தான் சிற்றிதழ்கள் என்பது. அப்படியான சிற்றிதழை தொடர்ந்து நடத்தி வரும் சுகன் அன்னையைக் கொண்டாடுபவராய் இருக்கிறார். இது பெருமைப் பட வேண்டிய நிகழ்வு. ‘பயணம்’ என்ற சிற்றிதழில் நடுப்பக்கத்தில் இதழாசிரியர் கார்க்கி தன் 85 வயது அம்மாவின் நிழல்படத்தை வெளியிட்டிருக்கிறார். (சிற்றிதழைக் காட்டினார். சிறப்பான செய்தி) உடலின் பாதியாக இருக்கிறாள் அம்மா. அவளது இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. இந்த சமூகத்தில் தாய்மை என்பதே ஒரு ஏமாற்றமாக இருக்கிறது. அது ஒரு நுண் அரசியல். பொறுப்புகளைத் பெண்களிடம் விட்டுவிட்டு ஆண்கள் சுகமாயிருக்க செய்த ஏற்பாடு. இப்போதும் கூட பல குடும்பங்களில் முக்கியமான முடிவுகளை சித்திகளும், அத்தைகளும் வந்து எடுக்கும் நிலை உள்ளது. நமது சமூகத்தில் தாயின் பங்கு அதிகம். நான் தாயில்லாமல் வளர்ந்தவன். என்னை என் பெரியம்மா வளர்த்தார். இன்றும் என்னில் அவரது ஆளுமை இருக்கிறது. என் கவிதைகளின் மொழியைத் தந்தவர் அவர். பிள்ளைகளை ஆளுமைச் சிதைவின்றிப் பார்த்துக் கொள்கிறவள் அம்மா. சுகன் அப்படி அம்மாவால் கட்டமைக்கப்பட்ட ஆளுமையில் வளர்ந்திருக்கிறார். அப்பா ஆயிரம் முறை சாகலாம், ஆனால் அம்மா ஒரு முறை கூட சாகக் கூடாது. சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி போன்றவர்கள் அம்மாக்களால் கட்டமைக்கப்பட்டவர்கள். அடுத்தடுத்த அமர்வுக்கு அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வந்திருந்து, இந்த நிகழ்வை அனுபவிக்கவேண்டும். இது போன்ற நிகழ்வுகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது அடுத்த தலைமுறையினரால் செய்யப்பட வேண்டும். அன்னையர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.சுசீலாம்மா அப்படிப் பட்ட ஒரு அம்மா. ’அடுத்தது காட்டும் பளிங்கு போல்’ முகம் மனதைக் காட்டும் என்பான் வள்ளுவன். அந்த வள்ளுவன் சொல் பொய்த்துப் போன வீடு இது. தன் மனதின் எந்த வலியையும் முகத்தில் காட்டாத அம்மா வாழ்ந்த வீடு. ’பகை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும், பேரன்பு மட்டுமே மன்னிக்கும்’, அந்த பேரன்பு அம்மாக்களிடம் மட்டுமே உள்ளது. நம் சம காலத்தில் நம் கண்முன் வாழ்ந்த ஒரு தொன்மம் சுசீலாம்மா. பண்பாடு நிறைந்த குடும்பமாக இந்த குடும்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படி ஒரு முன் மாதிரியான குடும்பத்தை விட்டுச்சென்ற சுசீலாம்மாவுக்கு என் வீர வணக்கம்”, என்று தன் பேச்சை நிறைவு செய்தார். அபாரமான அவரது பேச்சு செவிக்கும் சிந்தனைக்கும் இனிமையாய் இருந்தது.
கடைசியாக சுகன் நன்றி தெரிவித்தார். ‘ அம்மா நேசித்த இலக்கியத்துடன் இந்த விழாவை நடத்தும் போது மனம் நிறைவாயிருக்கிறது. துளித்துளியாக நான் சேர்க்கும் இனிமையை கடலாக மாற்றிக் காட்டிய உங்கள் எல்லோருக்கும் என் நன்றி. இது போன்ற விழாக்களுக்கு இலக்க்கியம் ஒரு இணைப்புப் புள்ளியாக இருக்கிறது. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் ‘ , என்று கூறி நிகழ்வை முடித்து வைத்தார். விழா முடிந்த பிறகு அனைவருக்கும் இரவு உணவு ‘இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார், இனிப்பு’டன் சேர்த்து வழங்கப்பட்டது. இன்னும் வேண்டுமா என்று கேட்டுக் கேட்டுப் பரிமாறிய சுகன் பிள்ளைகளையும், அவரது சகோதரி கார்த்தியின் பிள்ளைகளையும் உச்சி முகரத் தோன்றிற்று..... திருப்தியாக உண்டு முடித்து வீட்டிலிருந்த பிள்ளகளுக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தப் போது வீட்டிற்கு வெளியே ‘கூட்டம் முடிந்த பின் கூட்டம்’ நடந்து கொண்டிருந்தது... அதிலும் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் வீட்டிற்கு கிளம்பினேன், அடுத்த வருடம் மார்ச் 9ம் தேதியை மனதில் தேக்கி......
நன்றி; சௌந்தர சுகன்.
குறிப்பெடுத்துக் கொண்டு, கட்டுரையாக எழுதுங்கள் என்று தூண்டிய இனிய 'நிலா மகளுக்கு'
பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகுறிப்பெடுத்துக்கொண்டு எழுதிய கட்டுரை போல் தெரியவில்லை. நேரடி வர்ணனை போலவே அருமையாக உள்ளது.
ReplyDeleteகவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
சுகனில் படித்தாலும் வலைப்பூவில் வாசிக்கும் போதும் மனம் நிறைக்கிறார் அம்மா! வராதவர்களுக்குமானதாக நிகழ்வை, கருத்துக்களை நிறைத்துத் தந்த உங்களுக்கல்லவா நாங்கள் நன்றி கூற வேண்டும்!
ReplyDeleteவணக்கம்.....
ReplyDeleteஉங்க வலைபதிவு ரொம்ப நல்லாருக்கு.
எனக்கும் தாஞ்சாவூர் பக்கம் தான்.....
நண்றி.............
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களுடைய வலையுலக முன்னேற்றத்திற்காக ஒருசில விஷயங்கள் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்கு விருப்பமானல் தங்களின் மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்கவும்.
ReplyDeleteஅன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
valambal@gmail.com