Saturday, March 7, 2015

மகிழ்ச்சி மலரட்டும்......

நாளை சர்வதேச மகளிர் தினம்..... மகளிர் தினத்துக்கென்று தனியாய் பதிவு எழுதாவிட்டால் என்ன, இதோ ஒரு சந்தோஷக் கவிதை...... ஒரு நிகழ்ச்சிக்கென்று எழுதிய இந்த கவிதையை மகிழ்ச்சியான தருணங்களில் வாசிக்கத் தகுந்ததென்று நான் நினைக்கிறேன்... அதையே மகளிர் தின கவிதையாய் இங்கு பதிவேற்றுகிறேன்..........


அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்......





எது மகிழ்ச்சி
                    என பட்டியலிட்டால்
பல புது மகிழ்ச்சிகள்
                   புலப்படக்கூடும்
இதோ
என் மகிழ்ச்சிகள் சில........

இதிலே பலவும்,
உங்கள் மகிழ்ச்சிகளாகவும்
இருந்து விடக்கூடும்......

கேளுங்களேன்.....
நான்
நடந்து செல்லும் சாலையில்
நாலைந்து மரங்களாகவது
நிழல் தர நின்றால்
மகிழ்ச்சி.....


பல்லாங்குழியோ, பச்சைக்குதிரையோ
கல்லா மண்ணா, கால் விளையாட்டோ
யாராடக் கண்டாலும் 
மகிழ்ச்சி.....

யாசகம் ஏந்தும் 
கரங்கள் இல்லாத 
கோவில் வாசலைக் 
கடக்கையில் மகிழ்ச்சி....



கவிதை எழுதிப் 
படிக்கையில் மகிழ்ச்சி
கேட்டதும் பலபேர் கைத்
தட்டினால் மகிழ்ச்சி.....

அங்கே நீயும், இங்கே நானும்
எதிர் எதிராக பிரிந்து நின்றாலும்
நானும் நீயும்
நாமென்றானால் வேறேது மகிழ்ச்சி.....

வாலிபம் போன பின்னும்
அழகி நீ என்று சொல்லி
வார்த்தையால் யாரும் ரசித்தால்
ரகசியமாய் வரத்தான் செய்கிறது 
ஒரு மகிழ்ச்சி.....

குளிரைத் தாங்கி முக்காடு போட்டபடி
குந்தியிருந்து வரைந்து முடித்த பின்
கோலம் பார்க்கையில் கொள்ளை மகிழ்ச்சி......

நேற்று வாங்கிய புதினாக்கட்டு
இன்று என் தொட்டியில் 
துளிர்த்துக் காண்கையில் துள்ளும் மகிழ்ச்சி.....

வருடா வருடம்
புத்தாண்டு மகிழ்ச்சி
புத்தாண்டில் வருகின்ற
தைப்பொங்கல் மகிழ்ச்சி.....



காதலில் மடத்தனம் மகிழ்ச்சி
காதலில் மடத்தனம் தான் மகிழ்ச்சி......
உள்ளம் நிறைந்த காதல் கணவனோடு
பள்ளியில் கொஞ்சி, பாதியில் ஊடி
கலவியில் கரைந்து காணாமல் போனால்
அது தான் மகிழ்ச்சி.....

வெல்லம் கடித்து தயிர்சாதம் தின்பது
சொல்ல முடியாத அத்தனை மகிழ்ச்சி....
உப்பும் மிளகாயும் தடவிய வெள்ளரி
சப்புக் கொட்டித் தின்றால் மகிழ்ச்சி....


சும்மா இருப்பது எத்தனை மகிழ்ச்சி,
சும்மா இருப்பது எத்தனை மகிழ்ச்சி....
சும்மா இருக்கும் நேரத்தில் சில 
சுவைமிகு சம்பவம் நினைத்தாலே மகிழ்ச்சி.....

புத்தகம் பலதையும் பரப்பி வைத்து
சத்தம் இல்லாத சூழலைப் படைத்து
அமர்ந்தோ, படுத்தோ ஏகாந்தமாக
வாசித்தப்படியே இருத்தல் மகிழ்ச்சி....

எந்த ஆட்சி வந்தாலும்
எந்த ஆட்சி வந்தாலும்
நாம்
கந்தலாய் மாறாதிருந்தால் மகிழ்ச்சி....

மழைக்காலம் முடித்த பின்பு இந்த
மண்ணில் இருக்கின்ற 
ஏரிகள் குளங்கள் எல்லாம்
நீரை ஏந்தியிருக்கக் கண்டால் மகிழ்ச்சி....
சாலையில் புதிதாய்
குட்டைகள் தோன்றாதிருந்தால் கூடுதல் மகிழ்ச்சி.....

காய்விட்டுப் பிரிந்து
காணாமல் போன பள்ளித்தோழி
கல்யாணம் காட்சியில்
காணக் கிடைத்தால் மகிழ்ச்சி.....





ஒத்த சிந்தனை கொண்ட 
பத்து நண்பர்கள் கிடைத்தால் 
பஞ்சமேயில்லை மகிழ்ச்சிக்கு.....

ஆயிரம் ஆயிரமாய்
ஊதியம் வாங்கினாலும்
அரை ரூபாயாவது என் 
கவிதைக்கு கிடைத்தால் மகிழ்ச்சி......

வாழ்வின் போக்கிலே 
வருடும் மகிழ்ச்சியை
விடாமல் பிடித்தால் உன்னதம் மலரும்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி என 
நாம் பேசும் பேச்சு
மலர்ச்சியை வழங்கும்....

எத்தனை மலர்ச்சிகள் 
நம்முடைய கனவு...?
அதையும் கேளுங்கள்.....

நல்லதையெல்லாம் கேட்கும் வண்ணம்
நம்முடைய காதுகள் மலரட்டும்....

அழிவை அழிக்கின்ற 
அறிவியல் மலரட்டும்..

அன்னைத் தெரசாக்கள் தேவையில்லாத
ஆரோக்கியமான மனங்கள் மலரட்டும்.....

பெண்ணடிமை எனும் சொல்லற்ற
பேருலகம் மலரட்டும்....

வன்முறையின் வழியறியா 
வசந்த வாழ்வு மலரட்டும்.....

பெண்ணோ ஆணோ மூன்றாம் பாலோ
சமத்துவம் மலரட்டும்.....













(நன்றி: கவிதை வாசிக்க அழைத்த தஞ்சை செழியன் மற்றும் கவிதை எழுத ஆலோசனை வழங்கிய பிரியத்துக்குரிய அமிர்தம் சூர்யாவுக்கு)

2 comments:

  1. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமையாய் எழுதியிருக்கீங்க ப்ரியா! மகிழ்ச்சியாய் உணர்கிறேன்.எல்லா வரிகளுமே ரொம்ப யதார்த்தமாய்... இயல்பாய்... மகிழ்வாய்....

    ReplyDelete