உருமாற்றம்
சிறகுகளின் மீதான ஆசை
தினமும் அவளை வதைக்கிறது....
குதிகால் வெடிப்புகளிலும்
நகக்கண்களிலும்
அழுக்கில்லாத தொலைவிற்கும்
(அல்லது நகங்களும் குதிகால் வெடிப்புகளும்
இல்லாத ஒரு தேசத்திற்கு)
வியர்வையும், மாதவிடாய் ரத்தமும்
ஒழுகாத உயரத்திற்கும்
(அல்லது சுரப்பியும் யோனியுமற்ற
அந்தர வெளிக்கு)
தன்னைக் கொண்டு செல்லும்
ஒரு ஜதைச் சிறகுகளைக்
காய்கறிகளுக்கிடையிலும்
பாத்திரங்களினடியிலும்
அவள் தேடித் தவிக்கிறாள்.
மாறாகத் துயரங்களின் பளு தன்னை
இன்னும் தரைதட்டாத பள்ளத்தை
நோக்கியே இழுக்கிறது என்று
உன்னிடம் புலம்புகிறாள்...
தேவதை என அவளை நீ
விளித்தவொரு மாலையிலிருந்து
அவள் பாடு இவ்விதமாய்க் கழிவதை
நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்....
அவ்வப்போது குழந்தையின் பீத்துணியைத்
தன் தோள்களின்மீது
ஒட்டவைத்துக் கொண்டு
குழந்தைகளும் தேவதைகளின் உலகத்தைச்
சேர்ந்தவர்கள்தானே என்று
கேட்டுவிட்டு உன் பதிலுக்காக
அவள் ஆவலுடன் காத்திருக்கிறபோதெல்லாம்
மிகத் தாமதமாக உன் கண்களில்
கண்ணீர் பெருகுகிறது
அவளை நீ
அந்தப் பெயரால் அழைத்திருக்கக் கூடாது....
-------------------------------------------------------------------------------------------------
கவிஞர் பா. வெங்கடேசனின் “ நீளா “ கவிதைத் தொகுப்பிலிருந்து
அருமை
ReplyDeleteஉண்மைகளை ஒரு சிறிய பொய் கொண்டு எவ்வளவு அழகாக நம் சமுதாயம் மறைத்து வைத்திருக்கிறது!சிறகிருந்தும் பறக்க மறந்த பறவையாய்....
ReplyDeleteசிறகிருந்தும் பறக்க மறந்த பறவையாய் தான் நாங்கள் இன்னமும் இருக்கிறோம்.பறக்க யத்தனிக்கையில் அழுத்துகின்ற பாரம் சாபமாய் ....
ReplyDeleteசிறகிருந்தும் பறக்க மறந்த பறவையாய் தான் நாங்கள் இன்னமும் இருக்கிறோம்.பறக்க யத்தனிக்கையில் அழுத்துகின்ற பாரம் சாபமாய் ....
ReplyDelete