Monday, July 15, 2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம். 14/07/2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம்....

 காலையில் தொலைக்காட்சியில் கேட்ட ( பார்த்த?)  செய்தி கொஞ்சம் வருத்தப்பட வைத்தது. பழையன கழிதலும், புதியன புகுதலும் எப்போதும் உள்ளது தான் என்றாலும், சில பழையன கழிகையில் வலிக்கத் தான் செய்கிறது....

இன்றைய தலைமுறைக்கு தந்தி என்பது அவ்வளவாக பரிச்சயப் படாத ஒரு விஷயம். கடிதமும்,தந்தியும் மட்டுமே தொடர்பு சாதனங்களாக இருந்த காலத்தில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தந்தி சேவை நிறுத்தம் ஒரு சின்ன வலியையாவது தரத் தான் செய்யும்..

சினிமாவில் , ’சார்,  தந்தி’என்ற குரலும், சீருடை அணிந்த ஒருவர் ஒரு காகிதத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு ஒரு மடித்த காகிதத்தை தந்து போவதும் காட்டுவார்கள். காகிதத்தை வாங்கியவர் அதனை பிரித்துப் படிப்பார்.ஆனால் நிஜத்தில் தந்தி பிரித்த ஒரு காகிதமாகவே வரும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக்கொண்டு வரும் அந்த காகிதத்தை சீருடை அணிந்த பணியாளரும் வழங்கியதில்லை. தந்தி மேன் என்று ஒருவர் இருப்பார். அவரைப் பார்க்கும் போதே பயமாக இருக்கும்.
எப்போதும் அபசகுணமான எதையாவது சொல்லப் போகிறவராகவே அவர் தோற்றமளிப்பார்.

தந்தி பற்றி, தந்தி கண்டுபிடிக்கப்பட்டது பற்றி கட்டாயம் ஒரு பாடம் இருக்கும் பள்ளியில் அப்போதெல்லாம். அதில் சொல்லப் பட்டிருக்கும் டட்டட்ட என்ற ஒலி வருகிறதா என்று பார்ப்பதற்காக தபால் நிலையம் போன காலம் ஒன்று உண்டு.

திருமணங்களில் வாழ்த்து தந்தி பிரபலமான விஷயம். என் திருமணம் குருவாயூரில் நடந்தது. என் திருமணத்திற்கு வர முடியாத என் நண்பர்கள் எனக்கு அனுப்பிய அத்தனை வாழ்த்து தந்திகளும் ஒரு கோப்பாக என்னிடம் இருக்கிறது. தந்தி சேவை நிறுத்தப் பட்ட பிறகும், அவை என்னுடன் இருப்பது ஒரு பெருமையாய் தோன்றுகிறது. பழுப்பேறிப் போன அந்த காகிதங்களுக்குள் எத்தனை இனிமையான நினைவுகள் புதைந்து கிடக்கிறது. ?! அவை வெறும் தந்திகள் மட்டுமல்ல...  நான் எத்தனை பேருக்கு முக்கியமானவளாக இருந்தேன் என்று எனக்கு உணர்த்தும் சாசனம் போல் ....


ரொம்ப சின்னவளாக இருந்த காலத்தில் கண்ணால் பார்த்திருக்காத அத்தை மறைந்து விட்டதாக வந்த ஒரு தந்தியை கையில் வைத்தபடி தலை குனிந்திருந்த அப்பாவின் முகம் தந்தி பற்றி யோசிக்கையில் தவறாமல் நினைவுக்கு வருவதுண்டு.

இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் சின்ன மாமா, திருமணமாகாத ’சின்ன’ மாமாவாக இருந்த போது வந்த ஒரு தந்தி இப்போது நினைக்கும் போதும் சிரிப்பை வரவழைக்கிறது. தங்கப்பன் எக்ஸ்பயர்ட் என்று தந்தி மேன் வாசித்ததும், அய்யோ என்று அலறி என் அம்மா துடித்ததும், தந்தியை வாங்கி பையில் வைத்துக் கொண்டு அப்பா கார் பிடிக்க் ஓடியதும், வாண்டுகளான எங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு கார் பறந்ததும் சாதாரண விஷயம். பாட்டி வீட்டுக்குப் போய் இறங்கியதும் அழுதபடி உள்ளே ஓடிய  எங்களை ,’என்ன இப்படி ஓடி வர்றீங்க? என்று எதிர் கொண்டழைத்தார் எங்க சின்ன மாமா.... அழுகை அதிர்ச்சியாகி, ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றோம் நாங்கள்..
பிறகு , அந்த நாளில் அதிகமாய் படித்திருந்த (பி.ஏ) சின்ன மாமாவிடமே தந்தியைக் கொடுக்க, அவர் வாசித்துக் காட்டினார்...’ தங்கப்பன் இயர் பெயின்’ என்று.... அழுகை மறந்து சிரித்ததும், புளியங்கொட்டையை காதுக்குள் விட்டுக் கொண்டு வலியில் மாமா செய்த அலம்பலில்  குடும்பத்தில் இருந்த நர்சம்மாவுக்கு(எங்க அம்மா தான்) தாத்தா அனுப்பிய தந்தி என்பதும் பிறகு புரிந்து கொண்டோம். ஊருக்குத் திரும்பிய பிறகு தந்தி மேனுக்கு செமத்தியான கவனிப்பு நடந்தது வேறு விஷயம்.....
 அந்த அனுபவம் தந்த பாடம் தானோ என்னமோ, எங்கள் எல்லோரையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று என் பெற்றோர் முடிவெடுத்தனர். தந்தி படிக்க ஒரு ஆள் வேண்டாமா வீட்டில்.....?

வேலைக்குப் போன பிறகு, அவசர விடுப்புகளுக்கான  விடுப்புக் கடிதமாக தந்தி பல முறை பயன்பட்டிருக்கிறது..  சென்ற வருடத்தில் ஒரு நாள் திடீரென்று ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை. அன்று  ஒரு பயிற்சி இருப்பதால் விடுப்பு வழங்க இயலாதென்று தொலைபேசி வழியே என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட, பழைய நினைப்பில் தந்தி கொடுக்க தபால் நிலையம் போனேன். தஞ்சை தபால் நிலையம் அருகிலேயே தொலைத்தொடர்பு நிலையமும் உள்ளது. தபால் நிலையம் போய் தந்தி என்றதும், அடுத்த கட்டிடம் என்றார்கள்... நான் அடுத்த கட்டிடத்தைத் தேடுகிறேன்., அது தொலைத்தொடர்பு நிலையம். இங்கேயா போக வேண்டும்..? என்ற யோசனையோடு உள்ளே போய் ‘தந்தி கொடுக்க வேண்டும்...’ என்று தயங்கி தயங்கி சொன்னதும், ஆமாம் இங்கே தான். எந்த ஊருக்கு தரனும்? தந்தி நாளைக்குக் காலையில் தான் போகும், பரவாயில்லையா என்று கேள்விகளாய்க் கேட்டார் இருக்கையில் இருந்தவர். தஞ்சையில் இருந்து அரை மணி தூரத்தில் இருந்தது நான் தந்தி அனுப்ப இருந்த ஊர். ஏன் இத்தனை தாமதம் என்றதும் ‘ எந்த காலத்திலம்மா இருக்கீங்க? இப்பல்லாம் யார் தந்தி கொடுக்கிறா? தந்திக்குன்னு ஆளெல்லாம் கிடையாது. தபால்காரர் தான் வழக்கமான தபாலோடு கொண்டு போய் கொடுப்பார்.’ என்று சொல்லி விட்டு ஒரு விசித்திரப் பிறவியைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார்.... ரொம்ப சோகமாகி, தந்தியே கொடுக்காமல் திரும்பி வந்து விட்டேன்.....

ஒன்றிலிருந்து பதினாறு வரையிலான எண்கள் நிரந்தரமான சில தந்தி வாசகங்களுக்காக என்றிருந்தன. அப்போதெல்லாம் டைரிகளில் எஸ்.டி.டி கோடுகளோடு, இந்த தந்தி வாசகங்களும் அதற்கான எண்களும் கட்டாயம் தரப் பட்டிருக்கும்..... ம்ம்ம்ம் எத்தனையோ விஷயங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன..... ”அந்த காலத்தில ,,,”, என்று சொல்வதற்கென்று நினைவு அடுக்குகளில் பலவற்றை சேமித்துக்கொண்டிருக்கிறோம்...  பத்துடன் ஒன்று பதினொன்றாய் இன்று தந்தி.......இதோ இந்த பதிவை நான் எழுதி முடிக்கும் போது தந்தி சேவை முழுதுமாய் நிறுத்தப் பட்டிருக்கும்......   கால வளர்ச்சியில் சில மறைவது இயல்பு தான்   என்றாலும் கூட பல காலம் கூடவே வந்த இனிய தோழி  நிரந்தரமாய் பிரிந்து செல்வது போன்ற ஒரு உணர்வை தவிர்க்க முடியவில்லை... நீ பிரிந்து சென்றாலும் உன் நினைவுகள் பசுமையாய் நிலைத்திருக்கும் .....  குட் பை தந்தி....... 

7 comments:

  1. என்ன இருந்தாலும் அந்த எதிர்ப்பார்ப்பு, படபடப்பு (சிலருக்கு பயம்) உட்பட பல உணர்வுகளும் இனி இல்லை...

    ரசிக்க (பதற) வைக்கும் பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்புள்ள சகோதரி

    தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறித்து எனது வருத்தத்தைப் பதிவிட்டிருக்கிறேன். உங்களின் பதிவில் நான் செய்யாத ஒரு பணி எனக்கு வந்த தந்திகளைக் கோப்பாகச் சேமிக்காததுதான். இருப்பினும் அப்பாவின் சேமிப்பில் ஏதேனும் இருக்கிறதா பழையன என்று தேடப்போகிறேன்.

    உங்களின் முகவரி குறிப்பிட்டால் என்னுடைய புத்தகம் அனுப்பி வைக்கிறேன். படித்துவிட்டு கருத்துரை எழுதுங்கள்.

    நன்றிகள்.

    ReplyDelete
  3. ”அந்த காலத்தில ,,,”, என்று சொல்வதற்கென்று நினைவு அடுக்குகளில் பலவற்றை சேமித்துக்கொண்டிருக்கிறோம்... //

    சின்ன மாமா... 'சின்ன'மாமா... ரசித்தேன்.

    ரொம்ப சோகமாகி, // எதிரில் அமர்ந்து பேசுவது போலவே எழுத்தும்!

    ReplyDelete
  4. .தினமணிகதிர் சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் .. தந்திக்கு அருமையான ஒரு நினைவு அஞ்சலி .. இயர் கெயின் ஆக இருந்த கட் கடா சப்தம் இனி தபால அலுவலகங்களில் கேட்காது என்பது துயரமான விஷயம்தான் ... தந்திக்கு குட்பை சொன்ன கட்டுரை உண்மையில் நெகிழ்வான 'ப்ரியா' விடை

    ReplyDelete
  5. அன்புள்ள

    தினமணிக்கதிர் நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப்போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள். கதிரில்
    உங்கள் முகவரி பார்த்து என் புத்தகத்தை அனுப்பியுள்ளேன். படிததுவிட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள். ந

    ReplyDelete
  6. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன் . இனி தொடர்வேன். சிறுகதைப் போட்டியில் வெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete