Tuesday, January 14, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்......

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்....
 என் சோம்பேறித்தனத்தில் இருந்து
நான் வெளியே வரக் கூட ஒரு தை பிறக்க வேண்டியிருக்கிறது......

என்னதான் வேலைப்பளு, இணைய இணைப்பு சரியில்லை, உடல் நலமில்லை  என்றெல்லாம் காரணங்களைச் சொன்னாலும் கூட, எழுதாமல் இருப்பதற்கு சோம்பேறித் தனமும் ஒரு முக்கியமான காரணம் தான்..

  சில நாட்களுக்கு முன்னால் என் அன்புத் தோழி நிலாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் 20 வருடத்திற்கு முன்பு எழுதிக்கிழித்தவற்றைப்(!)  பகிர்ந்து கொண்டேன்......   உடனே பளிச்சென்று ஒரு மின்னல் ,,,,, என் மூளையில் இல்லை, நிலாவின் மூளையில்.... ( உனக்கு ஏது மூளை என்றெல்லாம் அறிவுப் பூர்வமான கேள்வி கேட்கக்கூடாது)

“ஏன் ப்ரியா, நீங்கள் அப்போது எழுதிய கவிதைகளை, ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களா, இல்லை என்றால் இனியாவது செய்யுங்கள். அப்படியே அவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவேற்றலாமே” என்று ஒரு அருமையான யோசனை   தந்தார்.....

அட, கேக்க நல்லாத் தான் இருக்கு,,,,, என்று நான் யோசித்துக் கொண்டே பல நாளைக் கடத்தி, ஒரு வழியாக, இன்று போகிப்பண்டிகையைக் கொண்டாட, என் சோம்பேறித்தனத்தை பெருக்கித் தள்ளி, அறிவைப் பளிச்சென்றாக்கி (வீட்டைத் துடைத்து பளிச்சென்றாக்குவதை விட இது எளிதாகத் தானிருக்கு)
இதோ ஒரு பழைய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்......

“பழையனக் கழிதலும், புதியன புகுதலும்” என்பதை சிறிது நேரம் மறந்து விட்டு, இதை படியுங்கள்.......

2014இல் சந்தோஷமாய் என்னை வலை வீச வைத்தமைக்காக
என் பிரிய சகி (அட!) நிலாமகளுக்கு அன்பு நன்றிகள்........


பொங்கல் வாழ்த்துக்கள்
-------------------------------------

பொங்கல் நாளின் வாழ்த்துக்கள்
எங்கும் நிறைந்து செழிக்கட்டும்
 மங்கள கீதம் திசை தோறும்
மனங்கள் மயங்க ஒலிக்கட்டும்....

உழவர் வாழ்வில் இனியேனும்
 உயர்வின்  தீபம் ஒளிரட்டும்
கழனிகள் கண்ட அவருள்ளம்
களிப்பும் கண்டு .வாழட்டும்..

பெண்டிரின் உலகம் புன்னகையை
பெருமைக் கொண்டு புனையட்டும்
பண்டிதர் இங்கே பலப் பலவாய்
பல்சுவை நூல்கள் பகரட்டும்

மேன்மை புவியில் நிரந்தரமாய்
நிமிர்ந்து நின்று சிரிக்கட்டும்
சீர்மை கொண்டு எல்லோரும்
சிறப்பாய் மகிழ்வுடன் வாழட்டும்..........

 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்



நன்றி : 1989ம் வருட பொங்கல் சிறப்பிதழில் இந்த கவிதையை வெளியிட்ட "மங்கை" மாத இதழுக்கு........
I miss u "mangai".......

9 comments:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதைக்கும் பொங்கலுக்கும் சேர்த்து இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    சென்ற முறை தஞ்சை வந்திருந்தபோது உங்கள் ஃபோனுக்கு பல தடவைகள் முயன்றும் எனக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன். அடுத்த வாரத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு தஞ்சையில் தான் இருப்பேன்!!

    ReplyDelete
  3. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. மனோ மேடம்,
    நன்றியும், பொங்கல் வாழ்த்துக்களும்.....
    அடுத்த வாரத்திலிருந்து மூன்று மாதங்கள்.....!
    நிச்சயம் சில முறைகள் சந்திக்கலாம்......

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. என்ன ஒரு பெரிய மனசு உங்களுக்கு!!

    வீட்டை சரிசெய்வதைப் போல் கடினமில்லை எதுவும்...!!

    'சக மனுஷி' என்று புதிய விளக்கம் தந்து விட்டீர்கள்.. 'சகி' என்ற சொல்லுக்கு!

    பத்திகளின் தொடக்க வரிகள் பளிச் பளிச்!!

    நிறைவான வாழ்த்துக்கு மகிழ்வான நன்றி!

    (பாருங்க... நான் பண்டிகையிலிருந்து வலைக்கு வருவதற்குள் எத்தனை பேர்!)

    அடிக்கடி உங்க வலைப்பூ புதுப் பதிவு மணம் கமழச் செய்ய வழி பிறந்தது பிரியா!!

    ReplyDelete
  7. நன்றி தமிழ் சார்...
    என்னாயிற்று உங்கள் கவிதைத் தொகுப்பு பணிகள்.? விரைவில் கொண்டு வரலாமே....!

    ReplyDelete
  8. அப்படி புது மணம் கமழ்ந்தால் அந்த வாசத்துக்கு சொந்தக்காரர் நீங்களாகத் தான் இருப்பீர்கள் நிலா.....

    ReplyDelete