Monday, December 15, 2014

நட்பு

நட்பென்னும் தொடர்பதிவுக்கு என்னை நிலாமகள் அழைத்து ஆயிற்று இரண்டு மாதங்கள்...... இப்படி ஒரு சோம்பேறி என்று தெரிந்திருந்தால் பாவம் நிலா என்னை அழைத்திருக்கவே மாட்டார்.... என்ன செய்வது எல்லாம் விதி..
சரி,  முயலாக இல்லாவிட்டாலும், ஆமையாகவாவது கொஞ்ச தூரம் ஓடிப் பார்த்து விடவேண்டும் என்று முடிவெடுத்து இந்த தொடர் பதிவில் நுழைகிறேன்....
இதில் கேள்வி பதில் எல்லாம் இல்லை.
படித்தபின் தோன்றும் கேள்விகளுக்கு அவரவர்களே பதில் எழுதிக் கொள்ளலாம்.....(எப்பூடி...)

எத்தனை வயதில் நான் நட்புக்குச் சொந்தக்காரியானேன் என்று நினைவில் இல்லை. ஆனால் முகமும், பெயரும் மறந்து போன பல நட்புகள் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டு தானிருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் முகிழ்த்த நட்பு பலவும், கால வெள்ளத்தில் திக்குத்தெரியாமல் அடித்துச்செல்லப்பட்டு விட்டாலும் கூட, சில பெயர்களும் உருவங்களும் எங்கேயோ எப்போதோ கேட்ட ஞாபகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்று ஆசிரியையிடம் அதிகமாய் அடி வாங்கிய விக்டோரியா, தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள வெல்லம் கொண்டு வரும் பானு, பள்ளி விட்டதும் என்னை தன் விடுதி அறைக்குக் கொண்டு சென்று பொரியரிசி அள்ளித் தந்த ரமணி, படிப்பில் எப்போதும் எனக்குப் போட்டியாக இருந்து, வயதுக்கு வந்து விட்டாள் என்ற காரணத்துக்காக 8ம் வகுப்பிலேயே படிப்பு மறுக்கப்பட்ட பெளஜி, என்ன வியாதி என்றே தெரியாமல் இறந்து போன கன்னிக்குமரி என்று எத்தனை நட்புகள் ......
இன்னமும் பெளஜியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. இதோ இருக்கும் திருத்துறைப்பூண்டியில் இருக்கிறாள் என்று தெரிகிறது, கிடைக்கத்தான் இல்லை....
 புத்தகங்களைப் புரட்டும் போதெல்லாம், பாவாடையில் விரல்களை மறுபடி மறுபடித் துடைத்துக் கொண்டு பூப்போல பக்கங்களைப் புரட்டும் கன்னிக்குமரி நினைவுக்கு வருகிறாள். பள்ளி விட்டதும் அவள் வீட்டுக்கு ஓடியதும், அவள் என் பாட புத்தகங்களையும், நோட்டுப்புத்தகங்களையும் வாங்கி ஆசை தீரப் புரட்டிப் பார்த்ததும் நினைவுக்கு வந்து அவள் இறப்புக்கு இப்போதும் வருந்த வைக்கிறது. படிப்பில் அத்தனை ஆசை அவளுக்கு. ஏன் இறந்து போனாள் என்றே தெரியவில்லை. அவளுக்கு கன்னிக்குமரன் என்றொரு சகோதரன் இருந்தான், எங்கிருக்கிறானோ இப்போது....
பல வருடங்களுக்குப் பிறகு ரமணியைப் பார்த்தேன், என் உற்சாக குரல் அவளிடம் எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை....
எட்டாம் வகுப்போடு பள்ளி மாறிப் போன மலேசியா சாந்தியை பல வருடம் கழித்து அவள் கணவனோடு பார்த்தேன். அவளோடு மேடையில் நடனமாடிய “ நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற “ இப்போதும் அவளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது...
 ஒன்பதாம் வகுப்பில் அறிமுகமான சண்முகம், செல்வராஜை எல்லாம் மீண்டும் பார்க்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. கண்களால் காதல் சொல்லிக்கொண்டிருந்த ஹபிபுல்லா, இரட்டை அர்த்த பாட்டுக்கெல்லாம் தெளிவுரை சொல்லி கண்ணடிக்கும் சுமதி, ”எனக்குத் தேவைன்னா எப்போ வேனுமின்னாலும் உன்னை கீழேத்தள்ளிட்டு போயிட்டே இருப்பேன், அதனால என்னை நம்பாதே”, என்று தன் சாதிப் பெயரைச் சொல்லி அதுவே தன் சுபாவம் என்று சொன்ன இந்திரா , இப்படி மனக்குளத்தில் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் நீர்குமிழி நட்புகள் எத்தனை.....
 கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ஆறுமுகம் எதற்காகவோ பூச்சிமருந்தை அரைத்துக் குடித்து செத்துப் போனபோது அழக்கூட பயமாக இருந்தது, ஆறுமுகத்துக்கும் எனக்கும் காதல் என்று பள்ளிக் கூடம் சொல்லி விடுமோ என்று..... யாரிடமும் அதிகம் பேசாத இன்னொரு ஆறுமுகம் படித்து எஞ்சினியர் ஆகி விட்டதாக கேள்விப்பட்ட போது அவனைப் பார்த்து கைக்குலுக்கத் தோன்றுகிறது....
அதிகமாக பேசாமல், கைகளை இறுக்கிப் பிடிப்பதிலும், மெல்லமாய் சிரிப்பதிலும் தன் பிரியத்தைக் காட்டும் கமலி இங்கே பக்கத்தில் தான் எங்கோ இருக்கிறாள், அவளை பார்க்கத்தான் என்னால் முடியவில்லை... தேடிக் கொண்டிருக்கிறேன் அவளது தொலைபேசி எண்ணை....
படிக்கிற காலத்தில் அதிகமாய் ஒட்டாத சுகந்தா இப்போ அடிக்கடி பேசும் இனிய தோழியாய்....
வகுப்பறைக்குள் நுழைந்த அந்த நேரத்திலேயே என் மனதுக்குள்ளே நுழைந்து விட்ட செல்வி இப்போதும் என் மனதில் சிம்மாசனம் போட்டு சினேகித ராணியாக ....
நீளமாய் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு வரும் ஜெயந்தியால் ஏற்பட்ட அனுபவங்கள் மிகப் புதிரானது. அவள் என்னை மறந்திருக்கக்கூடும்......
கல்லூரிக்கு போன புதிதில் என்னைத் தங்கள் வட்டத்தில் சேர்த்துக் கொண்டு என்னை கும்மாளமிட வைத்த சகிலா, சசிகலா, ராணிபாஸ்கர், வித்யாலக்‌ஷ்மி எல்லோரும் ஒரே பள்ளியில் இருந்து வந்தவர்கள்... அமெரிக்கா போன வித்யா இந்தியா வந்து விட்டாளான்னு தெரியவில்லை, ராணிபாஸ்கரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை, சசிக்கு கல்யாணம் ஆனவரை தெரியும். சகிலா ஒருத்தி தான் அவ்வப்போது கண்ணுக்குத் தெரிகிறாள். வேறு துறையில் படித்தாலும், என்னிடம் எப்படியோ நெருங்கி விட்ட வசந்தி இன்னமும் என் நெருங்கிய தோழி. அவள் மகள் நிவேதாவுக்கு நான் பிரியமான ஆண்ட்டி....
கூடவே படித்த சித்ரா, டாக்டராகி, எனக்கு அதிகாரியாக ஆன பிறகு நட்பு தள்ளிப் போய் அதிகாரச் செருக்கில் அவள் வேலிப் போட்டது ஒரு அனுபவம் எனக்கு. கல்லூரித்தோழி ஹேமா இப்போதும் பார்க்கும் விதமாய் அருகிலேயே இருந்தாலும் வாங்க போங்க என்று அவள் தரும் மரியாதை என்னை ரொம்ப சங்கடப்படுத்தும்...
வேலைக்காகப் படிக்க மதுரை போனதில் துளிர்த்த நட்புகள் இப்போதும் புது மணம் மாறாமல்.....

ஒரே பதிவில் எப்படி நட்பூக்களை வரிசைப் படுத்தி முடிப்பது??????
இன்னும் ரெண்டு பதிவில் முடிக்க முயலலாம்.....
எனவே,


தொடரும்........

நன்றி: என்னை எழுதத் தூண்டிய நிலாவுக்கு........

4 comments:

  1. மனக்குளத்தில் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் நீர்குமிழி நட்புகள்

    நட்புப்பூக்கள் ரசிக்கவைத்தன.

    ReplyDelete
  2. நினைவுகள் என்றுமே இனிமையானவை
    அதிலும் நட்புகள்பற்றிய நினைவலைகள்
    சுகமானவை

    ReplyDelete
  3. @இராஜராஜேஸ்வரி
    வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சியைத் தருகிறது

    ReplyDelete
  4. @கரந்தை ஜெயக்குமார்
    உண்மை , நட்பின் நினைவுகள் எப்போதும் சுகம் தருபவை ...
    வருகைக்கும் , பதிவுக்கும் நன்றி

    ReplyDelete