Sunday, April 18, 2010

என் தேரைகள்

எப்படித் தான் விரட்டினாலும்
மீண்டும் மீண்டும் வந்து விடுகின்றன
குட்டிக் குட்டியாய்
தேரைக் குஞ்சுகள்...

விரட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு பொழுதிலும்,
தட்டிவிடுதலும், உடைந்து சிதறலும்
தவறாமல் நிகழ்கிறது....

எப்போது வருமோ
என்று பயந்தபடியே தான் திறக்கிறேன்
காற்றோட்டமான சமையலறைக்காக
ஆசையாய் வைத்த
சன்னல் கதவுகளை.....

அருகேயே நிற்கும்
வாழை மரங்கள் தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழல் என்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
வெட்டிவிட மனம் வரவில்லை
தேரைகளின் இருப்பிடத்தை....

வாழ்க்கையின் எத்தனையோ சிக்கல்கள்
இப்படித்தான்...

எடுக்க வழியிருந்தும் மனமில்லாமல்
அப்படியே சிக்கலாய்.....

கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்.



(நன்றி: சௌந்தர சுகன்)

No comments:

Post a Comment