Sunday, February 9, 2014

கவிதா





  “வா கவிதா, பையனை அழச்சிட்டு வரலயா?”.. என்ற படி கதவைத்திறந்தாள்
 மேகலா.  
“இல்லண்ணி, அவர் வீட்ல இருக்கார், அதான் விட்டுட்டு வந்தேன்” என்ற
கவிதாவின் குரல் சுருதி இல்லாமல் இருந்தது. கையில் இருந்த  சின்ன 
கூடையை கதவருகில்  வைத்தாள்.

“என்னங்க, கவிதா வந்து இருக்கா பாருங்க” என்றபடி ரூமைப்பார்த்து குரல்
கொடுத்த மேகலா, “ஏன் கவிதா, வாட்டமாய் இருக்க? சரவணன் வேலைக்குப்
போறாரா? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

“அவர் மறுபடியும் வேலையை விட்டுட்டார் அண்ணி. நாலுநாளா வீட்லதான்
 இருக்காரு.  அதான் அண்ணங்கிட்ட சொல்லி வேற வேலை எதிலாவது
 சேர்த்துவிட கேக்கலாம்னு வந்தேன்.”  தயங்கித்தயங்கி சொன்னாள் கவிதா.
 இவர்களது உரையாடலைக் கேட்டபடியே வெளியே வந்தான் மகேஷ்,
 கவிதாவின் அண்ணன்.


பெற்றோர் இல்லாத கவிதாவுக்கு எல்லாமாக இருந்து திருமணம் செய்து
கொடுத்துவிட்டுத்தான் தனக்குத் துணை தேடிக்கொண்டான்.
கவிதாவின் கணவனோ பார்க்கிற வேலையை அடிக்கடி விட்டுவிடுவதும்
மகேஷ் அவனுக்கு எங்காவது சிபாரிசு  செய்து வேறு வேலை
தேடித்தருவதும், இடையே வீட்டுச்செலவுக்கு பணம் தருவதும்
வாடிக்கையாய்ப் போனது.

 இரண்டு மாதங்களுக்கு முன்புதான், ஒரு டீ கம்பெணியில் விற்பனைப்
 பிரதிநிதியாய் மாதம் 5000 சம்பளத்துக்குச் சேர்த்துவிட்டு இருந்தான்.

“ஏன்…….. இந்த வேலைய ஏன் விட்டார் உன் புருஷன்.?” கவிதாவைப்பார்த்து
இறுகிய முகத்துடன் மகேஷ் அதட்டலாகக் கேட்க, கலங்கிப்போனாள் கவிதா.
“என்னங்க நீங்க? அமைதியா பேசுங்க. இப்பத்தானே வந்து இருக்கா, அப்புறம்
பேசிக்கலாம்”, என்று இடையில் புகுந்தாள் மேகலா.  கணவனுக்கு
தங்கைமேல் உள்ள பாசம் புரிந்தவள். அதனால் அவளுக்கும் கவிதாவின்மேல்
தனி பாசம் இருந்தது. 

“நீ சும்மா இரு மேகலா. எனக்கு அவள் பதில் சொல்லட்டும்.” கடுமையாக
மேகலாவிடம் பேசிய மகேஷ், “சொல்லு, ஏன் விட்டாராம்.” என்றான்
கவிதாவிடம். “ரொம்ப அலையவேண்டி இருக்காம், உடம்புக்கு
ஒத்துக்கலைன்னு…….” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “ஆமாம், சும்மா
இவரை ஏ.சி. ரூம்ல உக்கார வச்சு, மாசம் ஆயிரக் கணக்குல சம்பளம் தர
எவனாவது என்ன மாதிரி ஏமாளியத்தான் தேடனும். நீயும் அவனுக்கு புத்தி
சொல்லாம எங்கிட்ட ஓடி ஓடி வா. செலவுக்கு அப்பப்ப தெண்டம்
அழுவனும்னு என் தலையெழுத்து. இந்தா, இதுல 1000 ரூபாய் இருக்கு,
என்னால அவ்வளவுதான் தர முடியும். இனிமேல் நீயாச்சு, உன் புருஷனாச்சு,
என்னமோ பண்ணுங்க. என்னால என் குடும்பத்தை மட்டும்தான் பாக்க முடியும்.
கட்டி கொடுத்துட்டு, தங்கச்சி புருஷனையேப் பாத்துகிட்டு இருந்தா, எனக்குன்னு
எப்பதான் நான் சம்பாதிக்கிறது. அவங்க அவங்களுக்கு புரியனும்”, என்று
கோபமாக வெடித்தான் மகேஷ். 

அவனது பேச்சில் அதிர்ந்துபோனாள் கவிதா.  அவள் கண்களிலிருந்து கண்ணீர்
மாலையாய் பெருகிற்று. “என்னங்க நீங்க, வீட்டுக்கு வந்த புள்ளையை இப்படி
பேசுறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு” என்று கணவனை கடிந்துகொண்ட
மேகலா, “ அழாதே கவிதா, அண்ணன் பேசுறத பெரிசா எடுத்துக்காத” என்றபடி
கவிதாவை தோளோடு அணைத்துக்கொள்ள முற்பட்டாள். உதறினாள் கவிதா,
“நான் வர்றேன் அண்ணி” என்றபடி விடுவிடு என் வெளியே நடந்தாள்.  “கவிதா,
நில்லும்மா”, என்று பின்னால் ஓடிய மேகலா, கவிதா நிற்காமல்
ஓடியதைக்கண்டு, வேகமாக வீட்டுக்குள் வந்தாள். “ஏங்க இப்படி பேசுனீங்க,
உங்களுக்கு என்ன ஆச்சு”, கோவமாக கேட்டபடி கணவன் அருகில் வந்தவள்
அவன் கண்ணீரோடு அமர்ந்து இருப்பதைக்கண்டு  திடுக்கிட்டாள். “என்னங்க”
என்றாள் பதறியபடி.

“மேகலா…….. கவிதாவை ஒரு குழந்தைமாதிரி நான் வளத்துட்டேன். இந்த நாலு
வருஷமா அவ புருஷன் எத்தனை வேலை மாறிட்டான்? நாம தாங்குவோம்
என்கிற தைரியம் இருக்குறதாலதான் அவன் சறுக்கலைபத்தி கவலையே
படுறது இல்லை. இவளும் அவனுக்கு புத்தி சொல்லி திருத்த முயற்சி
பண்ணாம அண்ணந்தான் இருக்கானேன்னு எங்கிட்ட ஓடி வர்றா.  
எத்தனை நாளைக்கு இப்படியே விடுறது. சரவணன் திறமை உள்ளவன். கவிதா
மேல பாசமும் வச்சிருக்கான். அண்ணன் மேல கோவத்தோட போயி, அவ
அவங்கிட்ட அழுதா, அந்த அழுகை நிச்சயம் சரவணனை மாத்தும். அப்படி
அவன் மாறினா தானே அவங்க ரெண்டுபேருக்கும் நல்லது. அதனாலதான்
அப்படி பேசினேன். ஆனாலும் என் கைல நிறைய பணம் இருந்தும் வெறும்
ஆயிரத்தோட அவளை கோவமா பேசி அனுப்பினத நெனச்சா எனக்கு
தாங்கலை.  என் தங்கச்சி கண்ணீரோட போனத நெனச்சா என் இதயமே
வெடிக்குது மேகலா” என்று தேம்பி அழுத கணவனை கண்டு கலங்கி நின்றாள்
மேகலா.  


சிறிது தூரம் போனபிறகுதான், வீட்டு வாசலில் கூடையை விட்டு வந்தது
நினைவு வந்தது கவிதாவுக்கு.  கூடையை எடுக்க மீண்டும் வந்தவள்
அண்ணனின் பேச்சையும் அழுகையையும் கேட்டு நெகிழ்ந்து போனாள்.
அண்ணன் தந்த ஆயிரம் ரூபாயை கண்களில் ஒற்றிக்கொண்டாள். “நீ நெனச்ச
மாதிரி அவரை மாத்திக்காட்டுவேன் அண்ணா”,  மனதிற்குள் சபதம் செய்தபடி
ஓசை இன்றி திரும்பிப்போனாள், தெளிவாக!

 

 

நன்றி:  அமிர்தம் சூர்யா மற்றும்
        தினமலர் ( நெல்லை )

8 comments:

  1. அருமையான கதை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா

      Delete
  2. சபதம் எடுக்க வைத்த அண்ணன்...

    அண்ணன் என்றால் இப்படித் தான் இருக்கணும்...

    அருமையான கதைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி அய்யா,
      உடனுக்குடன் வருகை புரிந்து பாராட்டும் உங்கள் அன்புக்கு நன்றி

      Delete
  3. அருமையான கதை..!

    தினமலர் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. ஜனரஞ்சக இதழ்களில் வெளிவரும் ஒரு பக்க கதைக்கான இலக்கணத்தோடு எழுதப்பட்ட கதை இரண்டு பக்க நியாயத்தையும் சொல்வதால் இதை இரு பக்க கதை என்றும் சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. அடடா...
      ரொம்ப நன்றி பாரதி...
      சின்ன விஷயத்தைக் கூட பெரிதாகப் பாராட்டும் உங்கள் உள்ளம் அற்புதமானது...
      அப்படி பெரிய பாராட்டுக்கள் அதிகம் வாங்கிய பெருமைக்கு சொந்தக்காரி நான்....

      Delete