Thursday, March 17, 2011

நானும் என்னைப்போன்ற என் வீட்டு மேரியும்.

அன்று ஞயிற்றுக்கிழமை.  பொதுவாக எல்லோரும்  அந்த நாட்களில் எல்லா வேலைகளையும் ஆற அமர செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அலுவலகம் கிளம்புவதைவிட சுறுசுறுப்பாய் காலையிலேயே சமையலைத்  தொடங்கிவிடுவேன். ஆகா, நீ சுறுசுறுப்புத் திலகம்தான் என்று யாரும் எனக்கு அவசரப்பட்டு பட்டம் தந்துவிட வேண்டாம். என் சுறுசுறுப்பான சமையலுக்குக் காரணம், தொடர்ந்து எனக்கு கிடைக்கப்போகிற நிம்மதியான ஓய்வுதான்.  ஞாயிற்றுக் கிழமைகளில் மீன்குழம்பு வைத்து, உணவுக்கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் நன்றாக சாப்பிட்டு, அப்படியே போய் படுத்துக்கொண்டு அன்று வந்த தினசரி அல்லது ஏதாவது  புத்தகத்தை விரித்து லேசாக படிப்பதற்குள் அருமையாய் தூக்கம் வரும். கிட்டத்தட்ட 2  முதல் 3  மணி நேரம்  கூட தூங்குவேன். அப்படி மீன்குழம்பும் தூக்கமும் இல்லாத ஞாயிறுகளை என்னால் ரசிக்கவே முடிவதில்லை. மீனுக்கு பதிலாக வேறெதையும் சமைக்கக்கூட பிடிப்பதில்லை எனக்கு.

 இப்படி அருமையான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வந்தாள் மேரி.  மேரி முன்னொரு  காலத்தில் என் வீட்டில் வேலை செய்தவள். கிட்டத்தட்ட ஐந்து வருடத்துக்கு முன்பு வீட்டில் பாத்திரம்  தேய்த்து, துணி துவைத்து தந்த ஒரு பெண்  மீண்டும் நம்மைத்தேடி வருவது எத்தனை பேருக்கு நடக்குமோ தெரியாது. ஆனால்  ரொம்ப தூரத்தில் இருந்த என் வீட்டுக்கு மேரி அவ்வப்போது வருவதுண்டு.
மேரியை பல காரணங்களுக்காக எனக்கு பிடிக்கும். நாம் கேட்கிறோமோ இல்லையோ, மேரி எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள். வந்தவுடன் ஒரு டீ போட்டுக்கொடுத்தால் போதும். கொஞ்சம் நல்ல டீயாக தரவேண்டும். பக்கத்துக்கு வீடு ராணி தந்த தண்ணீர் டீயை கிண்டலடித்தபடி அதைக்குடித்தபடி வேலையை துவக்குவாள்.  அவளுக்கு 5 பிள்ளைகள். புருஷன் அவளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் போய்விட்டான். ஆனால்  மேரி அதற்காக எப்போதும் கவலைப்படுவதில்லை. "என்னம்மா, அந்தாளு இருந்தா மட்டும் என்ன.. குடிச்சுட்டு வந்து என்கிட்டயே காசு கேட்டு வம்பிழுப்பான். போறான் போங்க" என்பாள். அது உண்மையா, அல்லது அவள் மனதில் புருஷனில்லாத ஏக்கம் இருக்கிறதா   என்று புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை  என்னால். 
 அவள் உழைப்பில் 5 பிள்ளைகளையும் வளர்த்துவிட்டாள். மகன்களும் மகள்களும் அவர்களால் முடிந்த வேலைகளைப் பார்த்தபடி குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.  "எப்பயாச்சும் வந்து பிள்ளைங்களை பார்த்துட்டு போவன் அந்தாளு. என்கிட்டே பேசினா நான் மானாங்கானியா திட்டிபுடுவேன்" என்பாள்.  உண்மைதான்.   படித்து வேலைக்கு வந்தாலும் பல பெண்களுக்கு இல்லாத தைரியம் மேரியைப்போன்ற உழைக்கும் பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் ஒளித்து மறைத்து பேசுவதில்லை. அவள் மூத்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. ஆனால் அவள் புருஷன் அவளுடன் இல்லை. மருமகன் சண்டை போட்டுக்கொண்டு போய்விட்டதாக சொல்லுவாள்.  ஆனாலும் அந்த பெண் யாரிடமோ ஏமாந்து கர்ப்பவதியானதாக   பேசிக்கொள்வார்கள்.  அப்படி யாரும் பேசிக்கொள்வதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்வதில்லை. மகள் பெற்ற அவள் பேத்தியை  மிகவும் ஆசையாக  வைத்துக்கொள்வாள்.  குடும்ப கௌரவம், ஊரார் பேச்சு என்றெல்லாம் யோசித்து வாழுகிற, மனித உயிருக்கு மதிப்பளிக்காத மனிதர்களுக்கு மத்தியில் மேரியின்  இந்த இயல்பு என்னை ஆச்சரியப்பட வைக்கும்.  அடுத்தவர்களைப்பற்றி கவலைப்படாமல், தனக்குப் பிடித்ததை மட்டும் செய்துகொண்டே போகிற துணிவு இந்த பெண்ணுக்கு இயல்பாய் இருக்கிறதே. படித்து சுதந்திரமாய் இருப்பதாய் சொல்லிக்கொள்ளும் நமக்கு இந்த அளவு துணிவு உண்டா என்று என்னை நானே கேட்டுகொண்டதுண்டு.  இது ஒரு துணிவா என்று சிலர் நினைக்கலாம். மனதில் பட்டதை பேசுவதும், தனக்குச் சரியெனப்படுவதை, சூழ்நிலை காரணமாக விட்டுவிடாமல் செய்வதும் என்னைப்பொருத்தவரை துணிவுதான்.
 என் மனதில் மேரியைப்பற்றி இப்படி ஏற்பட்டிருந்த உயர்ந்த எண்ணங்கள் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது.  அவள் எப்போதாவது வந்து என்னைப் பார்த்துவிட்டு போவாள்.  வருகிற நேரத்தில்  வீட்டில் வேலை ஏதும் இருந்தால் செய்து தந்துவிட்டு "வைத்துக்கொள்ளுங்கள் மேரி" என்று எதை தந்தாலும் வாங்கிக்கொண்டு போய்விடுவாள். ரொம்ப தூரத்தில் நான் வீட்டைக்கட்டியதில் அவளுக்கு ரொம்ப குறை. "பஸ் ஏறி  இறங்குற இடத்தில இருந்தா  இந்த வீட்டுக்கும் தினம் நானே வந்து வேலை செஞ்சிருப்பேன்"  என்பாள்.

  அன்று திடுமென அவள் வந்து நின்றதும் "என்ன மேரி, பேத்தி இல்லாம தனியா  வந்து நிக்குறீங்க!" என்றேன்.  அவள் பேதியை கூட்டிக்கொண்டுதான் எப்போதும் வருவாள்.  "கூட்டிடுவரலம்மா" என்றவளிடம், மேற்கொண்டு பேசமுடியாமல் என் மீன்குழம்பு வேலைகள் தடுத்தது. சமையலை முடித்துவிட்டு அவளுக்கு தோசை ஊற்றி மீன்குழம்புடன் சாப்பிட தந்துவிட்டு அருகில் அமர்ந்தேன். எப்போதும் போல தொணதொணவென்று அவள் பேசாதது  வேற ஆச்சர்யமாய் இருந்தது.

"என்னாச்சு மேரி" என்ற என்னைப் பார்த்து கண்கலங்க சிரித்தாள்.  " எப்ப பாத்தாலும் வேல வேலன்னு நானும் இத்தனை  வருஷமா ஓடிட்டேன். இப்ப முடியலம்மா.  பிள்ளைங்க எல்லாம் நீ சும்மாதானே இருக்க, என் பிள்ளைய பாத்துக்கன்னு   பிள்ளைங்கள   என்கிட்ட விட்டுட்டு அவங்க வேலைக்குப்போறாங்க. எரிச்சலா வருதும்மா" என்றாள்.
 
"ஏன் மேரி, உன் மகள் ஒருத்தி தானே புருஷன் கூட இல்ல, மத்த ரெண்டுபேர் புருஷனும் தான் சம்பாதிக்கிறாகளே  "

"ஆமாம்மா, தினக்கூலி நூறு ரூபா கிடைக்குது. காசு மேல ஆசம்மா, அதான்  காலைல வீட்டு வேலைய முடிச்சுட்டு பிள்ளைங்கள என்கிட்ட விட்டுட்டு வேலைக்கு ஓடறாளுங்க. எல்லாம் நண்டும் சிண்டுமா   இருக்கு. செத்த நேரம் அசந்து படுக்க முடியுதா?  அதுங்க பின்னாடியே ஓடவேண்டி இருக்கு.  இன்னைக்கு எல்லாம் வீட்லதான் இருக்குங்க, ஒன்னும் புடிக்கல எனக்கு. யார்கிட்டயும் ஒன்னும் சொல்லாம இங்க கிளம்பி வந்துட்டேன், சின்ன பையனுக்கு ஒரு கல்யாணத்த  பண்ணி வச்சிட்டேன்னா    , பேசாம உங்க வீட்லயே வந்து இருந்துடுவேம்மா"

சொல்லி முடிக்கும்போதே கண்ணீர் திரையிட்டது மேரிக்கு. பேச்சிழந்து உட்கார்ந்து   இருந்தேன் நான்.  கொஞ்ச நேரத்தில் அவளாகவே ஆசுவாசமாகிக்கொண்டாள் .  கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் சின்னவனின்  துணிகளைப்பர்த்து    "சின்னபுள்ள சட்டை எதாச்சும் இருந்த தாங்கம்மா, பேத்திக்கு சரியாய் இருக்கும்"  என்றாள்.  மேரிக்கு இது ஒரு பழக்கம். பார்ப்பதை எல்லாம், அவளுக்கு தேவை என்றால் யோசிக்காமல் கேட்பாள். நான் தராவிட்டாலும் கவலை இல்லை அவளுக்கு, தான் கேட்க நினைத்ததை கேட்டுவிடுவாள்.
"தரேன் மேரி"  என்றபடி  சின்னவனின் துணிகள் சிலதை கொண்டுவந்து கொடுத்தேன். " நான் கிளம்புறேம்மா, அடுத்த வாரம் என் பேத்தியை  கூட்டிகிட்டு வர்றேன்" என்றபடி கிளம்பினாள்.  "ஏன் மேரி, இந்த வெயில் அடிக்குது, இருங்க சாயங்காலம் போகலாம்" என்றேன்.  அவள் கேட்கவில்லை. " என்ன பண்ணப்போறேன் இங்க இருந்து. இந்நேரம் அங்க என்ன தேடிகிட்டு இருப்பாங்க, கிளம்புறேன்" சிரித்துக்கொண்டே சொன்னாள். 
கொஞ்ச நேரம் அவர்களை தேட வைத்துவிட்டதிலும், என்னிடம் மனதில் இருப்பதைக் கொட்டியதிலும் ஒரு திருப்தி வந்து இருக்க வேண்டும் அவளுக்கு.  "சரி மேரி, இந்தாங்க பஸ்சுக்கு" என்று நான் தந்த பணத்தை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.  அவள் கிளம்பிப் போவதையே பார்த்தபடி நின்றேன்.

ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தை அனுபவித்து வாரம் முழுக்க பரபரத்து ஓடிக்கொண்டிருக்கும் நான் கூட காசு ஆசையில்தான் ஓடுகிறேனோ என்று தோன்றியது.  இன்னும் பத்து பதினைந்து வருடம் கழித்து நானும் கூட மேரி மாதிரி தான் புலம்புவேனோ? இல்லை, இப்படி யாரிடமாவது போய் புலம்பினால்,  நம் குடும்பத்தின், பிள்ளைகளின் கௌரவம் என்னாகும் என்று நினைத்து மருகிக்கொண்டு இருப்பேன். நானும் மேரியும் ஒன்றுதான்   என்றாலும் நானும் மேரியும் வேறுவேறு தான் என்று தோன்றியது. அவள் துணிவும், வெளிப்படையான பேச்சும் எனக்கு சாத்தியம் இல்லை என்ற எண்ணம் வந்தது.


பெண்கள் அவர்கள் வாழும் சூழலுக்கு தகுந்த மாதிரி தங்களைச் சுற்றி வட்டம் போட்டுக்கொள்கிறோம் - சின்னதாக, பெரியதாக . அதற்குள்ளேயே சுழல்கிறோம்.  கொஞ்சம் பெரிய வட்டமாக இருந்து நாலடி நடக்க முடிந்தால் 'சுதந்திரக் காற்று' என்று பெருமை பேசிக்கொள்கிறோம்,  வட்டத்துக்குள்ளே சிறை என்ற உண்மையை அழகாக மறந்துவிட்டு. ! இப்படி யோசிக்க ஆரம்பித்ததில், அந்த ஞாயிற்றுக்கிழமை மதிய பொழுது தூங்காமலேயே முடிந்து போனது.
---------------


நன்றி: சௌந்தரசுகன்

1 comment:

  1. சரியான புருஷன் வாய்க்காத எங்கள் குடியிருப்பு வேலை செய்யும் பெண்மணி கணவன் இறந்ததும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து.. அவர் கதை பெருசு. ஆனால் பிரமிப்பானது அவர் வாழ்க்கையை ஜெயிக்க செய்து வரும் போராட்டம். உங்கள் பதிவு எனக்கு அவரை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete