Tuesday, May 31, 2011

 
 
 
இன்று அமிர்தம் சூர்யாவின் வலைப்பூவைப் பார்த்தேன். அதில் என் மனம் கவர்ந்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு......
 
 
 
 
 
 
 
 


(வார்த்தையாயிருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்மை,
நீங்கள் வாழ்க்கையில் பிரிண்ட்எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆல்பத்தை...)
படம்: ஒன்று
ஏய் கருப்பி!
கருடன் சுத்தறான் உஷாராயிரு!
புள்ளைங்கள அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போடி
பொரித்த குஞ்சுகளோடு குப்பையைக்
கிளரும் கருத்த கோழியோடு
பேசிக் கொண்டிருக்கிறாள் ஆயி.
படம்: இரண்டு
பாஞ்சாலி வேஷம் கட்டும்
கூத்துக்காரரின் காய்ச்சலுக்கு
கஷாயமும் கஞ்சியும்
கொடுத்தனுப்பியதைக் கண்டித்தபோது,
கலை செத்த ஊர்ல
காலந்தள்ள முடியாதய்யா
வெறும் வயிறோடு நடிச்சா
பாஞ்சாலி வயிறு எரியுமில்ல” -
புத்தியில் சாந்தம் பூசினாள் ஆச்சி.
படம்: மூன்று
கோவில் தேர் பிரச்னையால்
கூடிய பஞ்சாயத்தில்
சொந்தமாய் தேர் செதுக்கும்
யோசனை, விதையாய் வீழ்ந்தபோது...
ஏண்டா! உன் வயல்ல மழை பெய்ய
சொந்தமா மேகத்தை உனக்குன்னு செய்வீயா
பெய்யும் மழையை பொதுவாக்கப் பாருடா
- முளைத்த நெருப்பின் துளிரை
பிடுங்கிப் போட்டாள் ஆயா.
படம்: நான்கு
துயர நீரில் மூழ்கியிருக்கும் தன் கண்களோடு
காத்தவராயன் மனைவிக்கு
சுகப்பிரசவம் முடித்து,
உரமாய் ஆசியை மனத்தில் தூவிவிட்டு...
மரித்த பேரனுக்காய் மார்பில் அடித்து அழ,
நடையை ஓட்டமாய் மாற்றுகிறாள் பாட்டி.
படம்:ஐந்து
உருமாறுற தேவதைங்க
இப்ப ஏன் இல்ல?”
மடிமெத்தையில் தலை சாய்த்து
கதை கேட்கும் பேத்திக்கு
இல்லேன்னு யார் சொன்னா
நீ... உங்கம்மா... நானு கூடத்தான்
தேவதை. மனுஷ ரூபத்தில் இருக்கோமில்லே?”
- அரக்க சாயலை அடியோடு
தூர்வாறுவாள் அப்பத்தா.
கடவுளின் ரேகையை
முகங்களில் சுருக்கங்களாய்
பதியமிட்டிருக்கும்
பழுத்த பெண்மையை -
ஆச்சி, ஆயி, ஆயா, பாட்டி,
அப்பத்தா... எப்படி அழைத்தாலும் சரி.
பூமியைச் சுழற்றி விடும்
சூட்சுமத்தை அவர்களிடம்
ஒரு கணமேனும்,
உணர்ந்ததுண்டா - ஆம்எனில்
ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கும்
நீ பாக்யவான்.
குறிப்பு: இப்போது உனது
குல தெய்வங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அமிர்தம் சூர்யா
(c) suryakalki@gmail.com

4 comments:

  1. க‌ருத்த‌ கோழிக் குஞ்சுக‌ள் மீதும் க‌ரிச‌ன‌ம் காட்டும் ஆயியும், க‌லை உயிர்த்திருக்க த‌ன்னாலான‌ க‌ஷாய‌மும் க‌ஞ்சியும் த‌ந்து புத்தியில் சாந்த‌ம் பூசிய‌ ஆச்சியும்,ஊர் பிள‌க்கும் பிர‌ச்சினைக்கு முளைக்கும் நெருப்பின் துளிர் பிடுங்கிப் போட்ட‌ ஆயாவும், ம‌ரித்த‌ பேர‌னுக்கான‌ துக்க‌த்தை ம‌ன‌சில் அட‌க்கி முளைத்த‌ சிசுவை சுக‌ப்பிர‌ச‌வ‌மாக்கி ஆசி தூவிய‌ பாட்டியும், அர‌க்க‌ சாய‌லை அடியோடு தூர்வாரிய‌ அப்ப‌த்தாவும் ம‌ன‌செங்கும் வியாபித்திருக்க‌, பூமியை சுழற்றும் அவ‌ர்க‌ள‌து சூட்சும‌த்தை அப்ப‌டியே ஆமோதிக்கிறேன் நான். வாழ்த்துக‌ளும் பாராட்டுக‌ளும்... அமிர்த‌ம் சூர்யாவின் கைநேர்த்திக்கும் சிந்த‌னை வீச்சுக்கும்!! எடுத்த‌ளித்த‌மைக்கு ந‌ன்றி ப்ரியா!!

    ReplyDelete
  2. நெகிழ்வான கவிதை சூட்சுமமாய் உணர்த்தி செல்லும் பகிர்வு நன்றி . கிருஷ்ணபிரியாவுக்கும்.

    ReplyDelete
  3. ரசிப்பது ஒரு கலை.ரசித்த கலையை அடுத்தவர்களுக்கு கடத்துவதும் ஒரு கலை தான் என்பதை கிருஷ்ணப்ரியாவிடம் தான் கற்றுக்கொண்டேன்.ஒத்த மன இசைவுக்கு நம்மை ஒன்றிணைத்த கவிதைவெளிக்கு தொடர்ந்து கவிதையால் காரியமாற்றுவோம்.நன்றி

    ReplyDelete