Monday, September 17, 2012

வேணும் வெள்ளை மாத்திரைகள்....

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் திரு இரா. எட்வின் அவர்கள் இந்தியாவின் மருத்துவர்கள் பற்றியும், மருந்துகள் விலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அரசு மருத்துவமனைகள் குறித்தும் ஒன்றிரண்டு வரிகள் அதில் வந்திருந்தன. பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம்  சிந்திக்கிறோம். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூட, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தனியார் மயமாக்கப் படுவதை எதிர்த்துத் தான் பேசியிருந்தார் எட்வின்.  அவர் வசிக்கும் பெர்ம்பலூரில் உள்ள  அரசு மருத்துவமனைப் பற்றியோ, பணி புரியும் இடத்திலிருக்கும் அரசு மருத்துவமனைப் பற்றியோ சொல்ல ஒன்றுமில்லை அவருக்கு.  சரி அவர் அரசியல் அவருக்கு.


இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது என்று நாம் யோசிக்கிறோமா? அரசு மருத்துவமனைகளில் நடப்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது, அரசை விமர்சிப்பதற்காக.... என்றால் தனியார் மருத்துவமனைகளில் தவறுகள் நடப்பதில்லையா? ஏன் அது பற்றி எதுவும் வெளியில் வருவதில்லை? அரசு மருத்துவமனையில் நோயாளியை கவனிக்க பத்து நிமிடம் தாமதமானாலே ஆத்திரப்படும் நாம் தான் தனியார் மருத்துவமனைகளில் பணத்தைக் கட்டி விட்டு மணிக்கணக்காய் காத்திருக்கிறோம். ஒரு வார்த்தை புலம்பலில்லை. இந்த மருத்துவர் மிகவும் சிறப்பாய் பார்க்கிறார், அதான் கூட்டம் தள்ளுகிறது என்று நாமே சமாதானம் செய்து கொள்கிறோம். அரசு மருத்துவமனைகளில் கண்ட இடங்களில் துப்பி, தின்றதை கண்ட இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள் காசு கொடுத்து வைத்தியம் பார்க்கும் இடங்களில் எத்தனை ஒழுங்காய் நடந்து கொள்கிறார்கள்? மக்களின் மனப் பாங்கு மாறினால் தானே அரசு மருத்துவமனைகளிலும் மாற்றம் வரும்?

கையிலே காசே இல்லாத, கூலி வேலை செய்து அன்றாடம் பிழைக்கும் ஒருவர், தனக்கு விடாத சளித் தொந்திரவு வந்ததும், அதற்கென இருக்கும் தனியார் மருத்துவமனைக்குப் போய் அங்கங்கே கடன் வாங்கிய காசு தீரும் வரை வைத்தியம் பார்த்துவிட்டு காசு இல்லாமல் போனதும் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார். ஆறு மாதம் தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் தான் வியாதி குணமாகும் என்று சொல்லும் அரசு மருத்துவரிடம்  நம்பிக்கை வருவதில்லை அவருக்கு. கிருமியை அழிக்க ஒன்று, கிருமி இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க ஒன்று என்று மாத்திரைகளின் செயல் பற்றி விளக்கம் சொல்லும் மருத்துவ ஊழியர் வேலையற்றவராகத் தெரிகிறார். என்ன செய்வது இதற்கு...? இந்த இரண்டு சம்பவங்களைப் பாருங்கள்..


1. விளையாடும் போது கீழே விழுந்து நெற்றியில் சின்னதாகக் காயம் பட்ட ஒரு மாணவனுடன் வருகிறார் ஒரு ஆசிரியர். மாணவனுக்கு இரண்டு செப்ட்ரான் மாத்திரைகளும், இரண்டு பாரசிட்டமால் மாத்திரைகளும் (எட்வின் ச்சும்மா மாத்திரை பேரெல்லாம் எழுதி வெளுத்து வாங்கும் போது நாம எழுதாம இருக்கலாமா?) தரப்பட்டு, காயத்துக்கும் சிகிச்சை செய்யப் படுகிறது. மாத்திரைகளைத் திருப்பி திருப்பி உற்றுப் பார்க்கிறார் ஆசிரியர். என்ன பார்க்கிறீர்கள் என்கிறார் மருத்துவர். ‘ம்ம், அதென்ன பாரசிட்டமால் தருகிறீர்கள்? வலி நிவாரணி (பெயின் ரிலீவர்) தர மாட்டீர்களா?’
மருத்துவர் சொல்கிறார், ‘இதுவும் வலி நிவாரணி தான். சின்ன பையன் தானே?  காயமும் சின்னது. இது போதும்’ உடனே அந்த ஆசிரியர் சொல்கிறார். “ க்கும்..”

 2. பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் ஒரு மாணவன் வயிற்று வலியால் அவதிப் படுகிறான். நண்பர்கள் துணையுடன் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு வருகிறான்.வயிற்றைப் பிசையும் வலி அவன் முகத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அவன் வந்த நேரம் அங்கே மருத்துவர் இல்லை. பணியிலிருக்கும் செவிலி அவனுக்கு ஒரு  ஜெலுசில் மாத்திரையும், வைட்டமின் மாத்திரையும் தருகிறார். அதைப் பார்த்த இன்னொருவர் கேட்கிறார். அவன் வயிற்று வலிக்கு ஒரு ராணிடிடின் ஊசி போடலாமே என்று. அரை குறை அறிவுடன் சொன்னாலும் நீங்கள் சொல்வது சரி தான் என்று ஒத்துக் கொள்ளும் அந்த செவிலி சொல்கிறார். மருத்துவர் இல்லை, மாணவன் விடுதியில் தங்கியிருப்பதாகச் சொல்கிறான். விடுதிக் காப்பாளரும் கூட வரவில்லை. எப்படி ஊசிப் போடுவது.? ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் என் வேலைக்கு ஆபத்தாகி விடுமே... அதனால் தான் இப்படி செய்கிறேன். (பள்ளியிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டராவது நடந்து தான் அவன் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும்.) கூட இருந்தவர் சொல்கிறார், நான் அவனுக்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறேன், தயவு செய்து அவனுக்கு ஒரு ஊசிப் போடுங்கள்..... கொஞ்சம் தயங்கி ஒரு ஊசி போடுகிறார் செவிலி. சற்று நேரத்தில் வலி குறைந்து தெளிவு வருகிறது அவன் முகத்தில்...

இந்த இரண்டு சம்பவங்களும் என்னவெல்லாம் சொல்கிறது?


அன்னியன் சினிமா பாணியில் சொல்வதானால்,

யாரெல்லாம் இதில் குற்றவாளிகள்?

பாரசிட்டமால் மாத்திரை என்றால் அது சுரத்துக்கு மட்டும் தான் என்று ஏற்றப்பட்டிருக்கும் நம் அறிவு--  குற்றவாளியா?
அரசு மருத்துவமனை என்றால் எல்லாத்துக்கும் ஒரே மாத்திரை தான் தருவார்கள் என்ற பொதுப் புத்தி தான்-- குற்றவாளியா?
படித்தவர்களும் இந்த பொதுப் புத்திக்கு தப்பாமல் இருக்கும் சூழல்--  குற்றவாளியா?
எல்லா நேரமும் மருத்துவர்களை பணியிலிருக்கச் செய்யாத ,
மருத்துவர் இல்லாத நேரத்தில் அவசர காலத்தில் இயங்கும் வழி முறைகளைத் தெளிவாக வரையறுக்காத அரசு-- குற்றவாளியா?
பதவிப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் நோயாளியின் வலி தீர்க்கத் துணியாத செவிலி-- குற்றவாளியா?
அரசுப் பணி போய்விட்டாலும், நியாமாக வாழ்ந்து விட முடியும் என்ற உணர்வை விதைக்கத் தவறுகிற படிப்பு-- குற்றவாளியா?
வழியில்லாவிடிலும் எப்படியாவது படித்து விட வேண்டும் என்று விடுதியில் தங்கிப் படிக்கும் அந்த மாணவன்-- குற்றவாளியா?

என்ன தான் இதற்குத் தீர்வு?

இது எல்லாவற்றிற்கும் காணப்படும் தீர்விலும் தான் அரசு மருத்துவமனைகளின் தரம் அடங்கியிருக்கிறது.?

எல்லா அரசு மருத்துவமனைகளிலும்  மனசாட்சியுடன் உழைக்கும் ஊழியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் அவர்களை சட்டதிட்டங்கள் என்னும் மாயக் கயிறுகள் கட்டி வைத்திருக்கின்றன. மேலே குறிப்பிடப் பட்ட செவிலி மாதிரி. பசியோடு வந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உணவு வாங்கித் தருகின்ற மருத்துவர்கள், சாப்பாட்டுக்கு வழியில்லை என்று சொல்லும் காச நோயாளிக்கு வார மருந்து வாங்க வரும் போதெல்லாம் செலவுக்கு காசும் சேர்த்துத் தரும் ஊழியர்கள், எந்த காசும் வாங்கிக் கொள்ளாமல் வயதானவர்களுக்கு சான்றிதழ் தருகின்ற மருத்துவர்கள், போன குழந்தைக்கே எத்தனை கஷ்டப் பட்டே, மறுபடி கர்ப்பமாயிட்டா கஷ்டம்டி, நான் சொல்றதக் கேளு என்று அறிவுறுத்தி காப்பர் டி போட்டு விடும் செவிலிகள், இந்தாப் பாருப்பா, உனக்கு சக்கரை வேற இருக்கு, சரியா புண்ண கவனிக்கலண்ணா கால் போயிடும் ஜாக்கிரதை என்று எடுத்துச் சொன்ன படி காயத்தை சிரத்தையாக சுத்தம் செய்து கட்டி விடும் ஊழியர் என்று அரசு மருத்துவமனைகளிலும் நல்ல இதயங்கள் இருக்கத் தான் செய்கிறது. என்ன செய்வது? நல்லதை மேம்போக்காகப் பார்த்துவிட்டு, அல்லாததை பூதக் கண்ணாடி வைத்து பார்ப்பது தானே மனித இயல்பு.....
பாராட்டித் தான் பாருங்களேன் அரசு மருத்துவமனைகளை....

 நீங்க போனதுண்டா இங்கே என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் நிலாமகள். அதற்கு பின்னூட்டம் இட்டிருக்கும் பெரும்பாலானவர்களும் சிகிச்சைக்குக் செல்லும் மக்கள் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறார்களே தவிர, இது போன்ற ஒரு சூழலில் பணி புரியும் ஊழியர்களைப் பற்றி நினைக்கவேயில்லை. அவர்களும் இந்த அரசின் மக்கள் தானே.? எந்த வசதிகளும் இல்லாத, இரவுகளில்  இரவுக் காவலாளி என்றப் பெயரில் கூட ஆண்களின் துணை ஏதும் இன்றி அழுது வடியும் ஒளிவிளக்கோடு எத்தனை மருத்துவமனைகளில் பெண்கள் செவிலிகளாகவும், ஆயாக்களாகவும், மருத்துவர்களாகவும் பணி புரிகிறார்கள் என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? குடிபோதையில் வைத்தியம் செய்துகொள்ள என்று வருகின்ற அசடர்களையும் அவர்கள் சமாளிக்கத் தானே செய்கிறார்கள்.

ஆனால் இது எதுவும் யார் பார்வைக்கும் வருவதில்லை.  லஞ்சம் வாங்கும் ஊழியர்களும், நோயாளிகளைத் திட்டும் செவிலிகளும், மருத்துவர்களும் பேசப் படும் அளவுக்கு நல்லவைகள் பேசப்படுவதில்லை. பேசப்படாததினால் நல்லவர்கள் மாறிவிடுவதும் இல்லை. அவர்களைப் போன்றவர்களால் அரசு மருத்துவமனைகள் இன்னும் இன்னும் சிறப்பாய் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும், வேணாண்ட்டா வெள்ளை மாத்திரை என்று எத்தனைப் பேர் வந்து பாடினாலும் வெள்ளை மாத்திரைகள் நோய்களைத் தீர்த்துக் கொண்டு தான் இருக்கும்......

20 comments:

 1. நல்ல, அருமையான சிந்தனை முத்துக்கள் கிருஷ்ணப்ரியா!
  இருந்தாலும் சில வரிகள்..
  அரசு மருத்துவ மனைக்கும் தனியார் மருத்துவ மனைக்கும் இப்போதெல்லாம் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை, பணத்தைத் தவிர! கருணையின்மை என்பது பொதுவுடமையாகத்தான் இருக்கிறது!

  ReplyDelete
 2. அட, இத்தனை சீக்கிரம் நீங்கள் இதைப் படித்து பதிவிட்டிருப்பது என்னை மகிழ வைக்கிறது..

  கருணையின்மை கவனிக்கப் படும் அளவுக்கு கருணை கவனிப்புக்கு ஆளாகவில்லை என்பது தான் என் ஆதங்கம்.

  ReplyDelete
 3. ப‌திவு என்னை எழுந்து நின்று கைத‌ட்ட‌ச் செய்கிறது ப்ரியா...(க‌ன‌வில் கேட்கிற‌தா உங்க‌ளுக்கு அத‌ன் ச‌ப்த‌ம்?!)

  ச‌பாஷ்! அற்புத‌மான‌ தெளிவான‌ க‌ருத்துக்க‌ள். உற்ற‌ ந‌ண்ப‌ரெனினும் க‌ருத்து வேறுபாடெனில் ம‌ன‌ம் நோக‌டிக்காம‌ல் சொல்லும் ஆணித்த‌ர‌மான‌ அனுப‌வ‌ மொழிக‌ள்... யார் குற்ற‌வாளி என‌ நீங்க‌ள் போட்டிருக்கும் ப‌ட்டிய‌ல் சிலிர்க்க‌ச் செய்கிற‌து.

  'நீங்க‌ போன‌துண்டா இங்க‌?' க‌ட்டுரையும் முற்றிலுமான‌ அனுப‌வ‌ப் ப‌கிர்வே. பொதுப்பார்வையில் தொட‌ரும் அது முடிப்பில் அவ்வூழிய‌ர்க‌ளின் மேல் இர‌க்க‌மேற்ப‌டுத்தும் ப‌டியே முடிந்திருக்கும்.

  உங்க‌ செய‌ல்வேக‌ம் அதிக‌ரித்திருப்ப‌து அள‌வ‌ற்ற‌ ம‌கிழ்வைத் த‌ருகிற‌தென‌க்கு. 'கொலைவாளினை எட‌டா மிகு கொடியோர் செய‌ல் அற‌வே' என்று பார‌தி எழுச்சியூட்டிய‌து க‌ங்கு க‌னிந்த‌ப‌டி.

  ReplyDelete
 4. தொட‌க்க‌ப்ப‌த்தியின் முடிவில் சாட்டை சொடுக்க‌லின் 'விஷ்க்' காற்றில்.

  ச‌ம்ப‌வ‌ம் ஒன்றின் இறுதி வார்த்தை 'ம்க்கும்' சொல்லிச் செல்லும் செய்திக‌ள் அநேக‌ம். ப‌ளிச்சிடும் உங்க‌ எழுத்தின் வ‌லிமை!

  இர‌ண்டாவ‌து ச‌ம்ப‌வ‌த்தில் அந்த‌ 'அதிக‌ப்பிர‌ச‌ங்கி' போல் தோன்றும் பொதுஜ‌ன‌ம் பொறுப்பேற்றுக் கொண்டு ஊசி போட‌ வைத்த‌து பாராட்ட‌த் த‌க்க‌தே..(அந்நிலையில் செவிலியின் சூழ‌லும் குறை சொல்லும்ப‌டியில்லை. அவ‌ங்க‌ க‌வ‌லை அவ‌ங்க‌ளுக்கு.)

  ஒரு அதிகாலைப் பேருந்துப் ப‌ய‌ண‌த்தில் விடியும் நேர‌ம் ஓட்டுந‌ருக்குக் கேட்கும்ப‌டி உர‌க்க‌ சொன்னார் ஒரு ப‌ய‌ணி: "எல்லா லைட்டையும் நிறுத்த‌லாம்ப்பா" ந‌ம‌க்கென்ன‌ என்றில்லாத‌ அவ‌ர‌து சுபாவ‌ம் ந‌ல்ல‌து தானே. பொதுச்சொத்தென்றால் அனைவ‌ருக்கும் அக்க‌றை இருக்க‌த்தான் வேண்டும்.

  //எல்லா அரசு மருத்துவமனைகளிலும் மனசாட்சியுடன் உழைக்கும் ஊழியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் அவர்களை சட்டதிட்டங்கள் என்னும் மாயக் கயிறுகள் கட்டி வைத்திருக்கின்றன. மேலே குறிப்பிடப் பட்ட செவிலி மாதிரி. //

  விவ‌ரித்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அனைத்தும் வாசிப்ப‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ப்பாங்கை அசைத்துப் பார்க்கும்.

  //நல்லதை மேம்போக்காகப் பார்த்துவிட்டு, அல்லாததை பூதக் கண்ணாடி வைத்து பார்ப்பது தானே மனித இயல்பு//

  இந்த‌ப் போக்கில் தான் என‌து க‌ட்டுரையும் அமைந்து விட்ட‌தோ... ம‌ன்னிக்க‌வும். த‌லைவ‌லியும் ஜுர‌மும் த‌ன‌க்கு வ‌ந்தால் தானே தெரிகிற‌து!

  அவ‌ர்க‌ளின் பிர‌திநிதியாய் வாதாட‌வேனும் ஒரு ப‌டைப்பாளி, ச‌க‌ ஊழிய‌ர்க‌ளின் நிலையை வெளிச்ச‌மிட‌ முய‌ன்றிருப்ப‌து ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்.

  ReplyDelete
 5. Excellant....people won't go to the other man's feelings always.
  When we are able to see the 'other side of the coin'
  our dissatisfaction over Govt.Hospitals will be disappeared.

  ReplyDelete
 6. கருணையின்மைக்கு உதாரணங்கள் அளவற்று கிடைக்கிற மாதிரி, கருணைக்கும் பரிவிற்கும் அன்புக்கும் அத்தனை சீக்கிரம் உதாரணங்கள் கிடைப்பதில்லை கிருஷ்ணப்ரியா! இது இன்றைய வாழ்வின் நிதர்சனம்!!

  எல்லா மனிதர்களும் ரத்தமும் நிணமும் சதையும் உணர்வுகளும் கொண்டவர்கள் தான்! அதுவும் மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சேவை ம‌னப்பான்மையும் கருணையும் பரிவும் சற்று அதிகமாகத்தான் இருக்க வேண்டும். வலியால் துடிக்கும் பிணியாளர்கள் தன் நோயைத் தீர்க்கப்போகும் கடவுளாய்த் தானே அங்குள்ளவர்களை நினைத்து வருகிறார்கள்? அவர்களும் மனிதர்கள் தான் என்பதை நோயாளிகளால் ஜீரணிக்க முடியாததால்தான் குறைகளை அவர்கள் உடனேயே வெளிப்படுத்துகிறார்கள்!!

  ஒரு அரசு ம‌ருத்துவ மனையில் பிரசவத்துக்கு வரும் பெண், வலியால் துடிதுடிக்கும்போது எந்த மாதிரியெல்லாம் கூசும் வார்த்தைகளை எதிர்கொள்ளுகிறாள் என்பதது உங்களுக்குத் தெரியாதா?

  [கிருஷ்னப்ரியா! உங்கள் fONT நிற‌த்தை சற்று DARK-ஆக மாற்றினால் படிக்க சிரமமாக இல்லாதிருக்கும்!!]

  ReplyDelete
 7. நாம் அணுகும் முறை பொறுத்து(ம்) மாறுபடும்... (அது எந்த மருத்துவமனையானாலும் சரி...)

  ReplyDelete
 8. நன்றி நிலா.... உங்கள் பாராட்டுக்களுக்கு. எட்வினின் அந்த கட்டுரை வாசித்ததில் இருந்து மனசு ரொம்பவே அரித்துக் கொண்டேயிருந்தது. அந்த இரண்டு சம்பவங்களும் எழுத வைத்து விட்டது.
  உங்கள் கட்டுரையில் நீங்கள் எழுதியிருப்பதை நான் தவறாகச் சொல்லவில்லை. அதன் பின்னூட்டங்களை ஒன்று விடாமல் வாசித்தேன். யாராவது அந்த இருண்ட மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து கவலையாவது தெரிவித்திருப்பார்களா என்று.. சுந்தர்ஜி வருத்தப் பட்டிருந்தார் என்று நினைவு. அந்த ஆதங்கத்தை தான் எழுதியிருந்தேன். மற்றபடி, நோயுடன் வருபவர்கள் ஆதுரமான வார்த்தைகளையும் அனுசரனையான கவனிப்பையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நானும் மறுக்கவில்லை. அது நோயாளியின் உரிமையும் கூட. அது சில இடங்களில் கிடைக்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனால் எங்குமே கிடைக்கவே கிடைக்காது என்று அநியாயமாக பெரும்பாலானவர்கள் பேசும் போது மனசு வலிக்கிறதே நிலா.....
  அதற்காக பாரதியை எல்லாம் எனக்காக கூட்டி வந்து விட்டீர்களே...... கொஞ்சம் ஓவர் தான். ஆனாலும் உங்கள் அன்பில் நெகிழ்கிறேன்....

  ReplyDelete
 9. மனோ மேடம், நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அது எப்படி மருத்துவமனைக்கு பணிக்கு வந்ததும் மட்டும் கருணையும் பரிவும் அதிகரிக்கும் மேடம்.? ‘நீ நல்லாப் படிச்சு பெரிய்ய டாக்டரா வந்து நிறைய சம்பாதிக்கனும் ‘ என்று சொல்லித் தானே குழந்தைகள் வளர்க்கப் படுகிறார்கள். ‘ பெரிய டாக்டராகி எல்லாரையும் அன்பா, அக்கறையாப் பாத்துக்கனும்’ என்று சொல்லித் தரப் படுவதில்லையே மேடம். அன்பும் கருணையும், வேலை சார்ந்ததோ, படிப்பு சார்ந்ததோ இல்லை. அது சூழல் சார்ந்து, வளர்தல் சார்ந்து தானே வரக் கூடும்?

  அதற்காக அப்படி பேசுபவர்களை நான் ஆதரிக்கவில்லை. அப்படிப் பேசுபவர்களை முடிந்த மட்டும் எதிர்க்கவும் செய்கிறேன்.
  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘ பிரசவ கால கவனிப்பு’ குறித்து தனி கட்டுரையே எழுத வேண்டும் மேடம்... நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குற்றச்சாட்டு உண்மை தான். அந்த குற்றச்சாட்டு தவிர மருத்துவமனையில் நடக்கும் பிரசவங்கள் குறித்து இன்னும் நிறைய இருக்கிறது மேடம். எழுதுவேன்.....

  நீங்கள் சொன்ன படி, font வண்ணம் மாற்றி விடுகிறேன்.

  ReplyDelete
 10. @திண்டுக்கல் தனபாலன்,
  சரி தான் சார். அணுகும் முறை பொறுத்து எல்லாமே இருக்கும். அது மருத்துவமனை ஆனாலும் சரி, இதயத்தின் அன்பு மனை ஆனாலும் சரி....
  வந்து வாசித்து பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 11. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

  ரொம்ப நன்றி அய்யா....

  குற்றம் குறைகள் சொல்வது ரொம்ப எளிது தான்.

  எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் வள்ளுவர்,,,

  ‘ஏதிலார் குற்றம் போல் தன்குற்றங் காண்கிற்பின்

  தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’

  என் கட்டுரையை சரியான கோணத்தில் புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் அய்யா...

  ReplyDelete
 12. அரசு மருதுவமைனகளில் பணிபுரியும் பலர் சூழ்நிலைக் கைதிகளாய் இருக்கின்றனர்.
  இல்லோர் எளியோர் எல்லோருக்கும் பொதுவான அரசு மருத்துவமைனைகளை நாம் நமதென்று என்னும் மனப்பாங்கு எல்லோருக்கும் வந்து விட்டால் , நிச்சயம் தரம் உயரும்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. ஒரு நண்பரை இங்கு நேற்று சந்தித்த போது யதேச்சையா இதே விஷயம் மையக்கருத்தாய் வந்தது! அவர் சொன்னார்,
  “ என் மருமகன் பற்றி என் மனைவி மிகவும் கவலைப்படுகிறாள். சம்பாதிக்கத் தெரியவில்லை என்கிறாள். இந்தக்காலத்தில் ஒவ்வொரு டாக்டரும் எத்தனை ஆயிரங்கள் ஒரு மாதத்தில் சம்பாதிக்கிறார்கள்! என் மருமகனோ, தன் நோயாளிகளிடம் மாத்திரைகளும் கொடுத்து வெறும் 20 ரூபாய் தான் வாங்கிக் கொள்கிறார்’” என்று சொன்னார். உடனேயே நான் சொன்னேன் “இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைத்ததற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும்! இந்த மாதிரி சேவை மனப்பான்மை ரொம்பவும் அரிதாகப் போய்விட்ட இந்தக் காலத்தில் இது எத்தனை மன நிறைவைத் தரும் விஷயம்!”
  சில புல்லுருவிகளால்தான் எந்தத் துறைக்கும் அவப்பெயர் கிடைக்கிறது! மற்றபடி நல்லவைகள் என்றைக்குமே பாராட்டுக்கள் பெறாமலிருப்பதில்லை!

  ReplyDelete
 14. @ சிவக்குமாரன்...

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சிவா... அப்படி ஒரு சூழல் எப்போதாவது வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் நாமும் இருக்கிறோம். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி சிவா...

  ReplyDelete
 15. @மனோ சாமிநாதன்...

  அப்படிப் பட்ட மருத்துவர்களை மக்கள் எத்தனை மரியாதையோடும், நன்றியோடும் நினைத்துக் கொண்டிருப்பார்கள் தெரியுமா? வெறும் பணம் மட்டுமல்ல வாழ்வு என்று உணர்ந்திருக்கும் அவர் போன்றோரால் வாழ்கிறது கருணை இன்னும்...

  எப்படி இருக்கிறீர்கள் மேம்? எப்போது மீண்டும் நாம் சந்திக்கிறோம்?

  ReplyDelete
 16. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்ல, அரசு பள்ளிகள், அரசு நிறுவனங்களை நினைக்குந்தோறும், முன்கண்ட பல்வேறு கசப்பான அனுபவங்களின் தயவால், வெள்ளைத்தாளில் வைக்கப்பட்ட கரும்புள்ளியைப் போல் கருணையற்ற மனங்கள்தான் கண்முன் தோன்றுகின்றன. நிலாமகள் எழுதியது போல் நினைத்ததைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எழுதும் தங்கள் எழுத்துக்குப் பாராட்டுகள். இதுவரை நினைத்தும் பார்த்திராத, இன்னொரு பக்கத்தையும் காணச் செய்த தங்களுக்கு நன்றி கிருஷ்ணப்ரியா.

  ReplyDelete
 17. பாரசடமால் என்னும் மருந்து ஜுரத்தையும் தணிக்க வல்லது. அதே சமயம் வலியையும் குறைக்கக்கூடியது.
  சாதாரண வலிகளுக்கு, தலை வலி, தசை வலி, மூட்டு வலி இவற்றிற்கெல்லாம் பாரசடமால் போதுமானது.
  பாரசடமால் எந்த அளவுக்கு பத்திரமானதோ ( safe) அந்த அளவிற்கு மற்ற வலி நிவாரணிகள் இல்லை.
  பொதுவாக எடுத்த எடுப்பிலே வலியின் தன்மையைப் பொருத்தே வலி நிவாரணிகள் தரப்படவேண்டும்'
  டைக்ளோஃபென், ப்ரூஃபன், அஸிக்ளோஃபென், பைராக்ஸிகம் போன்ற வலி நிவாரணிகள் பாரசடமாலை
  விட அதிக நேரம் வலியைக்குறைக்கக்கூடியதாக இருந்தாலும் இவற்றின் பின் விளைவுகள் சற்று அதிகம்.
  வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடக்கூடாது. ப்ருஃபன், டைக்லோஃபென் போன்றவை சாப்பிடும் கட்டாயம்
  இருந்தால், சாப்பிட்ட பின் ரானிடிடைன், அல்லது பான்டோப்ரசொல் போன்ற மருந்துகளுடன் தான்
  உட்கொள்ளவேண்டும்.

  மருந்து விஷயங்களில் அரைகுறை அறிவு ஆபத்தானது. டாக்டர் அதுவும் தனியார் அதிக கன்சல்டேஷன்
  கேட்பதால் நூற்றுக்கு அறுபது சதவீத நோயாளிகள் மருந்துக்கடைகளில் வேலை செய்யும் நபர்களிடம்
  மருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள். நமது நாட்டில் செல்ஃப் மெடிகேஷன் மிகவும் அதிகமாக இருக்கிறது.
  மற்றும் மருந்து கடைகளில் இருக்கும் நபர்களே தாமே ஒரு மருத்துவர் போல தேவையில்லாத‌
  பல மருந்துகளையும் தருகிறார்கள்.

  இதற்குக் காரணம் ஒன்று தனியார் மருத்துவர் மிகவும் அதிக கட்டணம் கேட்கிறார். இப்பொழுது குறைந்த‌
  பட்ச கட்டணம் ரூபாய் முன்னூறு.

  அரசு மருத்துவ மனையில் மணிக்கணக்காக காக்கவேண்டி இருக்கிறது. சுத்தம் சுகாதாரம் ஆபத்தான‌
  சூழ் நிலை. நல்ல டாக்டர்கள் நல்ல செவிலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே அரசு மருத்துவ‌
  மனைகளின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சுத்தப்படுமானால் நல்லது.

  அரசு மருத்துவகங்களில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் தனியாக கன்ஸல்டன்ஸி வைத்து இருப்பது
  தேவை என்றாலும் அவற்றில் பல நல்ல இல்லாத விஷயங்கள் நடக்கின்றன.

  இத்தனைக்கும் மீறி மக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர் என்று சொன்னால் அது அவர்கள்
  முன் வினைப் பயன் தான்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 18. நல்ல பதிவு வெகு நாட்களுக்குப்பின் . உங்களால் தான் இதை எழுதமுடியும் நீங்கள் தான் எழுதவும் வேண்டும். தொடரட்டும் ...........

  ReplyDelete
 19. மகிழ்ச்சி( பெண்கள் சில நேரம் இப்படி வெளிச்சமாகவும் யோசிக்கிறார்கள்.) எட்வின் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. தோழர் கிருஷ்ணபிரியா உங்கள் ஆதங்கமும் நியாயமானதுதான்.ஓரளவேனும் நீங்கள் வெளிப்படுத்திய கனிவும் பொறுப்பும் நிலைப்படுமானால் நிலைமைகள் வெகுவாக மாறும்.மாற்றுவோம். வாழ்த்துக்கள்.

  --

  ReplyDelete
 20. அக்கா, நான் என்ன சொல்லுவது, படித்து முடிப்பதற்குள் கண்ணில் நீர் கோர்த்தது. நீ உணர்ந்த இந்த உண்மைகள் நானும் நேரில் கண்டு உணர்ந்து இருக்கிறேன் என்று உனக்கும் தெரியும். இந்த விஷயத்தில் குற்றவாளிகளாக இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துக்களை கேட்கவாவது செய்வார்களா?

  ReplyDelete