Friday, November 2, 2012

அவன் பெரியவன்.....

விடாமல் மழை கொட்டிக் கொண்டிருந்தது.. இரண்டு நாள் மழையில் சாலைகள் கிட்டத்தட்ட சேதமாகிவிட்டிருந்தது... வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு கையில் குடையும், சேலையைத் தூக்கிப் பிடித்தக் கையில் சாப்பாட்டுக் கூடையும், தோள் பையுமாய் திணறித் திணறி வந்து வீட்டுக்குள் நுழைகையில் பிள்ளைகளுடன் அவரும் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தார்கள்.....

எனனைக் கண்டதும் சின்னவன் வேகமாக ஓடி வந்தான். ‘அம்மா, எங்களுக்கு நாளைக்கும் விடுமுறைன்னு சொல்லிட்டாங்களே... ஹையா... ஜாலி...” , பெரியவன் ஏற்கனவே விடுமுறையில் தான் இருந்தான். கும்மாளமாக இருந்தது அவர்களுக்கு....

சூடாக  ஏதாவது குடிக்க வேண்டும்
போலிருந்தது எனக்கு... அரைகுறையாய் நனைந்து போயிருந்த உடுப்புகளை மாற்றிக் கொண்டு இரவு உடைக்கு மாறியதும் குளிரில் உடம்பு நடுங்க தொடங்கிற்று....
 ஒரு ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தேன். அதற்குள் கணவர் என் கஷ்டம் தெரிந்தவராய் அடுப்பில் தேனீரை வைத்திருந்தார்....

சூடான டீயுடன் நானும் தொலைக்காட்சி முன்னால் வந்து அமர்ந்தேன்.
விடாத மழை அறிவிப்பு, ஊரெங்கும் பரவியிருக்கும் காய்ச்சல் அறிவிப்பு, அதற்கான பாதுகாப்பான நடவடிக்கைகள், அரசு மேற்கொண்டிருக்கும் சுகாதார நடவடிக்கைகள் என்று செய்தி போய்க் கொண்டிருந்தது....

மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேலெல்லாம் வலி, அதோடு இந்த குளிர் வேறு, ஈரத்தில் நடந்து வந்தது எல்லாம் சேர்ந்து கால் வலி என்று அசதியாக இருந்தது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, புயல் கரையைக் கடக்கும் நேரம் அரசு அலுவலகங்கள், த்னியார் அலுவலகங்கள் தங்கள் பணியாளர்களை மதியத்துடன் வீட்டுக்கு அனுப்பலாம் என்ற பல அறிவிப்புகள் தொலைக்காட்சி த் திரையில் ஓடிக் கொண்டிருந்தது.....

 “ என்ன பேசாமல் இருக்கே” என்றார் கணவர்.

:பச், கையெல்லாம் வலிக்குது. இன்னைக்கு மட்டும் 400 பேர். கரண்ட் வேற இல்ல,  அரைகுறை வெளிச்சத்தில, கண்ணும் தெரியாம, ஒன்னும் தெரியாம, அத்தனை பேருக்கும் மாத்திரைக் கொடுத்து கணக்கு எழுதி, ச்சே.....,

 மழையோ வெயிலோ முடியலன்னு ஒரு லீவு எடுக்க முடியுதா? நாளைக்கு இன்னும் பேரூந்து நிலைமை எப்படியோ, எப்பொ கெளம்பி எப்படிப் போயி,... “

“அம்மா, எனக்கு நீங்க காலையில சப்பாத்தி போடத் தேவையில்லம்மா, எங்களுக்குத் தான் லீவாச்சே..” ஆனந்தமாய் சொன்னான் சின்னவன்...

ஆமா, உங்களுக்கெல்லாம் லீவு... எங்களுக்குத் தான் லீவும் இல்ல, ஒன்னும் இல்ல, என்ன பொழப்போ... இந்த சம்பளத்துக்காக ஓட வேண்டியிருக்கு.., அலுத்துக் கொண்டேன் நான்.

“ ஏம்மா, நீங்க இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க..?”, ரொம்ப பெரியமனிதத் தோரணையுடன் கேட்டான் மகன்.

“என்னடா பொறுப்பில்ல? சின்னப் பய நீ. உனக்கு எங்க கஷ்டம் புரியுமா?” என்றேன் எரிச்சலாய்.

“ஏன் புரியாது. இங்கே பாருங்க, எவ்வளவு பேருக்கு காய்ச்சல், சில பேரு செத்துப் போயிட்டாங்கன்னெல்லாம் நியூஸ்ல சொல்றாங்க... பள்ளிக் கூடத்துக்கு லீவு விட்டா, நாலு நாள் கழிச்சுக் கூட படிச்சுக்கலாம். ஆபீசு லீவு விட்டா வேலையை சேர்த்துப் பார்த்துக்கலாம்.

ஆனா, மழைக்காக அரசு மருத்துவமனை எல்லாம் விடுமுறைன்னு சொன்னா என்ன ஆகும்? இந்த காய்ச்சல் வந்தவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தானே நீங்க இருக்கீங்க? நீங்களே இந்த மாதிரி சமயத்தில லீவு கேக்கலாமாம்மா?

 நீங்க வேணா போய் சீக்கிரம் படுத்து தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கு சீக்கிரமா டூட்டிக்குப் போங்க... நாங்க ஏதாவது நூடுல்ஸ் பண்ணி சாப்பிட்டுக்கிறோம். சரியாம்மா..” என்றபடி வந்து என்னை கட்டிக் கொண்டு முத்தம் தந்தான், சின்னவன்......

எனக்கு அவன் முதன் முதலாக ரொம்ப பெரியவனாகத் தெரிந்தான். இருபது வருசம் வேலை பார்த்து விட்ட எனக்கு அவன் ஆசான் மாதிரி உயர்ந்து நின்றான்.....

அவனை அணைத்தப்படி சொன்னேன், “ஆமாண்டா கண்ணு.... நீ சொல்றது தான் சரி...... ஆனா அம்மா உனக்கு முறுகலா தோசை சுட்டுக் குடுத்துட்டுப் போய் படுக்கிறேன். நாளைக்குப் போய் காய்ச்சல் வந்தவங்களை நல்லபடியா கவனிச்சுட்டு வருவேன்..... யு ஆர் வெரி குட் பாய்....”

“தேங்க் யூம்மா.....” சந்தோஷத்தில் சிரித்தான் குழந்தை... நானும் கூட....


15 comments:

 1. நீங்க வேணா போய் சீக்கிரம் படுத்து தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கு சீக்கிரமா டூட்டிக்குப் போங்க... நாங்க ஏதாவது நூடுல்ஸ் பண்ணி சாப்பிட்டுக்கிறோம். சரியாம்மா..” என்றபடி வந்து என்னை கட்டிக் கொண்டு முத்தம் தந்தான்...//

  உங்க‌ளுக்கான‌ வைத்திய‌த்தை விஜ‌ய் அனாய‌ச‌மாக‌ செய்து முடித்து விட்டான்! அடுத்த‌ வ‌ருட‌மென்ன‌ ... இப்ப‌வே அவ‌ன் வ‌ள‌ர்ந்த‌வ‌னாகிட்டான்! குறிப்ப‌றிந்து டீ போட‌ச்சென்ற‌ க‌ண‌வ‌ரும்... குமுற‌லை ச‌ரிசெய்யும் ம‌க‌னும்...! ஆஹா! ந‌ல்ல‌தொரு குடும்ப‌ம்!

  ReplyDelete
 2. நாங்க‌ளே நூடுல்ஸ் செய்து சாப்பிடுகிறோம் என்ற‌ பெருந்த‌ன்மைக்கு முன் முறுக‌ல் தோசை செய்ய‌ முன்வ‌ந்த‌ நீங்க‌ளும் ந‌ல்ல‌ அம்மா தான்!

  ReplyDelete
 3. பொறுப்பு என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்...

  ReplyDelete
 4. ஒருத்தருக்கொருத்தர் தோள் கொடுத்து, ஆறுதலளித்து மனதை நெகிழ வைப்பது தான் இனிய குடும்பத்திற்கு அழகு! இந்த இதத்தில் புற வலிகள் எப்போதுமே மற‌ந்து தான் போகும்!

  நிறைய வேளைகளில் நம் குழந்தைகள் நிச்சயம் நமக்கு ஆசான்கள் தான்!
  அழகாக எழுதியிருக்கிறீர்கள் கிருஷ்ணப்ரியா!

  ReplyDelete
 5. நல்லது பிரியா . அரசு மருத்துவமனை யில் அற்புதமான பணியாளர் இசைவான குடும்பம்.. உங்கள் ஆதங்கம் குறையாமல் இன்னும் வளர்க... அருமையான படைப்புகள் தருக

  ReplyDelete
 6. @இரா. எட்வின்

  வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி எட்வின். நீங்கள் ரொம்ப பிசி தான் என்றாலும், இப்படி ஒன்றிரண்டு பின்னூட்டம் என்னைப் போல சாமானியர்களுக்கும் போடுங்களேன், சந்தோஷப்படுவோம்.....

  ReplyDelete
 7. @பாரதிக்குமார்...

  ஆதங்கம் குறையாமல் இருக்க வாழ்த்தா?

  இந்த ஆதங்கத்துக்கு நடுவிலும் சிறப்பாய் பணி புரியவும், குடும்பத்தை கவனிக்கவும் மெனக்கெடுவதில் ஒரு சுகம் இருக்கு தான் பாரதி...
  உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்....

  ReplyDelete
 8. @நிலாமகள்

  உண்மை தான் நிலா. அவன் பேச்சு பல சமயங்களில் என்னை ஆச்சரியப்பட வைக்கும். சின்னவனா இருக்கே என்று சொன்னால் கோபம் வரும் அவனுக்கு. ரொம்ப குழந்தைமையுடன் பல சமயத்திலும், ரொம்ப பெரிய மனிதனாய் சில சமயத்திலும் விஜய் என்னை திணறத் தான் வைக்கிறான்.....

  ReplyDelete
 9. @திண்டுக்கல் தனபாலன்

  ரொம்ப நன்றி தனபாலன். உங்கள் பாராட்டு இன்னும் பல வருஷம் பொறுப்பாயிருக்க உதவும்....

  ReplyDelete
 10. @மனோ சாமிநாதன்

  ஆமாம் மேடம், ஆசான்களாய் இருந்து குழந்தைகள் சொல்லித் தரும் பாடத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே போதும்...

  உங்கள் வருகையும், பாராட்டும் எனக்கு இன்னும் எழுதும் பலத்தைத் தருகிறது மேடம்.

  உடல் நலமாகி விட்டதா? எப்படியிருக்கிறீர்கள் இப்போது?

  ReplyDelete
 11. குழந்தைகள் உண்மையாய் உற்சாகமாய் சொல்லும்போது நாம் சட்டென லேசாகி போவது அருமையான அனுபவம் .

  ReplyDelete
 12. வணக்கம்

  20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு
  http://blogintamil.blogspot.com
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 13. எனக்கு அவன் முதன் முதலாக ரொம்ப பெரியவனாகத் தெரிந்தான். இருபது வருசம் வேலை பார்த்து விட்ட எனக்கு அவன் ஆசான் மாதிரி உயர்ந்து நின்றான்...../

  குழந்தைகள் என் அனுபவத்தில் நிச்சயம் உயர்ந்தவர்கள்தான் ..நம் ஆசான்கள்தான் ..அருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 14. மழைக்காக அரசு மருத்துவமனை எல்லாம் விடுமுறைன்னு சொன்னா என்ன ஆகும்? இந்த காய்ச்சல் வந்தவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தானே நீங்க இருக்கீங்க? நீங்களே இந்த மாதிரி சமயத்தில லீவு கேக்கலாமாம்மா?//

  பொறுப்பு வாய்ந்த குழந்தை. இப்படி ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் இருந்தால் நாடு நலம் பெறும்.
  இன்று வலைச்சரத்தில் வைடூரியமாய் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள்.
  மனோ அவர்களுக்கு நன்றி நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு.

  ReplyDelete