Friday, October 12, 2012

கண்ணா போற்றி! கிருஷ்ணா போற்றி!

எதையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த இனியன் அவன்.... இருக்கிறான் என்று பல முறை எனக்கு நிரூபித்தவன்.... எனக்குத் துணையாய் எப்போதும் இருப்பவன்....
அலைகடலில் துரும்பாய் நான் அல்லாடிய தருணங்களில் என்னை கை தூக்கி  அவன் கரை சேர்த்திருக்கிறான். அவனிடம் மட்டுமே அழுதிருக்கிறேன், அவனிடம் மட்டுமே ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறேன், அவனை மட்டுமே நம்பியிருக்கிறேன்.

அநீதிகள் நடக்கும் போது அங்கு நான் அவதரிப்பேன் என்றவன்,கண் முன் நடந்த, காது கேட்க நடந்த அநீதிகளின் போது மெளனமாய் நின்றதை பொறுக்க முடியாமல் நீ பொய் தானோ என்று அவனுடன் சண்டையிட்டு பேசாமல் இருந்தேன்...  என்றாலும் அவன் என் கூடவே இருப்பதாய் ஒரு திமிர் உண்டு எனக்கு. கடமையைச் செய், பலன் எதிர்பாராமல் என்றவன் அல்லவா அவன். என் கடமையை நான் சரி வர செய்கையில் அவன் கூட இல்லாமல் எப்படிப் போக முடியும் என்ற திமிராய் இருக்கலாம்.....
இதோ இன்று மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் என் முன் நின்று கள்ளச் சிரிப்பு உதிர்க்கிறான். நான் இருப்பதை உணர்கிறாயா என்று கேட்கிறான்.... அவனைக் கண்ட மாத்திரத்தில் உருகும் நான் அவன் எனக்கு பதில் சொல்லிச் சிரிக்கையில் உருகாமலா?

அவனை, என் கார் முகில் வண்ணனை, உள்ளம் கவர் கள்ளனை, உலகளந்த உத்தமனை, உணர்த்த முடியாத உன்னதனை மீண்டும் நமஸ்கரித்து, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன், எனக்கிருந்த அரைகுறை மலையாள அறிவின் துணை கொண்டு   மலையாளத்தில் இருந்து நான்  மொழிபெயர்த்த ஒரு பாடலை அவனுக்காக இங்கே பதிவேற்றுகிறேன்....
எனக்கு ஆர்வமாக இந்த பாடலை சொல்லிக் கொடுத்த கமலா அக்காவை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்......

------------------------------


அஞ்சன வண்ணனே ஸ்ரீதரனே கிருஷ்ணா
அஞ்சலி செய்துன்னை வணங்குகிறேன்....

ஆனந்தமாய்த் தோன்றும் வாசுதேவா கிருஷ்ணா
ஆணவம் எல்லாம் அகற்றிடுவாய்....

இகம்பரம் யாவிற்கும் அதிபதியே கிருஷ்ணா
இன்றே என்முன்னே நீ வந்திடுவாய்....

ஈரேழு லகுக்கும் ஏக நாதா கிருஷ்ணா
ஈடில்லா உன் புகழ் பாடுகின்றேன்....

உலகத்தார் போற்றிடும் கமலக்கண்ணா கிருஷ்ணா
உள்ளத்தில் நீ வந்தே வசித்திடுக...

ஊழி முதல்வனே உத்தமனே கிருஷ்ணா
ஊனமில்லா உள்ளத்தை தந்திடுவாய்.......

என் நெஞ்சில் நிறைந்துள்ள ஏக்கமெல்லாம் கிருஷ்ணா
எல்லாமும் உன் முன்னே சமர்ப்பிக்கின்றேன்.....

ஏழுமலை நாயகனே ஸ்ரீனிவாசா கிருஷ்ணா
ஏற்புடை பக்தியை எனக்கருள்வாய்.....

ஐஸ்வர்ய சுகங்கள் எத்தனையும் கிருஷ்ணா
ஐயமிட வேண்டியே நான் நிற்கவில்லை....

ஒப்பில்லா அழகனே மதுசூதனா கிருஷ்ணா
ஒயிலான உன்னுரு காணுவேனா

ஓங்கல் குழல் தரும் நாதத்தோடே கிருஷ்ணா
ஓங்கார ரூபன் நீ வந்திடுக...

ஒளதாரியம் கொண்ட அச்சுதனே கிருஷ்ணா
ஒளடதமாம் உந்தன் குணங்கள் போற்றி....

அரவிந்த கண்ணுடை அத்தனே நின்பதம்
அருளுக்கே ஏங்கி நான் அணைத்துக் கொண்டேன்....

கிருஷ்ணா முகில்வர்ணா கிருஷ்ணா முகில்வர்ணா
கிருஷ்ணா மலர்கண்ணா கை தொழுதேன்.....

கிருஷ்ணா ஹரே ஜெய கிருஷ்ணா ஹரே ஜெய
கிருஷ்ணா ஹரே ஜெய கிருஷ்ணா ஹரே...


(இப்போதும் இந்தப் பாடலை கேரளத்தில் கிருஷ்ணன் முன் நின்று பக்தர்கள் பாடுவது கேட்கத் திகட்டாத பரவச அனுபவம்) 

11 comments:

  1. அன்பின் கிருஷ்ண‌ப்ரியா...

    உங்க‌ள் புனைப்பெய‌ர்க் கார‌ண‌த்தை இந்த‌ப் ப‌திவு வெளிச்ச‌மிடுகிற‌து. மொழிபெய‌ர்ப்பென்னும் உன்ன‌த‌ம் உங்க‌ளிட‌மிருந்தும்...! ப‌க்தி இல‌க்கிய‌ங்க‌ள் தானே மொழிபெய‌ர்ப்பின் முன்னோடி! பாட‌லுக்கு முந்தைய‌ உங்க‌ள் முன்னுரை ஒவ்வொரு வ‌ரியும் மீண்டும் மீண்டும் வாசிக்க‌ச் செய்து நெகிழ்த்துகிற‌து. திட்ட‌மிட்டோ அனிச்சையாக‌வோ புர‌ட்டாசி ச‌னிய‌ன்று உங்க‌ள் கிருஷ்ண‌ லீலா எங்க‌ளுக்கு! தொட‌ர‌ட்டும் இம்முய‌ற்சி. உங்க‌ளின் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ளை அவ்வ‌ப்போது க‌ண்டுண‌ரும்போது இன‌ம் புரியா ப‌ர‌வ‌ச‌ம்.

    நாங்க‌ள் உங்க‌ வீட்டுக்கு வ‌ந்த‌ போது உங்க‌ நாத்த‌னாரும் ச‌கோத‌ரிக‌ளும் குழ‌ந்தைக‌ளும் கூடிக் கும்மிய‌டித்த‌ ம‌லையாள‌ப் பாட‌லும் நாவ‌டி இனிப்பாய் நினைவில். அதையும் ப‌திவீர்க‌ளா என்றேனும்...? ச‌கோத‌ர‌ மொழியின் அருமை பெருமைக‌ளை அறிய‌ அறிய‌ ஆன‌ந்த‌மே. உற‌வுக்கார‌க் குட்டிப்பைய‌னொருவ‌னிட‌ம் க‌ற்றுக்கொண்ட‌ ம‌லையாள‌ பிற‌ந்த‌நாள் குழ‌ந்தைப்பாட‌ல் ம‌ன‌ நீரோட்ட‌த்தின் மேலெழும்புகிற‌து.ம‌லையாள‌க் க‌ரையோர‌ம் ஒதுங்கியிருக்கும் எங்க‌ள் ம‌க‌ள் என்னென்ன‌ கொண்டு வ‌ந்து சேர்க்க‌ப் போகிறாளோ...!

    ReplyDelete
  2. அருமையான பாடல்... பரவசமடைந்தேன்...

    நன்றி...

    ReplyDelete
  3. வலைச்சரம் வழியே இவ்
    வாசலுக்கு வந்தேன்.
    தஞ்சை கவிதை என்று பார்த்த உடன்
    நெஞ்சு விம்மியது. நான் இருபது வருடங்கள்
    இருந்த ஊர் அல்லவா ?

    கிருஷ்ணனைப் பாடும் பாடலை
    யானும் ஒரு முறை சம்பிரதாய கீர்த்தனை மெட்டிலே
    பாடினேன்.
    ஆஹா என்ன சுகம் ! என்ன மன நிறைவு.!!

    உங்கள் அனுமதி இருந்தால் யூ ட்யுபில் போடுகிறேன்.
    வலை உலகில் காணும் கவிதைகளை, மனதிற்குப்பிடித்தவைகளை,
    கர்னாடக இசையில மெட்டமைத்து பாடுவது இக்கிழவனின் பொழுது போக்கு.
    இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை.

    எனது குரலில் இனிமை இருக்காது. இருப்பினும்
    எனது பரமனின் பால் எனக்குள்ள பணிவும் பக்தியும் தெரியும்.

    சுப்பு ரத்தினம்.
    www.movieraghas.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com
    www.arthamullavalaipathivugal.blogspot.com
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  4. ப்ரியா... உங்க‌ பாட‌லுக்கு யாராவ‌து மெட்டு போட்டு பாடினால் ந‌ன்றாயிருக்குமென‌ முத‌ல் வாசிப்பில் நினைத்த‌ போது என‌க்கு யார் நினைவு வ‌ந்த‌தோ அவ‌ரே உங்க‌ ப‌திவுக்கு வ‌ந்து சேர்ந்து விட்டார்!! எல்லாம் 'அவ‌ன்' செய‌ல்!! வ‌லைப்பூக்க‌ள் வாசிப்பில் அவ‌ரை அறிவேனெனினும் கேட்கும‌ள‌வு ப‌ழ‌க்க‌மில்லையே என்றிருந்தேன். கேட்காம‌லே கிருஷ்ண‌ன் கொடுத்து விட்டான் உங்க‌ ப‌க்தியை மெச்சி.

    ReplyDelete

  5. இந்த பாட்டை நீங்க இங்க கேட்கலாம்
    சுப்பு தாத்தா
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  6. To listen to this song
    Pl cut and paste this URL if the above does not work
    http://www.youtu.be/1suOs94jhY0
    if this also does not work
    say hare krishna hare rama then go to
    www.menakasury.blogspot.com
    which is subbu thatha's family blog.

    ReplyDelete
  7. அருமையான் பாடல் பகிர்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. அருமையான் பாடல் பகிர்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். VGK

    ReplyDelete
  9. சுப்பு அய்யா அவ‌ர்க‌ளின் குர‌லில் த‌ங்க‌ள் பாட‌லை இன்றுதான் கேட்டேன். வ‌ரிக‌ளை இர‌ண்டாவ‌து முறை அவ‌ர் பாடும்போது ந‌ம‌க்கு தியானிக்கும் ம‌ன‌ நிலை வ‌ருகிற‌து. தொலைபேசியில் உங்க‌ பார‌ம்ப‌ர்ய‌ முறையில் பாடிக்காண்பித்த‌தை ப‌திவேற்றினால் மேலுமொரு கோண‌த்தில் நிறைவ‌ளிக்கும் ப்ரியா.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வெகுநாட்கள் ஆயிற்று. கவிதைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு மீன் குழம்பு வைக்க போய்விட்டீர்கள் என்று நினைத்தேன் நல்லது. தஞ்சை கவிதைகளில் கிருஷ்ண தரிசனம். பாராட்டு . காட்டிய ஜோதிக்கு நன்றி. உலக தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.

    ReplyDelete
  11. அக்கா, பாடலுக்கு முன் இருந்த முன்னுரை என்னை மிகவும் கவர்ந்தது. அது எனக்கு பல விஷயங்களைச் சொல்லிற்று. அவனை உன்னுடன் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.


    ஐயா குப்பு வீரமணி அவர்களே, அக்கா வீட்டு மீண்குழம்பின் சுவை இன்னும் தங்கள் நாக்கைவிட்டு அகலவில்லையோ? கவிதை, குழம்பு இரண்டும் உங்களுக்குக் கொண்டாட்டம் தானே?

    ReplyDelete