Thursday, March 10, 2011

நழுவி விழும் வார்த்தைகள்

எனக்கான கடமைகள்
துயிலெழுப்ப
என் பொழுது புலர்கிறது.....

மனைவியாய், தாயாய்
பொறுப்புகள் வரிசைக் கட்டி நிற்க
என்னை
கேட்காமலேயே விரிகின்றன
என் பரபரப்பு இறக்கைகள்....

அகலத்திறந்த
சன்னல்கள் இருந்தும்
என்னை புழுங்க வைக்கின்றது
தினசரி என் திறமைகளை
வளர்க்கும் என் வீட்டு சமையலறை...

அழகோடும் ஒழுங்கோடும்
வீட்டை அமைக்கும்
என் விடா முயற்சி
எப்போதும் முடிகிறது
ஒழுங்கின்மையில்.....


பரபரப்பு குறையாமல்
என்னை வைத்திருக்கவே
விரும்புகிறது.....
அறிவை மட்டுமல்லாது
சுரணையையும் சில சமயம்
சுரண்டிக் கொள்கிற
அலுவலக வளாகம்....

வேண்டாம் என்று உதறி
ஓடி வர முடியாமல்
கைப்பையின் கம்பீரத்துக்கான

காரணியாய் நிற்கிறது அது....


இப்படி
எத்தனையோ காரணங்களுக்காக
ஒவ்வொரு பொழுதிலும்
எடுக்க வேண்டியிருக்கிறது
சில பல அவதாரங்கள்....


அத்தனை அவதாரங்களையும்
கச்சிதமாய் முடித்துவிட்டு
தூங்கப் போகும் முன்பாக
சமையலறைத் தொட்டியைத்
தேய்த்துக் கழுவுகையில்
எச்சங்களோடு சேர்ந்து 
நழுவி விழுகிறது 
என் 
கவிதைக்கான வார்த்தைகள்.... 


நன்றி; சௌந்தரசுகன்

7 comments:

  1. //வேண்டாம் என்று உதறி
    ஓடி வர முடியாமல்
    கைப்பையின் கம்பீரத்துக்கான
    காரணியாய் நிற்கிறது அது....//

    எல்லாவற்றுக்குமான அடிப்படையாகிவிடுகிறதோ இது...?!

    ReplyDelete
  2. அருமை.
    புகழ்ச்சி இல்லை.
    உண்மை.
    கண்ணில் நீர் கோர்கிறது....

    "என்னை புழுங்க வைக்கின்றது" - வேறு சொல் உபயோகபடுத்தி இருக்கலாம்...
    "பரபரப்பு குறையாமல் என்னை வைத்திருக்கவே விரும்புகிறது....." -- எது? வாக்கியம் முடியவில்லையே?
    best of the lot : "அறிவை மட்டுமல்லாது சுரணையையும் சில சமயம் சுரண்டிக் கொள்கிற அலுவலக வளாகம்...."

    ReplyDelete
  3. பணிக்கு செல்லும் சகோதரிகள் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் இந்த கவிதை என்னையும் விட்டுவைக்கவில்லை அருமை!!!!!!அருமை!!!!!!!

    ReplyDelete
  4. முன்னரே இதை நீங்கள் படிக்க விமர்சித்தாலும், அலுவல்கள் இன்னமும் அறிவையும் சுரணையையும் சுரண்டிக் கொண்டே இருப்பதால் கவிதையின் தேவை மீண்டும் படிக்கவே தூண்டுகிறது.

    ReplyDelete
  5. சமையலறைத் தொட்டியைத்
    தேய்த்துக் கழுவுகையில்
    எச்சங்களோடு சேர்ந்து
    நழுவி விழுகிறது
    என் கவிதைக்கான வார்த்தைகள்....
    சபாஷ்.

    ReplyDelete
  6. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
    ஞாயிற்றுக் கிழமையும்
    பெண்களுக்கில்லை

    இத எழுதினது யாருன்னு தெரியல ப்ரியா

    ReplyDelete
  7. @ இரா.எட்வின்...

    கந்தர்வனின் புகழ் மிக்க வைர வரிகள் தான் அது தோழர்...

    ReplyDelete