Thursday, July 7, 2011

ஊமை வலி........

கடிவாளத்தை இழுத்து குதிரையை நிறுத்துவதைப் போல
என் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினேன். 
குதிரைப்பயணம்  போல குதித்தபடி  இரு சக்கர வாகனத்தில்
 தினமும் வருவதே உடம்பை வருத்தும்
 அசதியைத் தருகிறது...அன்று காலையிலேயே 
மருத்துவமனைக்கு வந்திருந்த மக்கள் கூட்டம்
 அதிகமாய் பெரிய வரிசையாய் நின்றிருந்தனர்.
அந்த கூட்டத்தை பார்த்தவுடன் என் உடல் வலி
 என்னை பயமுறுத்திற்று. ஆனாலும் வேறு வழியில்லை...

இன்று கர்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனையும்,
மருத்துவமும் நடைபெறும் நாள்.
வளாகம் முழுவதும்
கர்ப்பவதிகள் மேடிட்ட வயிற்றோடும் கைகளில் குலுங்கும்
 கண்ணாடி வலையல்களோடும், தலை நிறைய பூவோடும்,
 ஒரு சிலர் பூவோடு செருகப்பட்ட வேப்பிலையோடும்
 வந்திருந்தனர். கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தம்
 சன்னமாக மெல்லிய இசையாய் அந்த வளாகத்தை
நிறைத்துக் கொண்டிருந்தது... கைகளில் வளையல்கள்
அணிவதும், அந்த கிணுகிணுக்கும் ஓசையும் எனக்கு
 மிகவும் பிடிக்கும்... இங்கே வந்திருக்கும் எத்தனைப்
பெண்களுக்கு அது பிடிக்குமோ தெரியவில்லை.
வளைகாப்பு என்பது ஒரு சடங்கு, சம்பிரதாயம்
 என்பதாலேயே இப்படி வளையல் அணிகிறார்கள்....

               மருந்துகள் வழங்கும் அறைக்குள் சென்று என்
 பணியை ஆரம்பித்தேன். ஒவ்வொருவராக ஆரம்பித்து
 மிக நீண்ட வரிசை நிற்க தொடங்கிற்று.... அந்த
 மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் பணிபுரியும்
இடம் என்பதால் எப்போதும் மருத்துவர்களுக்கு
 பஞ்சமில்லை. ஆங்காங்கு அமர்ந்து ஐந்தாறு மருத்துவர்கள்
 நோயாளிகளைப் பார்க்கத் துவங்க, மருந்து சீட்டுடன்
 எல்லா திசைகளில் இருந்தும் வந்து அவர்கள்
 வரிசையில் சேர ஆரம்பித்தார்கள்..அவர்களை விரைவாக
 அனுப்பும் மும்முரத்தில் நான் பரபரப்பாக இயங்கிக்
 கொண்டிருந்தேன். மாத்திரைகளை சாப்பிடும் முறையை
 சொல்லியபடியே நான் எடுத்துக் கொடுக்க,
 என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த
 அந்த நபர் கேட்டார்,
''எப்படிங்க சாப்பிடனும்? ''     
   "இப்பத்  தானே சொன்னேன்?"    
          "ஏன் , இன்னொரு முறை சொல்ல மாட்டீங்களா?"  
     "எவ்வளவு கூட்டமிருக்கு! உங்க ஒருத்தர் கிட்டேயே
 சொல்லிகிட்டிருக்க முடியுமா?"          
        
 "சொல்லணுங்க சொல்லணும். கவர்மென்ட்
 வேலைன்னா சும்மாவா? நாங்க நாலு முறை
 கேட்டாலும் சொல்லணும் தான், அலுத்துகிட்டா முடியுமா?"

எனக்கு பேச்சே வரவில்லை..... ரொம்ப அலட்சியமாக
பேசும் அந்த நபரை அடிக்க வேண்டும் போல கோபமாக
வந்தது. ஆனால் முடியாது... "இது மன நிறைவுக்காக
 மட்டும் செய்கிற வேலையில்லை. தேவைக்காக நீ
செய்கிற வேலை. மாதம் முடிந்ததும் கிடைக்கப் போகிற
 ஊதியம் உந்தித் தள்ள, எத்தனையோ இடர்களைத்
தாண்டி நீ ஓடி ஓடி செய்யும் வேலை. பொறுமையாய்
 இரு" என்றது மனசு. அமைதியாய் அடுத்த நபரிடம்
 சீட்டை வாங்கினேன்..
"அவங்களும் மனுசங்க
தானே? காலையிலேர்ந்து ஒத்த ஆளா எத்தனப்
 பேருக்கு பொறுமையா சொல்லி மாத்திரையைக்
கொடுக்குது? அதுகிட்டேப் போயி ஏந்தம்பி இப்படி பேசறே?"
என்று எனக்காகப் பரிந்தவளாய் சீட்டை நீட்டினாள்
 ஒரு பாட்டி. என் உடல் வலி, மன வலி எல்லாம் சேர்ந்து 
கண்கள் கலங்கிற்று. இது போன்ற கரிசனப் பேச்சு தான்
 மீதமிருக்கும் பயணத்துக்கான எரிபொருள் என்றுத்
தோன்றியது. மீண்டும் என் பணியில் கவனமானேன்.

             சன்னலுக்கு வெளியே நீண்டிருந்த வராண்டாவில்
 ஒரு பெண்ணிடம் மருத்துவர் அவளைப் பற்றிய 
குறிப்புகளைக் கேட்டு எழுதிக் கொண்டிருந்தார்.
அந்த பெண் அமர்ந்திருக்க, அருகிலேயே அவளது கணவன்.  
     "எத்தனாவது பிரசவம்மா?"          
    "இது தான் முதல் பிரசவம்"            
     "இப்பத்தான் காட்ட வர்றியா?"           
        "ஆமா"                       
   "கடைசியா குளிச்சத் தேதி சொல்லும்மா " 
அவள் பதிலேதும் சொல்லாமல் விழித்தாள்.  
 "என்னம்மா புரியலையா? கடைசியா தீட்டுக்
 குளிச்சத் தேதி சொல்லும்மா" அவள் நிமிர்ந்து
கணவனைப் பார்த்தாள்.
 "என்ன தேதி?"                 
  'ஜனவரி பதினெட்டு" என்றான் அவன் பட்டென்று.
 அவள் வெட்கமாய்ச் சிரித்தாள்.  
 "ஏம்மா, ஒனக்கு தெரியாதா? நல்லப் பொண்ணும்மா.. 
சரி, ஏன் இத்தன நாளா டெஸ்ட் பண்ணிக்க வரல?
இது என்ன கையில வச்சிருக்க?"                     
  " இல்ல, கர்ப்பமா இருக்கிறவங்களுக்கு ஏதோ
 பணம் உண்டாமே, அதை வாங்கத் தான் பாரம்.." 
 "அதானே பார்த்தேன். அந்த பணம் வாங்கத் தானே
கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு வருவீங்க... சரி சரி,
 எழுந்திரு, போயி நர்சம்மா கையெழுத்தெல்லாம்
  வாங்கிட்டு வா"   அவளை அனுப்பிவிட்டு அடுத்த
 பெண்ணிடம் கவனம் திருப்பினார் மருத்துவர்...    
  
                          
மருத்துகள் வாங்கும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவில்
ஒரு பெண் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். தலைக்கு
 மேலே மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. ஆனாலும்
அவள் அருகில் நின்றபடி, அவள் கணவனாயிருக்கும், ஒருவன் 
சின்ன விசிறியால் விசிறிக் கொண்டிருக்க, ஒரு பெண்மணி 
டம்ளரில் வைத்து எதையோ அவளை குடிக்கச் சொல்லிக்
கொன்டிருந்தாள். மருந்துகள் வாங்க கூட்டம் இல்லாததைக்
 கண்டவனாய், அவன்   என்னிடம் மருந்துச் சீட்டுடன் வந்து
 நின்றான். சீட்டை வாங்கிப் பார்த்தேன்.
'ஏன் வாந்தி அதிகமா இருக்கா?'
'ஆமாங்க, எதுவுமே சாப்பிட மாட்டேங்குது. வாயில எச்சியூறுதுன்னு சொல்லுது'
ரொம்பவும் கவலையாய் பேசினான்.
'நீங்க யாரு அந்த பொண்ணுக்கு?'
'அது ஏன் wife ங்க   '  அவன் திரும்பி அவளைப் பார்த்து
எதோ சொல்வதை கவனித்த அந்தப் பெண் மெல்ல எழுந்து என்னிடம் வந்தாள்.
'என்ன மாத்திரை தந்திருக்காங்க?' என்றாள் என்னைப் பார்த்தபடி.
'ஏன் வாந்தி வருதுன்னு சொன்னியா? அதுக்குத் தான்
மாத்திரை தந்திருக்காங்க' என்றேன் நான்.
அவள் பாவமாய்ப் பார்த்தாள். மெல்லிய உடம்பு. கர்ப்பம்
உண்டான பெண்ணின் உடம்புக்குரிய பூரிப்பு எதுவில்லாத
 உடம்பு. முகத்தில் ஒரு குழப்பம்.
'எத்தன மாசம்மா இது'  என்றேன்
அவள் எதுவுமே பேசவில்லை.
'மூணு மாசம் ஆவுதும்மா, நாள் கணக்குக்கு அறுபத்தஞ்சு
 நாள் ', எனறாள் கூட நின்றவள்.
'நீங்க யாரும்மா?'
'நான் இந்த பொண்ணுக்கு மாமியரும்மா. கல்யாணமாகி
 ரெண்டு வருஷம் கழிச்சு இப்போத்தான் உண்டாயிருக்கா, எப்ப பாத்தாலும்
ஒக்காளிச்சுகிட்டே இருக்கா . சரியா சாப்பிட்டாத்  தானேம்மா
வயித்து வாரிசு நல்லபடியா வளரும். செத்தப் பாத்து நல்ல
மாத்திரையாக் கொடும்மா, இந்த வாந்தி நிக்கறதுக்கு'
நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். யாரைப் பற்றியோ
பேசுவதைக் கேட்பவள் போல கேட்டுக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்து
'உள்ளே வரவாக்கா ?' எனறாள்.
அவள் என்னிடம் எதோ தனியாக பேச நினைக்கிறாள் என்று புரிந்தது.
'சரி அந்த பக்கமா வா' என்றேன்.
'நான் மாத்திரைக் கொடுத்து புத்தி சொல்லி அனுப்பறேன். நீங்க
உக்காருங்க' என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அதற்குள் சேர்ந்து
 விட்டிருந்த கூட்டத்தை அனுப்பத் தொடங்கினேன்.
உள்ளே நுழைந்து பயந்த கோழிக் குஞ்சைப் போல ஒடுங்கி நின்றுக்
 கொண்டிருந்தவள் அருகில் போனேன். மெல்ல அவள் தோளைத் தொட்டேன்.
'பேர் என்னம்மா?'
'மாதவி'
'சொல்லும்மா, என்ன பண்ணுது?'
அவள் கொஞ்சம் குழப்பமாய் சன்னல் பக்கமாய் அவள்
கணவனையும் மாமியாரையும் பார்த்தாள்.
பிறகு மெதுவாய் கேட்டாள். 'ஏன் க்கா இந்த வாந்திக்காக
 மாத்திரை எழுதிருக்காங்கன்னு சொன்னீங்களே, ரொம்ப பவரான மாத்திரையா?'
'ஏன், பவர் இருந்தா தானே வாந்தி நிக்கும்? ஏன் இப்படி  கேக்கறே?'
'இல்லக்கா, அது வந்து,....எனக்கு வாந்தி எதுவும்
 வரல...அதனால் தான் இந்த மாத்திரை சாப்பிடலாமா, கூடாதான்னு...'
எனக்கு சட்டென்று எரிச்சல் வந்தது.
'ஏம்மா, வாந்தி வரலேன்னா டாக்டர் கிட்டே எதுக்கு அப்படி சொன்னே?'
என் குரல் உயர்ந்ததும் பதறினாள். 'அக்கா, சத்தம் போடாதீங்க,
அவங்களுக்கு கேட்டுடப் போகுது'
நான் ஆச்சரியாமாய் அவளைப் பார்த்தேன். என்னாயிற்று
 இந்தப் பெண்ணுக்கு..? 'என்னம்மா பிரச்சனை,? தெளிவாப் பேசு.'
அவள் என்னை நிமிர்ந்து தெளிவாய்ப் பார்த்தாள். சற்றுமுன்
 பார்த்த கோழிக்குஞ்சு மாதிரியில்லாமல், பலமான கால்களை
 தரையூன்றி நிற்கும் கழுகைப் போல சட்டென அந்த உடம்பில்
 ஒரு அழுத்தம், ஒரு இறுக்கம் வந்தது.
'அக்கா, கல்யாணமாகி ரெண்டு வருஷமா எனக்கு குழந்தை
உண்டாகலன்னு இவங்க ரெண்டு பெரும் என்ன  எப்படி படுத்தி
வச்சாங்கன்னு தெரியுமா? இப்ப குழந்தை உருவாயிடுச்சுன்னு
தெரிஞ்சதும் ஒரேடியா என்னை கவனிக்கிறாங்க. அதான்,
சும்மாவாச்சும் அவங்களை பதற வச்சுகிட்டிருக்கேன்.'
அவள் சொன்னதும் எனக்கு பகீரென்றிருந்தது. இவளையா
 பாவமாய் இருக்கிறாள் என்று நினைத்தோம் எனத் தோன்றியது.
'அது தான் உன்னை நல்ல கவனிச்சிக்கிறாங்கன்னு சொல்றியே...
அப்புறம் எதுக்கு அவங்களை தவிக்க விடறே., நல்லா சாப்பிட
 வேண்டியது தானே? அது தானே உனக்கும் நல்லது. எதுக்கு பொய்யெல்லாம்?'
'இல்லக்கா எல்லாம் புள்ளை பெத்துக்கற வரைக்கும்  தானே..!
 இவங்களுக்கு நான் புள்ள பெத்து தர்ற மெஷினுக்கா...இந்த
பத்து  மாசமும் எனக்கு விழுந்து விழுந்து சேவை தான்
 பண்ணட்டுமே, தவிக்கட்டுமே, என்ன இப்போ...? நான் எவ்வளவு
 வேதனைப் பட்டேன் இவங்களால.? தவிக்கட்டும் விடுக்கா...
 நீ சொல்லுக்கா, இதெல்லாம் ரொம்ப பவரான மாத்திரையா?
 நான் சாப்பிட்ட ஏதும் தப்பாயிடுமா? புள்ளைக்கு எதுவும்
ஆயிடக் கூடாதுக்கா. அதான் உன்கிட்ட தனியா கேக்கறேன். சொல்லுக்கா..'
சன்னமான குரலில் மிகத் தெளிவாக அவள் பேசினாள். அந்த
 மெலிந்த பெண்ணுக்குள்  இருந்த இரும்பு மனம் அவள் கண்களில் தெரிந்தது.
'என்னம்மா சொல்லுது' என்றபடி அவள் மாமியார் உள்ளே வர, அவள்  
மீண்டும் கோழிக்குஞ்சாய் உருமாறினாள். பதில் சொல்லி
அவர்களை அனுப்பிய பிறகும் வெகு நேரம் நான் சிலையாகிப் போயிருந்தேன்.....

நன்றி; சௌந்தர சுகன்

9 comments:

 1. நாம் ஒருவரைப் பார்த்து பாவம் என்று கூட சொல்ல முடியாத சூழல் தான் நிலவுகிறது. நாகரீகம் கருதி படித்த பெண்கள் யோசித்து செய்வதற்குள், சொல்வதற்குள் தயங்கும் சமயத்தில் படிக்காத பாமர பெண் என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இயல்பாக தங்களை வெளிப்படுத்தி கொள்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது ,மனித மனங்கள் அறிவுக்கு புலப்படாத ஒன்றாக இன்னும் இருப்பதால் இப்படியான மனிதர்கள் நமக்கு நல்ல அனுபவமாகிறார்கள்.

  ReplyDelete
 2. மெல்லிய மனம் இரும்பாவது அனுபவங்கள் ஏற்படுத்திய வலியால்தானே?

  நல்ல வன்மையான எழுத்து! வளர்ந்து செழிக்க அன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 3. @மணிச்சுடர்,
  உங்கள் கருத்துரைக்கு நன்றி... நீங்கள் சொல்வது போல படித்த பெண்களுக்கு இல்லாத தைரியம், சமூகத்தை எதிகொள்ளும் பக்குவம் எல்லாம் படிக்காத பெண்கள், பாமரர்கள் என்று நாம் நினைக்கும் பெண்களுக்கு இருக்கிறது.... அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.....

  ReplyDelete
 4. @மனோ சாமிநாதன்
  தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.....
  மெல்லிய மனம் இரும்பாகத் துணிந்து விட்டால் அதனை எதிர்கொள்ளுவது மிகவும் கடினம் என்பது என் அனுபவப் பாடம்.....

  ReplyDelete
 5. @ மனோ சாமிநாதன்,

  தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். வளர முயல்கிறேன்.....

  ReplyDelete
 6. இது போன்ற கரிசனப் பேச்சு தான்
  மீதமிருக்கும் பயணத்துக்கான எரிபொருள் என்றுத்
  தோன்றியது. மீண்டும் என் பணியில் கவனமானேன்//

  அனுபவங்களே ஆசானாய் ..பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. சற்றுமுன்
  பார்த்த கோழிக்குஞ்சு மாதிரியில்லாமல், பலமான கால்களை
  தரையூன்றி நிற்கும் கழுகைப் போல சட்டென அந்த உடம்பில்
  ஒரு அழுத்தம், ஒரு இறுக்கம் வந்தது. //

  இய‌ல்பான‌ க‌தையோட்ட‌த்திலும் இந்த‌ இட‌த்தில் ப‌ல‌ம் சேருகிற‌து ப்ரியா. சிக்க‌ன‌ வார்த்தைக‌ளிலான‌ உங்க‌ள் உரையாட‌ல் ம‌ன‌ம் க‌வ‌ர்கிற‌து. நாங்க‌ள் நீங்க‌ளாகும் விந்தையை செய்ய‌ அவ‌ற்றின் உயிர்ப்பு போதுமான‌தாயிருக்கிற‌து. அப்பெண்ணின் க‌ண்ணோட்ட‌த்தில் அவ‌ள‌து நிலையில் அவ‌ளின் செய‌ல் நியாய‌மாக‌வே ப‌டுகிற‌து.

  பெண் என்ப‌த‌ற்காக‌வே இவ்வுல‌க‌ம் காய‌ப்ப‌டுத்தும் அடிமைப்ப‌டுத்தும் அடாவ‌டி செய்யும் வாய்ப்புக‌ளைத் த‌வ‌ற‌விடுவ‌தேயில்லையே. ச‌க‌ பெண்ணின் வ‌லி புரிய‌ உங்க‌ளுக்கும் இவ்வுல‌கிட‌மிருந்து அவ்வ‌ப்போது கிடைக்கும் நிமிட்ட‌ல்க‌ளின் வேத‌னை உறைந்து தானே இருக்கிற‌து. இப்ப‌டியான‌வ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ற்காத்து வாழ‌ த‌ந்திர‌ங்க‌ளும், தைரிய‌ம் கொஞ்ச‌மும், சுய‌ம‌திப்பீட்டில் த‌ன்னிலை உண‌ர்த‌லும் அவ‌சிய‌மாகிற‌து. ய‌தார்த்த‌த்தினுள் பொதிந்திருக்கும் உண்மையின் சூடு த‌ணிவ‌தாயில்லை.

  எழுதுங்க‌ள்... ம‌ன‌சைக் கீறி ர‌ண‌மாக்கிய‌வை எல்லாம் எழுதுகோலின் முனைவ‌ழிக் க‌சியும் ம‌சியே ம‌ருந்தாக‌...!சுக‌னில் ப‌டித்த‌வுட‌னேயே தொட‌ர்பு கொள்ள‌ த‌டைசெய்த‌ சூழ‌லே காத்திருப்பின் காத்திர‌த்தில் ஒதுங்கி வ‌ழிவிட்ட‌து இன்று.

  ReplyDelete
 8. சில நேரங்களில் நாம் சந்திக்கும் நபர்கள் சின்ன சின்ன உரையாடல்களில் நம்மைப் புரட்டிப் போட்டு போய் விடுகிறார்கள்.
  இது ஒரு கதை போல அல்லாமல் அப்படியே நிஜமாய் உயிர் கொண்டு நிற்கிறது. அனுபவம் சார்ந்த எழுத்துக்குத் தான் இந்த வலிமை உண்டு.
  நேசம் என்பதைத் தொலைத்த மானுடம் இப்படித்தான் மனசுக்குள் சின்னதாய் பெரியதாய் வன்மம் வைத்து அலையுமோ..
  வாசிக்கும் போது அவள் வீட்டார் அவளைப் புரிந்து கொண்டாடினால் அங்கு சுநாதம் ஒலிக்குமே என்கிற ஏக்கம் வருகிறது..

  ReplyDelete
 9. ஆழ்மனதில் பதுங்கியிருக்கும்
  பழி வெளிப்படும் தருணமும்
  தன்னை ஆண் மகனாய் நிரூபிக்கும்
  அத்தாட்சி சான்றாய் இருக்கும்
  பெண் உடல்
  எதிர்கொள்ளும் வலியும்
  யதார்த்தமாய் வெளிப்பட்டுள்ள கதை.
  எழுத்தைக் கைப்பற்றக் கற்றுக்கொண்ட தோழி
  கொஞ்சூண்டு வர்ணனையிலும், அவதானிப்பிலும்
  கவனம் கொண்டால் ‘பச்சக்’கென்று
  சிறந்த பெண் எழுத்தாளர் பட்டியலில் ஒட்டிக் கொள்வாய்.
  வாழ்த்துக்கள் தோழி!
  - கவிஞர் அமிர்தம் சூர்யா,
  (துணை ஆசிரியர் - கல்கி வார இதழ்.)

  ReplyDelete