Wednesday, December 15, 2010

சந்தித்த வேளையில்....

கண்களை கூராக்கி அவள் மீண்டும்  பார்த்தாள்.  அவன் தானா? இல்லை, அவள் கண்கள் அவளை எப்போதும் ஏமாற்றியிருக்கவில்லை. அவனேதான். அதே இறுக்கமான முகம். சற்றே கறுத்த உதடுகள். சுருண்ட தலைமுடி. நீண்ட கைகளும், கால்களும். சற்றும் பருமன் ஏறாமல் அப்போது பார்த்த அதே உடல் வாகு. தலைமுடி நரைத்திருக்கிறதா என்று கவனித்தாள். இல்லை. பல முறைகள் அவள் ரசித்த அந்த சுருண்ட முடி நரைத்திருக்கவில்லை.

அந்த குட்டி அறையில் இருந்து வெளியில் தெரியும் தூரம் குறைவானதாக இருந்தது.  இன்று நிறைய கூட்டம். அந்த கூட்டத்தில் அவன் அவள் கண்களிலிருந்து  மறைந்து போனான். துழாவித்தேட இயலாதபடிக்கு
 வேலையின் கனம் அழுத்திற்று. மனசுக்குள் மட்டும் அந்த உருவம் உறைந்து நின்றது. எதற்கு வந்திருப்பான்? உடம்பு சுகமில்லையோ? போய்விட்டிருப்பனோ? பார்க்க முடியுமா மீண்டும்?  கேள்விகள் சுழன்றுகொண்டிருந்தது.

கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம் அது. கடந்த ஒரு வருடமாக பல கிராமங்களிலும் நடத்தப்பட்டு, இன்று இந்த கிராமம். நேற்று இந்த ஊரின் பிரதான சாலையில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு வந்து இறங்கியபோதே மனம் அவனை நினைக்க ஆரம்பித்தது. மனதின் ஆழத்தில், வெகு ஆழத்தில் போய்விட்ட அவன் நினைவுகளை மெல்ல மெல்ல மேலே கொண்டுவந்தது.  நேற்று ஆயத்த வேலைகளை செய்துவிட்டு, முகாமிற்கு தேவையான அறைகளையும் தயார் படுத்திவிட்டு அவளும் குழுவினரும் மாலையில் திரும்பிவிட்டனர். இன்று காலை 8 மணி முதலே மக்கள் திரளாக வந்துகொண்டிருந்தனர்.  மருந்துகளை வழங்கும் பொறுப்பு அவளுக்கு. அவளுடன் ஆண்களும் பெண்களுமாய் நால்வர் உடனிருந்தனர்.


ஆயிரம் கைகளை நீட்டிய சூரியனைப்போல சன்னல் வழியே மக்கள் தெரிந்தனர். சன்னலில் தெரிந்த எல்லா இடத்திலும் கைகளை நீட்டியபடி, எல்லோருமே ஏதோ ஒரு அவசரத்தில், ஏதோ ஒரு வேகத்தில் நின்றனர். "இதக்குடும்மா..." , "இதக்குடுங்க....." என்றபடி பல குரல்கள்.  அவர்களை அமைதிப்படுத்த முயல்வதோ, ஒழுங்காக நிற்கசெய்வதோ இயலாத காரியம் என்று புரிந்தவர்களைப்போல இவர்கள் ஐவரும் பரபரவென்று மருந்துகளை வழங்கியபடி இருந்தனர். 


இரண்டும், நான்கும், மூன்றுமாக பலவிதமாக வெட்டி வைக்கப்பட்டிருந்த, பலவித வண்ணங்களில் இருந்த மாத்திரைப் பெட்டிகளில் அவர்களது கைகள் மாறி மாறி அலைந்தபடி இருந்தது. கண்கள் சீட்டுகளைப் பார்ப்பதும், கைகள் மாத்திரைகளைப் பொறுக்குவதும், உண்ணும் விதம் பற்றிய குறிப்புகளை வாய் சொல்லுவதுமாக ஒரு இடைவிடாத பரபரப்பு.

இந்த பரபரப்புக்கு நடுவில் நிமிட நேரம் நிதானித்து அவனைக் கண்டுபிடித்த அவளால் அவனை தொடர முடியவில்லை. மனம் தேங்கி நின்றது.

0-0-0-0-0-0-0-0


கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவள் ஒரு இளம் தேவதை.  யாரும் அவளை தேவதை என்று சொன்னதில்லை. என்றாலும் அவள் தன்னை அப்படித்தான் நினைத்துக் கொள்வாள். கண்ணாடியின்  முன் நின்று அதில் தெரியும் அவளது பிம்பத்துடன் பேசிக்கொள்வாள். வெண் பஞ்சு மேகங்களின் ஊடே, மிகவும் அழகான ஒரு ராஜகுமரனுடன் தானும் சிறகு விரித்துப் பறப்பதைப்போல கற்பனை செய்து கொள்வாள்.  பேரழகி இல்லையென்றாலும் அழதிதான் அவள்.

அவள் இருந்த அந்த சிறிய கிராமத்தில் இருந்து ஒரு மணிநேரம் பஸ்ஸில் பயணித்து பின் ஒரு இருபது நிமிடம் நடந்துதான் கல்லூரிக்குச் செல்வாள்.  அந்த இருபது நிமிட நடையென்பது மிகப்பல கல்லூரி மாணவிகள் அவர்களது சௌகரியத்துக்காக செய்துகொண்ட விஷயம்.  அந்த தூரத்தை கடக்க பேருந்து இருந்த போதும், அந்த ஒயிலான நடை அவர்களுக்குப் பிடித்திருந்தது.

தூரத்தில் இருந்த ஆண்கள் கல்லூரியின் மாணவர்கள் பத்தடி தள்ளி பின்னால் நடந்து வர, ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேவதையாக எண்ணிக்கொண்டு நடக்கும் கனவு நடை அது.

அவளது ஊரில் புறப்படும் பேருந்து அரைமணி நேரத்திக்குப்பிறகு வந்து சேரும் இடத்தில் அவன் ஏறுவான். அதற்கு முன்பான நிறுத்தங்களில் அவனது நண்பர்கள் ஏறியிருப்பர்கள். இவன் ஏறியதும் பேருந்து களை கட்டத்தொடங்கும்.

"டேய் ரமேஷ், உன் ஆளைப் பாத்தியா? ஏண்டா உம்மென்று இருக்கே? எப்பதாண்டா உன் லவ்வ சொல்லுவ" என்பது போன்ற வசனங்களால் பேருந்து குலுங்கும். உடைகளைப் பற்றிய வர்ணனையும், கையில் இருக்கும் புத்தகங்களைப்பற்றிய விமர்சனமும் அவர்கள் குறிப்பிடுவது தன்னைத்தான் என்று தெரிந்து அவள் சில்லிட்டுப் போவாள்.  அருகிருக்கும் தோழிகளும், சீனியர் தோழிகளும் கண்ணடித்து 'அப்படியா' என்று கேட்கும்போது பயமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.  'சும்மா இருக்க மாட்டீங்க' என்று கோபமாக கேட்பாள்.  ஆனால் உள்ளுக்குள் இவனாய் இருக்குமோ அந்த ராஜகுமாரன் என்று சிலிர்ப்பாய் இருக்கும்.

கோபமாய் பார்ப்பது போல் திரும்பி அந்த ரமேஷைப் பார்ப்பாள். லேசாக சுருண்ட தலைமுடியும், அழுத்தமாக மூடிய உதடுகளுமாய் பாவமாய் இவளை பார்த்தபடி நிற்பான். சட்டென கண்களை திருப்பிக்கொள்வாள்.  அதுதான் காதல் பார்வையா...இல்லையே, தன் கற்பனை ராஜகுமாரனின் பார்வை போல் இல்லையே.... மனசு விலகிப் போகும்.

பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்கத்துவங்கும் போது பின் தொடர்ந்து வரும் ரமேஷும் நண்பர்களும் அவள் காதுபட கவிதைகளை வாரியிறைப்பர். ரமேஷின் குரல் எப்போதாவது தான் ஒலிக்கும்.  அவனை உசுப்பும் நண்பர்களின் குரல் தான் வலுவாயிருக்கும். 

பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பேசத்துவங்கினர்.  அவளை காதலிப்பதாய் அவன் சொன்ன வார்த்தைகளில் அவள் உருகியிருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.  அந்த பேசாத உதடுகளை, சுருண்ட முடியை, அதிகம் உணர்வுகளை காட்டாத பாவமான விழிகளை நேசிக்கத் துவங்கியிருந்தாள். தினமும் இருபது நிமிட நடையும், அங்கே நின்று சில நிமிட பேச்சுமாக அவளது காதல் வளர ஆரம்பித்தது. அப்படித்தான் அவள் எண்ணிக்கொண்டாள்.

மேலே படிப்பதற்காக அவள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. வாரக்கணக்கில்  'போகாதே மீனா' என்றபடி அழுத அவனைப் பார்த்து அவளுக்கு பாவமாக இருந்தது. ஆனால் அவளுக்கு படிக்க வேண்டும், வேலைக்குப்போவதும்,  சம்பாதிப்பதும் அவள் வாழ்வின் குறிக்கோளாயிருந்தது.

"நீங்கள் நன்றாக படிங்க ரமேஷ், சீக்கிரம் வேலை தேடுங்க, நான் படிப்பு முடிச்சதும் வீட்டுக்கு வந்து பேசுங்க", என்று தைரியம் சொன்னாள்.படிப்புக்காக அவனை பிரிந்து போனாள்...

பல மாதங்கள் அவனிடமிருந்து கடிதங்கள் வந்தது.விடுதியின் வார்டன் படித்துவிட்டுதான் தருவார் என்பதால், ரமா என்ற பெண் பெயரில் கடிதம் எழுதுவான். நீ இல்லாமல் தவிக்கிறேன் என்பது போன்ற கடிதங்கள்.  அவன் படிப்பிலோ, வேலையிலோ கவனமின்றி இருப்பதாக அவள் கவலைப்பட்டாள். நிறைய அரியர்ஸ் வைத்தான். வேலை தேடாது வெறுமனே சுற்றியலைந்தான்.  அவனை கண்டித்து அவள் எழுதிய கடிதங்களை அவன் ரசிக்கவில்லை.மெல்ல கடிதம் வருவது குறைந்து போயிற்று. வேலை தேடுங்கள் என்று இவள் அடிக்கடி சொன்னதால், 'அவளுக்கு பணம் தான் தேவை' என்று அவள் தோழியிடம் குறைபட்டுக்கொண்டது பின்னாளில் தெரிந்தது.

கால ஓட்டத்தில் பல இரவுகள் கண்ணீராகிட, மெல்ல மாறி அவர்கள் பிரிந்தார்கள். தூசியைப் போல எடுத்து எறிந்துவிடாமல், யாரும் பார்க்க வேண்டாத பரிசைப்போல அவன் நினைவை மனதின் ஆழத்தில் புதைத்தாள்.  வேலை தேடினாள். கவிதைகள் எழுதினாள். மனதை திசை திருப்பினாள்.  வேலை கிடைத்தது. பலப்  பல நண்பர்கள், பலவிதமான அனுபவங்கள். திருமணம் முடிவானது.  மறக்காமல் அவன் முகவரிக்கு பத்திரிக்கை அனுப்பினாள்.  'யார் அந்த ரமேஷ்?'- தம்பி கேள்வி கேட்டான். 'பழைய நண்பன்' என்று மட்டும் பதில் சொன்னாள்.  அவனுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று தெரிந்துகொள்ள இயலவில்லை. அவனும் இவள் திருமணத்துக்கு வரவில்லை.  நிழலாய் தெரிந்துகொண்டிருந்த முகம் மறைந்து போயிற்று.
-0-0-0-0-0-0-0-0


மதிய சாப்பட்டுக்கு பிறகு கூட்டம் குறைய ஆரம்பித்தது. அவள் கண்கள் இன்னமும் அவனை தேடியபடியே.....

அடுத்து இருந்த இரத்தப்பரிசோதனைக்கான அறையில் நீண்டிருந்த வரிசையில் அவன் தெரிந்தான். இனி அவனை மீண்டும் தேடும்படி ஆகிவிடக்கூடாது என்று முடிவு செய்தவளாய், அருகிலிருந்தவர்களிடம்,  "வந்துடறேன், கொஞ்ச நேரம் பாத்துக்கங்க"  என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

அவன் அறைக்குள் போய் வெளியே வந்ததும், அருகில் போனாள். "ரமேஷ்,நல்லாருக்கீங்களா? " அப்படி அருகில் போய் கேட்டவுடன், அவன் அவளை எதிர்பார்த்தவன் போல அமைதியாய் நின்றான்.  "கொஞ்சம் பேசலாமே" என்ற அவளது வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாய்  வந்தான்.

அதிகம் நடமாட்டம் இல்லாத ஒரு வராண்டாவில் நின்றனர். அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்கள் அவளை நேராக பார்க்க தயங்கி நிலம் பார்த்தது.

"எப்படி இருக்கீங்க ரமேஷ்?"

"நல்லா இருக்கேன், நீங்க?" - உயிரில்லாத குரல்.

அவள் அவனை அளந்துவிடுபவள் போல் பார்த்தாள்.அவன் தோற்றமும், உடையும் அவன் செழிப்பாக இல்லை என்பதை உணர்த்திற்று.  அந்த பாவமான விழிகள் இன்னும் பாவமாக ஜீவனின்றி தெரிந்தன்.

"எங்க வேலை பாக்குறீங்க ரமேஷ்?"

"இந்த ஊர்லதான், ரேஷன் கடைல இருக்கேன்."

"கல்யாணம் ஆயிடுச்சா?"

"ம்.. மூனு பொண்ணுங்க, மூத்தவ பத்தாவது, அடுத்தது எட்டாவது, ஆறாவது. உங்களுக்கு?"

"ரெண்டு பிள்ளைங்க, மூத்தவ அஞ்சாவது, சின்னது கைப்பிள்ளை". ஆக, நமக்கு முன்பே இவனுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று மனம் அந்த சூழலிலும் கணக்கு போட்டது.  "என்ன பண்ணுது,  ஏன் இன்னைக்கு வந்திருக்கீங்க?"

அவன் சரேலென்று நிமிர்ந்து வினாடி நேரம் அவளைப் பார்த்தான். சட்டென கண்கள் பூமியைப் பார்த்தது.  "சும்மாதான், உடம்பை செக்கப் பண்ணிக்கலாம்னு வந்தேன்".

"என்னை எப்பயாவது  நினைப்பீங்களா ரமேஷ்?" அவளுக்கே அந்த கேள்வி விநோதமாயிருந்தது.ஆனாலும் அவன் பதில் அவளுக்கு தேவையாய் இருந்தது.

அவன் சில விநாடிகள் மௌனமாய் இருந்தான்.  "அதெல்லாம் தப்பு, மறக்க வேண்டியது, நினைக்கக் கூடாது". அந்த இறுகிய உதடுகள் மீண்டும் இறுக்கமாய் மூடிக்கொண்டன.

இருவரும் மௌனமாய் நின்றனர்.

"சரிங்க, நான் கிளம்பறேன், உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்" என்றபடி அவளைப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. அவளுக்கும் கண்ணீர் திரையிட்டது.

"சரி ரமேஷ், போயிட்டு வாங்க." மார்புக்கு குறுக்கே கட்டிய கைகளை பிரிக்காமல் தலையசைத்தாள். 

ஒரு கையால் லுங்கியைப்பற்றியபடி அவன் நடந்து மறைவதை பார்த்தபடி சற்றுநேரம் நின்றாள். காரணம் புரியாத ஒரு பெருமூச்சு ஏற்பட்டது. மீண்டும் நடந்து தன் அறைக்கு வந்தாள்.

"என்ன மீனா, யார் அது? இந்த கிராமத்திலேயும் நண்பர்களா?" சகாக்கள் கேலி பேசினார்கள். 

"அது அப்படியில்லை,  மீனாவோட பழையகால சைட் போல இருக்கு, மலரும் நினைவுகள் போல" என்று சிரித்தாள் சாந்தி.

மீனா மெல்ல சிரித்தாள் பதில் ஏதும் கூறாமல். மனது சொன்னது 'ஆம் முதற் காதல்' என்று.


 (நன்றி..சௌந்தர சுகன்)

1 comment:

  1. நெஞ்சம் உருகிக் கண்ணீராய்க்கசிய வைத்த கற்பனைப்பாத்திரங்களின் உண்மைக்கதை......

    "நீ இல்லாமல் தவிக்கிறேன் என்பது போன்ற கடிதங்கள். அவன் படிப்பிலோ, வேலையிலோ கவனமின்றி இருப்பதாக அவள் கவலைப்பட்டாள்" - கண்திறக்கும் வரிகள்........ நன்றி....... :-)

    ReplyDelete